தையல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட 101 படிப்புகள்: அரிய வாய்ப்பளிக்கிறது தேசிய திறந்தவெளி பள்ளி நிறுவனம்

வி.சந்தானம்
வி.சந்தானம்
Updated on
2 min read

சென்னை: பதினான்கு வயது பூர்த்தியானால் நேரடியாக 10-ம் வகுப்பில் சேர்ந்து ஆன்-லைனில் படிக்கலாம். தையல், தேனீ, காளான் வளர்ப்பு, நெசவு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட 101 வகையான சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling).

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுவது தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம். இதன் தலைமையிடம் டெல்லி நொய்டாவில் உள்ளது. மண்டல அலுவலகம் சென்னை திருவல்லிக்கேணி, கடற்கரை காமராஜர் சாலை லேடி வெலிங்க்டன் வளாகத்தில் அமைந்துள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் முதன்முறையாக இந்த நிறுவனத்தின் அரங்கு (54ஏ) இடம் பெற்றிருக்கிறது. இதன் பொறுப்பாளர் பிரத்விராஜ் கூறியதாவது:

எந்த மொழியிலும் எழுதலாம்

ஏழ்மை காரணமாக படிக்க முடியாதவர்கள், படிப்பை பாதியிலேயே விட்டவர்கள் 14 வயது பூர்த்தியானால் இந்த நிறுவனத்தில் நேரடியாக 10-ம் வகுப்பில் சேர்ந்து ஆன்-லைனில் படிக்கலாம். ஒருமுறை ரூ.3 ஆயிரம் செலுத்தி சேர்ந்துவிட்டால் 5 ஆண்டுகள் வரை எப்போது வேண்டுமானாலும் 10-ம் வகுப்பை படித்து முடிக்கலாம். 10-ம் வகுப்பில் 11 பாடங்களுக்கு தமிழ் மீடியமும் உண்டு. 12-ம் வகுப்பில் சேர்வதற்கு ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும்.

தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் எழுதலாம். கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி - 044 28442237, மொபைல்- 7358690742, 7200080134, இ-மெயில் rccchennai@nios.ac.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இயக்குநர் வி.சந்தானம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில், திறந்த நிலை அடிப்படைக் கல்வியாக 3, 5, 8 வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் நடைபெறும். 10 மற்றும் 12-ம் வகுப்புகள் ஆன்-லைனில் நடத்தப்படும்.

இவைதவிர தேனீ, காளான் வளர்ப்பு, நெல் பயிரிடுதல், தையல், தட்டச்சு, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ரேடியோ, டிவி டெக்னீசியன், அழகுக்கலை, பேக்கரி பொருட்கள் தயாரிப்பு, உணவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, பிளம்பிங், சூரியமின்சக்தி டெக்னீசியன், நெசவு, கணினி தொடர்பான படிப்புகள் உள்பட 101 வகையான சான்றிதழ் படிப்புகளை நடத்துகிறோம். இதில் 6 மாத சான்றிதழ் படிப்புகளும், ஓராண்டு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.

மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை 9-ம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி தேர்வு எழுதும்போது அவர் அளிக்கும் பதில்களை 8-ம் வகுப்பு மாணவரை எழுத்தராகக் கொண்டு எழுதிக் கொடுக்கும் வசதி உள்ளது. பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், எதிர்காலத்தைப் பற்றி கவலையில் இருப்பவர்களுக்கு வழிகாட்டுதல்களையும், சிறந்த வேலைவாய்ப்புகள் அல்லது சிறிய தொழில்முனைவோராக உருவாக விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்புகளையும் வழங்கு கிறோம். எங்கள் நிறுவனத்தில் படித்து முடித்து மத்திய, மாநில அரசு வேலைகளில் சேரும் வாய்ப்பும் உள்ளது என்றார் சந்தானம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in