

வைகை ஆறு ஓடும் ஆற்றுப்படுகை பாசனப் பகுதிகளை தாண்டி மதுரை மாவட்டத்தில் பசுமையான புல்வெளிகளையும், நீர்நிலைகளையும் பார்ப்பது அபூர்வமாக இருக்கும். பருவமழை கூட பொய்க்கும் மதுரையில் ஒருபோகம் நடப்பது போராட்டமாக உள்ளது. குடிநீருக்கும் மதுரை மாவட்ட மக்கள் வைகை அணையை நம்பியுள்ளனர்.
ஆனால், மதுரையில் இருந்து 24 கிமீ., தொலைவில் அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் இடையில் அழகிய மலைகள் சூழ்ந்த கிராமமான அரிட்டாப்பட்டியில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கிறது. தண்ணீர் நிறைந்து காணப்படும் கண்மாய், கிராமத்தை சுற்றிலும் அழகாய் படர்ந்து விரியும் ஏழு மலைக்குன்றுகள், சுற்றிலும் அடர்ந்த பனைக்காடும், குளிர்ந்த காற்றும், ரம்மியமான இயற்கை எழிலும் காண்போர் மனதை கொள்ளை கொள்கிறது.
இந்த ஊரை சுற்றி 20 கண்மாய்கள் உள்ளன. அதில் 5 பெரியகண்மாய்கள். இதுவரை எக்காலத்திலும் வற்றாத தர்மம் குளம்உள்ளது. பல வகை மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள்,ஊர்வனவைகள், பறப்பனவைகள், இயற்கையோடும், கால்நடைகளோடும் இணைந்து வசிக்கும் மக்கள் என அரிட்டாப்பட்டி பசுமைக்கும், பல்லுயிர் வாழ்விடத்திற்கும் பஞ்சமில்லாத பசுமை கிராமமாக திகழ்கிறது. நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் என பலதரப்பட்ட விவசாயம் இந்த கிராமத்தில் நடக்கிறது.
இங்கு மலைக்குன்றுகளில் உள்ளசமணர்கால குகைகள், சமணப்படுகை, மகாவீரர் புடைப்பு சிற்பம்போன்ற பாரம்பரியச் சின்னங்கள்கிராம மக்களால் பாதுகாக்கப்படுகிறது. 6ம், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த சமணப் பள்ளிகள் இங்குள்ள மலைக்குன்றுகளில் இருக்கிறது.
பாறையை குடைந்து பாண்டியர் வடிவமைத்த சிவன்கோயில், சமணர் படுக்கைகள் உள்ளன. ஊரைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளில் மக்கள் பல்வேறு குலதெய்வங்களை வழிபடுகின்றனர்.
கிரானைட் தொழிலில் இருந்து காப்பாற்றி, வளமான உயிரியல் மற்றும் வரலாற்று களஞ்சியங்களை கொண்ட அரிட்டாபட்டியை பாதுகாக்க அதனை பல்லுயிர் பாரம்பரியதலமாக அறிவிக்க, கடந்த 2019-ல்நடவடிக்கை தொடங்கியது. கிராமத்தில் உள்ள அனைத்து பல்லுயிர் வளங்களும் சூழலியாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டது.
தற்போது தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகியுள்ளது மதுரை அரிட்டாபட்டி. மீனாட்சிபுரம், அரிட்டாப்பட்டி கிராமங்களைச் சுற்றியுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதி முழுமையாக பல்லுயிர் வாழ்விடமாக உள்ளது.
தென்னிந்தியாவில் எங்கும் இல்லாத அரிதாக காணப்படும் பல பறவைகளும் இந்த கிராமத்தில் உள்ளன. அதில், (லகார் ஃபால்கன்) லகடு வல்லூறு என்ற அரிதாகிப்போன பறவை கண்டறியப்பட்டது. இந்த பறவை ராஜஸ்தானிலும் தமிழகத்தில் அரிட்டாபட்டியிலும் மட்டுமே காணப்படுகிறது. இந்த பறவை மணிக்கு 250.கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன்படைத்தது. சகின் ஃபால்கன் என்ற பறவை மணிக்கு 380 கி.மீ மேல் வேகத்தில் செல்லக்கூடியது. உலக அளவில் வேகமாக பறக்கும் வகை பறவைகளில் இதுவும் ஒன்று. இதுவரை 161பறவையினங்கள் இந்த கிராமத்தில் வசிப்பதாக பறவையியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
அதுபோல், கழுகு இனங்களில்இந்திய பொறி வல்லூறு, சிற்றழல், ராஜாளி, பெரும் புள்ளி கழுகு, கருங்கழுகு, கொம்பன் ஆந்தை, பூமன் ஆந்தை, நீலபூங்குருவி, சருகு திருப்பி போன்ற பறவைகள் குறிப்பிடத்தக் கவை. மேலும், 46 வகை வண்ணத்துப்பூச்சிகள், புள்ளி மான்கள், கடமான், நரி, காட்டுப்பன்றிகள், உடும்பு, பல பாம்பினங்கள், எண்ணற்ற வண்டினங்கள், இரு வாழ்விகள் கண்டறியப்பட்டுள்ளன.
விவசாயி செல்வராஜ் கூறுகையில், ‘‘எங்க கிராமத்தில் 1,500 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். விவசாயமே பிரதானம். அறுவடை செய்த விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. சாலை, குடிநீர், பஸ் வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பல்லுயிர் வாழ்விடமாக அறிவிக்கப்பட்டதால் எங்கள் ஊரின் பெருமை உலகறியப்பட்டுவிட்டது. பஸ் வசதியில்லாததால் உயர் கல்வி படிக்க பள்ளி குழந்தைகள் சிரமப்பட்டே அண்டை ஊர் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்,’’ என்றார்.