எளிய கற்பனைகள்.. உரிய தருணங்கள் | இது நம் வகுப்பறை சமூகம் 11

எளிய கற்பனைகள்.. உரிய தருணங்கள் | இது நம் வகுப்பறை சமூகம் 11
Updated on
2 min read

பாண்டியன் ஒரு வாரமாகப் பள்ளி செல்லவில்லை. ஒரு பயிற்சிக்குச் சென்றிருந்தார். தமிழ் வாசிப்போர் படிப்படியாகக் குறைந்துவருவதாகப் பயிற்சியாளர் கவலைப்பட்டார். வளரும் பிள்ளைகளின் வாசிப்பு மொழி, பிள்ளைகளுக்கு விருப்பமான உள்ளடக்கம், காலத்துக்குப் பொருந்தாத பழைய இலக்கணங்கள் ஆகியவை குறித்துப் பயிற்சி மையம் விவாதித்தது.

பயிற்சிக்குப் போய்ப் புது மனிதராகப் பாண்டியன் திரும்பினார். அவர் வகுப்பறைக்குத் திரும்பி யதும், “கொஞ்ச நேரம் உங்க பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்கிறேன்” என்றார். கடைசி பெஞ்சில் போய் உட்கார்ந்தார். “பேசுங்கப்பா! கேக்கறேன்” என்றார்.

“சார்! இவன் புதுப் புதுக் கதைகள் சொல்றான். எல்லாம் இவனே எழுதிய கதைகளாம்!”. ஜேம்ஸ் எழுந்து பரதனைச் சுட்டிக் காட்டினான். “பரதா! சொல்லுய்யா” என்றார் ஆசிரியர். பரதனுக்குத் தயக்கம் ஏதுமில்லை. எழுந்து சொல்லத் தொடங்கி னான்.

அது என்ன? - இது என் பத்தாவது கதை, ஒரு காடு. காட்டில் ஓநாயும் பூனையும் வசித்தன. இரண்டும் கொஞ்ச நாளா நண்பர் கள். ஒரு எலியைப் பிடிக்க வேண்டும். அதற்குத்தான் இந்த நட்பு. “எலியப் பிடிக்கணும். அது குண்டு எலியா இருக்கணும்”- இது ஓநாய். “பிடிப்போம். ஆனா ஆளுக்குப் பாதி”.-இது பூனை.

பூனையும் ஓநாயும் போட்ட திட்டம் எலிக்குத் தெரிந்தது. அது தாய் எலி. குஞ்சுகளுக்கு உணவு சேகரிக்க வேண்டும். எலி பதுங்கிப்பதுங்கி நகர்ந்தது. பூனை மரத்தில் ஏறிக்கொண்டது. ஓநாய் நிலத்தில் அங்கும்இங்கும் நடந்தது. திடீர் என்று மரத்தில் இருந்து சின்னச்சின்ன புழுப் பூச்சிகள் விழுந்தன. ஓநாய் நிமிர்ந்து பார்த்தது. பூனை எதையோ தின்றுகொண்டு இருந்தது. “அது என்ன?" என்று ஓநாய் கேட்டது.

பூனை பதில் சொல்லவில்லை. புழு பூச்சிகள் தொடர்ந்து மரத்தில் இருந்து விழுந்தன. ஓநாய்க்குக் கோபம் வந்தது. பதில் பேசாமல் இருந்தால் கோபம் வரத்தானே செய்யும்? ஓநாய் கோபத்தில் “ஏ! மடப் பூனையே!" என்றது. பூனையும் பதிலுக்குச் சத்தம் போட்டது. “ ஏ! திமிர் பிடித்த ஓநாயே!”. பூனையை ஓநாய் துரத்தி யது. பூனை மரத்துக்கு மரம் தாவியது. துரத்தட்டும்! இதுதான் தருணம்.

எலி மெல்ல ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. மரத்தில் இருந்து கீழே விழுந்த புழு பூச்சிகளைத் தன் குஞ்சு களுக்கு எடுத்துச் சென்றது. அவ்வளவு தான் கதை” பரதன் ஒரு சிரிப்போடு கதையை முடித்தான். எல்லோரும் ஆசிரியர் முகத்தைப் பார்த்தனர். பரதன் முடித்ததும் அவர் மனதாரக் கைதட்டினார்.

“எளிய உயிர்கள் தப்பிப்பது, வளரும் பிள்ளைகளாகிய நீங்கள் விரும்பும் உள்ளடக்கம்” என்றார். ஆசிரியர் அறையிலும் இந்தக் கதையைச் சொன் னார். வீட்டிலும் போய்ச் சொன்னார். “பக்கத்தில் இருப்பவரை ரசிக்க வேண்டும்; பாராட்ட வேண்டும்” என்றது பயிற்சி. பயிற்சியே பாண்டி யனின் வாழ்க்கையானது.

யார் சொன்னா கேப்பாரு? - கேட்கிற காதுகளும் அங்கீகரிக் கிற மனதும் வேண்டும். சுவையான பேச்சுக்கே காதுகள் பழக்கப்பட்டுவிட்டன. முதியவர் குரல் புறக்கணிக்கப்படுவது இதனால் தான். பூங்காவில் வேலு தன்னந்தனி யாக உட்கார்ந்து இருந்தார். ரத்தினம் போய்ச் சேர்ந்துகொண்டார். ரத்தினம் அறுபதுகளில் இருந்தார். வேலு எழுபதுகளில் இருந்தார். ரத்தினத்தைப் பார்த்ததும் வேலுவின் முகம் மலர்ந்தது.

வேலு சொன்னார்: “ஒரு கதை யோசிச்சேன். முடிக்கத்தான் தெரியல”. “சொல்லுங்க! கேப்போம்” என்றார் ரத்தினம் உற்சாகமாக. வேலு தொண்டையைக் கனைத்துக்கொண்டு சொன் னார். “கதையில் ஒருத்தர். பேரு.. பேரு..ம்! குப்புன்னு வச்சுக்கலாம்.” “வச்சுக்கலாம். கதையச் சொல்லுங்க.” “குப்பு குப்புனு சிகரெட் குடிப்பார். அதனால் தான் அந்தப் பேரு” என்றார் வேலு. “அபாரம்! அருமை!” என்று பாராட்டினார் ரத்தினம்.

“குப்பு கிட்டே வேற கெட்ட பழக்கம் இல்ல. சிகரெட் மட்டும்தான்” “ஓ!” “தினம் 20 சிகரெட் குடிப்பார். ஒரு நாள் நெஞ்சுவலி! சிகரெட்டை விடணும். யாராவது சொல்லணும்? யார் சொன்னாக் கேப்பாரு? நண் பர்கள் யாரும் பக்கத்தில் இல்ல! மனைவி சொன்னாக் கேப்பாரா? மனைவி எதிலும் தலையிட மாட் டாங்க! வேற யாரு சொல்றது?” “பேத்தி பேரனைச் சொல்லச் சொல்லுங்க.

யாரும் தட்ட மாட்டாங்க!” - ரத்தினம் குறுக்கிட்டார். “ஆமா! இது சரியான யோசனை! இது என் கதைதான் ரத்தினம்! எவ்வளவோ பாடுபடறேன். சிகரெட்டை மட்டும் விடமுடியல” என்றார் வேலு. ரத்தினம் ஏதும் பேசவில்லை. ஆச்சரியத்தால் அவர் வாய் திறந்தது. கற்பனை உண்மையானதால் ஏற்பட்ட ஆச்சரியம் அது!

- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com

எளிய கற்பனைகள்.. உரிய தருணங்கள் | இது நம் வகுப்பறை சமூகம் 11
பிடிமானம் வேண்டும் | இது நம் வகுப்பறை சமூகம் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in