பெரிதினும் பெரிது கேள் - 29: நட்பின் எல்லை உணர்ந்து பழகுங்கள்!

பெரிதினும் பெரிது கேள் - 29: நட்பின் எல்லை உணர்ந்து பழகுங்கள்!
Updated on
2 min read

வளரிளம் பருவத்து காதல் பற்றி ஆசிரியர் திலீப் ராஜு பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். சார், டிஎஸ்எல்ஆர் கேமராவில் படம் எடுத்தால் நாம ஃபோகஸ் பண்றது மட்டும் தெளிவா தெரியும், மத்ததெல்லாம் மங்கலா இருக்குமே அந்த மாதிரி காதலிக்கிற பசங்களுக்கு காதல் மட்டும்தான் முக்கியமாபடுது. படிப்பு குடும்பம் நண்பர்கள்னு வேற எதுவுமே முக்கியமா தோன மாட்டேங்குதே ஏன் சார் என்று கேட்டான் ஸ்டான்லி.

உங்க மனசு உங்க கட்டுப்பாட்டில் இல்லாததுதான் அதுக்கு காரணம். உன் மூளைதான் அந்த டிஎஸ்எல்ஆர் கேமரா. உன் மனசு எது முக்கியம்னு நினைக்குதோ அதை மட்டும்தான் உன் மூளை ஃபோகஸ் பண்ணும். உதாரணத்துக்கு, நீ ஒரு போட்டோகிராபரை உன் வீட்டு கல்யாணத்துக்கு போட்டோ எடுக்க கூப்பிடுறேன்னு வச்சுக்கோ. மேடையில் நடக்கும் கல்யாணத்தை அவர் போட்டோஎடுத்து ஆல்பமா கொடுத்தாதான் அவருக்குநீ பணம் கொடுப்ப இல்லையா.

அவர் அதைவிட்டுட்டு போற வர்ற பொண்ணுங்க அழகாஇருக்காங்கன்னு அவங்கள போட்டோ எடுத்தாலோ அல்லது அவரோட ஃப்ரெண்ட்ஸ்ங்க பக்கத்துல இருக்காங்கன்னு அவங்கள போட்டோ எடுத்து ஆல்பமா போட்டுக் கொடுத்தாலோ நீ அவருக்கு பணம் கொடுப்பியா?

கிண்டல் பண்றாங்களா? - அது எப்படி சார் கொடுப்பேன்? அந்த வேலைக்கான பணமும் கொடுக்க மாட்டேன். அதுக்கு அப்புறம் வேற எப்ப எங்க வீட்ல விசேஷம்னாலும் அவரை கூப்பிட மாட்டேன்.

சரியா சொன்ன. அதே மாதிரி மனசு உன் கட்டுப்பாட்டில் இருந்தா வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை மட்டும் உன் மூளை ஃபோகஸ் பண்ணும். மத்ததெல்லாம் மங்கலா ஆகிடும். இந்த வயசுல படிப்பும், உன் திறமைகளை வளர்த்துக் கொள்வதும்தான் முக்கியம் என்பதில் நீ உறுதியாக இருந்தால் மற்றதில் கவனம் சிதறாது.

சார் எங்க பிரண்ட்ஸ் வட்டத்துல மத்தவங்களுக்கு பாய் பிரண்ட்ஸ், கேர்ள் பிரண்ட்ஸ் இருந்து எங்களுக்கு மட்டும் இல்லன்னா நீ எல்லாம் வேஸ்ட்டுனு கிண்டல் பண்ணுவாங்க. இதுவே பெரிய மன அழுத்தமா இருக்கு சார்.

உண்மைதான் இந்த வயசுல உங்க நண்பர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். அதைவிட ரொம்ப முக்கியம் எது தெரியுமா? மத்தவங்களோட பேச்சுக்கு நீ என்ன அர்த்தம் கொடுக்கிறாய் என்பதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்பம் துன்பம் எல்லாத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பு. நம் மீது நமக்கு நம்பிக்கை இருந்தால் மற்றவங்களோட கிண்டல், கேலி பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.

பிள்ளைகளே! பள்ளிக்கூட பருவம்தான் வாழ்க்கையிலேயே ரொம்ப மகிழ்ச்சியான பருவம். அதை முழுசா ரசிச்சு அனுபவிங்க என்று ஆசிரியர் சொன்னதும், சார் நாங்களும் அப்படித்தான் நினைக்கிறோம். ஆனா நீங்கதான் யாரையும் பார்க்கவே கூடாதுன்னு சொல்றீங்களே என்று ரோஷன் சொன்னதும் சிரிப்பு சத்தத்தில் வகுப்பறையே அதிர்ந்தது.

பேசி புரிய வையுங்க: ஆசிரியரும் சிரித்துக் கொண்டே நான் பார்க்கவே கூடாதுன்னு சொல்லல. ஆனா உங்க எல்லை எதுன்னு தெரிஞ்சு பழகுங்க. நட்பு என்ற எல்லைக்குள்ள இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துகோங்க. 25 வயசு வரைக்கும் இந்த எல்லைக்குள்ளேயே இருந்தீங்கன்னா உங்களுக்கு ஏற்ற துணை யார் என்பதை கண்டுபிடிக்க உதவியா இருக்கும்.

ஆனால், இந்த டீனேஜ்ல எல்லையை மீறி பழகுனா, அந்த நபர் உங்களுக்கு ஏற்றவரா இல்லாது போனா எதிர்மறை அனுபவங்களால் அதிக பாதிப்புக்கு ஆளாகிடுவீங்க. அதனால கவனம் சிதறும். படிப்பு பாதிக்கும் பெற்றோரோட இருக்க உறவு பாதிக்கும். சார் கேட்கவே பயமா இருக்கு சார் என்றாள் சரளா.

உங்கள பயமுறுத்துறதுக்காக சொல்லல. இதுதான் நிஜம். சினிமாவில் பார்ப்பது போல காதல் கல்யாணம் எல்லாம் வெறும் மகிழ்ச்சியான அனுபவத்தை மட்டும் தராது. கல்யாணம் என்பது ரொம்ப பெரிய பொறுப்பு. குடும்பத்தின் பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா தேவைகளையும் நாம பூர்த்தி பண்ணனும்.

குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றனும். அதற்கு ஏற்ற வயசு வரும்பொழுது அந்த பொறுப்பை ஏற்க உடலளவிலும் மனதளவிலும் தயாராயிடுவீங்க. இப்பவே இதுக்குள்ள சிக்கிக்காம நல்ல எதிர்காலத்துக்காக உங்களை தயார்படுத்திக்கோங்க. நல்ல படிப்பு, வேலைன்னு செட்டில் ஆன பிறகு உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்கலாம்.

சார் அப்பவும் அம்மா அப்பா ஒத்துக்கலைன்னா என்ன சார் பண்ணனும் என்று கேட்டான் விஷால். உங்க வாழ்க்கை பற்றிய முடிவு எடுப்பதில் உறுதியா இருங்க. ஆனா அதை உங்க பெற்றோருக்கு வெளிப்படுத்தும் பொழுது அன்போடு சொல்லுங்க. உங்க பெற்றோர் உங்க வயச கடந்து வந்தவங்கதான். உங்களை வளர்த்து ஆளாக்க நிறைய தியாகங்கள் செய்து ஓடா தேஞ்சு போயிருப்பாங்க. அவங்களை காயப்படுத்தாம உங்க உணர்வுகளை பேசி புரிய வையுங்க. புரிஞ்சுக்குவாங்க. என் புள்ள எந்த முடிவெடுத்தாலும் அது சரியாதான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது உங்க கையிலதான் இருக்கு என்று முடித்தார் ஆசிரியர்.

கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்; தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in