

புதுடெல்லி (ஜன.25)
(நமது சிறப்பு செய்தியாளர்)
நாடு குடியரசு ஆவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பதவியேற்பதற்கான விழாவுக்காக கடந்த ஒருவாரமாக டெல்லியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்பு விழாவுடன் அரசு மாளிகையில் அன்றைய நிகழ்ச்சி தொடங்கும். அதைத் தொடர்ந்து டெல்லியின் முக்கிய வீதிகளில் குடியரசுத் தலைவர் ஊர்வலம் நடைபெறும்.
ஊர்வலம் இர்வின் மைதானத்தில் முடிவடைகிறது. அங்கு ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் பாதுகாப்புப் படையினரால் வழங்கப்படும் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக் கொள்வார்.
விழாவையொட்டி டெல்லி நகரம் முழுவதும் பல வண்ண விளக்குகள் ஒளிவெள்ளம் பாய்ச்சுகின்றன. ஊர்வலத்தின்பாதையில் கண்கவர் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் மூவர்ணக் கொடிகள் வீடுகளின் உச்சிகளை அலங்கரிக்கின்றன.
குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜேந்திர பிரசாத் காலை 10 மணி அளவில் அரசுமாளிகைக்கு வருகிறார். அவரை கவர்னர் ஜெனரல் வரவேற்பார். இருவரும் தர்பார் மண்டபத்துக்குச் செல்கின்றனர். அங்கு தேசிய கீதம் இசைக்கப்படும். பிறகு நாடு குடியரசு ஆனதையும் குடியரசுத்தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்ட தையும் அறிவிப்பார். அதன்பிறகு ராஜேந்திர பிரசாத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
(‘தி இந்து’ 26-1-1950)