

வணக்கம் தம்பி, தங்கைகளே! நானொரு 90ஸ் கிட். அப்போ நான் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பறையின் ஜன்னல் வழியாகப் பார்த்தால் பள்ளிக் கூடத்தின் ‘மணி’ தெரியும். தலைமை ஆசிரியர் அறை உள்ள கட்டிடத்தின் வெளி வராண்டாவில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த தண்டவாளத் துண்டுதான் எங்கள் பள்ளிக் கூடத்தின் மணி. 4 மணி ஆகிவிட்டாலே அந்த மணியின் அருகில் காக்கிச் சீருடை அணிந்த பியூன் வேலு வருகிறாரா என்று கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.
கடைசி பாட வேளைக்கு கோவிந்தராஜ் வாத்தியார் வந்துவிட்டாலோ...அடடா... இவர் இன்னும் கொஞ்சம் நேரம் கதை சொல்ல மாட்டாரா என்று ஏங்கவே வைத்துவிடுவார். நான் பள்ளிக் கூடத்து மணியையும் ஜன்னல் வழியாக நோட்டம் விடுவதையும் மறந்துபோய் அவரையே பார்த்துக்கொண்டிருப்பேன். அன்றைக்கு கடைசி பாட வேளைக்கு அவர் உள்ளே நுழையும்போதே...எல்லோரும் கோரசாக, ‘கதை சொல்லுங்க சார்’ என்று ராகம் பாடினோம். சொல்றேன்... சொல்றேன்... அதுக்கு முன்னாடி நான் கேட்கிறதுக்கு டக் டக்குனு பதில் சொல்லனும். பூதம், பேய், பிசாசு, ஆவி இதெல்லாம் இருக்கா, இல்லையா? யாரும் எழுந்து நின்னு சொல்ல வேணாம். உட்கார்ந்துகிட்டே சொல்லுங்க என்றார்.
அன்பழகன் கை தூக்கினான். குரலில் ரகசியத் தோரணையைக் கொண்டுவந்து சார்... எங்க வீட்டு கொல்லையில ஒரு பெரிய மாமரம் இருக்கு. உச்சி வெயில் நேரத்துல அங்கப் போய் விளையாட வேணாம் முனி இருக்குன்னு அம்மா சொன்னாங்க. அவங்க சொன்னதை மறந்துட்டு ஒருநாள் மத்தியானம் மரத்துல ஏறி கண்ணுக்குத் தெரிஞ்ச மாங்காயப் பறிக்கப் போனேன். யாரோ தள்ளிவிட்ட மாதிரி இருந்தது. அங்கேயிருந்து கீழ விழுந்துட்டேன் என்றதும் வகுப்பறையில் சிரிப்பலை எழுந்தது.
நீ மரத்துல ஏறி கீழ விழுந்து அடிபடக் கூடாதுன்னு உம்மேல இருக்கிற பிரியத்துல உங்க அம்மா அப்படி கதை விட்டிருக்காங்கடா. மரத்துலேர்ந்து உன்னை யாரும் தள்ளல. நீ கவனமா ஏறல அதனால விழுந்துருக்கே என்று சொல்லிவிட்டு அடுத்து யாரு என்றார். மணிகண்டன் கை தூக்கிவிட்டுச் சொன்னான், சார்... நான் ஸ்கூலுக்கு போற வழியில ரெண்டு பக்கமும் புல்லுதான் மண்டிக்கிடக்கும் யாருமே இருக்க மாட்டாங்க. பாதி சந்தை தாண்டும்போது மல்லிகைப் பூ வாசம் அடிக்கும் சார். ஜல்...ஜல்... ஜல்லுன்னு கொலுசுபோட்டுக்கிட்டு யாரோ நடந்து வர்ற சத்தம் கேட்கும். நிச்சயமா அது மோகினிப் பேய்தான். நான் ஒரே ஓட்டமா ஓடியாந்துடுவேன்.
இம்முறையில் கோவிந்தராஜ் சாரே விழுந்து விழுந்து சிரித்துவிட்டுக் கேட்டார். மோகினிப் பேய்க்கும் மல்லிகைப் பூ வாசத்துக்கும் என்னடா சம்பந்தம்? எங்க அப்பாதான் சொன்னார், பொழுது சாஞ்ச பிறகு சந்து வழியா ஸ்கூல் கிரவுண்டுக்கு போகாதே. மல்லிகைப் பூ வச்சுக்கிட்டு கொலுசு போட்டுக்கிட்டு அங்க மோகினி பேய் நிக்கும். மீறிப்போனா நம்மள புடிச்சுகிட்டுபோய் பாழடைஞ்ச கிணத்துக்குள்ள அமுக்கி வச்சுகிட்டு பன்னு மாதிரி பிச்சு பிச்சு திங்கும்ன்னு என்றான்.
‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ன்னு நம்ம முன்னோர்கள் சொன்ன பழமொழி இருக்கு பிள்ளைகளா. பேய், பூதம், ஆவின்னு ஒன்னு கிடையவே கிடையாது. அது எல்லாமே பொய்யைத் தவிர வேறில்லை. அப்படி பேய் இருக்கிறதா அறிவியல் பூர்வமா இதுவரைக்கும் நிரூபிக்கப்படல. பேய், பூதம் இருக்கிறதா நீங்க செய்யும் கற்பனைதான் உங்களை அதெல்லாம் இருக்கிறதா நம்ப வைக்குது. இதுக்குப் பின்னாடி நம்மளை இயக்குறது, ஒரு உளவியல் தாக்கமும் நம்ம உடம்புக்குள்ள சுரக்கிற ஒரு திரவமும்தான் காரணம் என்றதும் மீனலோசனி கை தூக்கினாள்.
சார் ஸ்கூல்ல எல்லாரும் சேர்ந்து ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்துக்குப் போனோமே. அந்தப் படத்துல குட்டிச் சாத்தான் இருக்குன்னுதானே சொல்றாங்க. நான் எங்கம்மா கிட்ட கேட்டப்போ கேரளத்துல குட்டிச் சாத்தானுக்கு கோயில் கட்டி கும்பிடுறாங்கடின்னு சொன்னாங்க. அதுக்கு படத்துல காட்டின மாதிரி ஐஸ் க்ரீம் பிடிக்குமா? என்றாள்.
இதுக்குத்தான் வீட்டுக்கு ஒரு மீனலோசனி வேணுங்கிறது என தன் பங்குக்கு அவளைப் புகழ்ந்துவிட்டுச் சொன்னார். நம்மகிட்ட நிறைய புராண நம்பிக்கைகள் இருக்கு. குட்டிசாத்தான் வழிபாடும் அப்படியொரு புராண, நாட்டார் தெய்வ நம்பிக்கைதான். ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்துல அந்த நாலு சின்னப் பசங்க கூட குட்டிச்சாத்தான் நண்பனா இருக்கிற மாதிரி காட்டினது அந்தப் படத்துக்கு கதை எழுதின கதாசிரியர், இயக்குநரோட கற்பனை. குட்டிச் சாத்தான் ஐஸ்கிரீம் சாப்பிட்டதும் அப்படித்தான். என்றவர் ‘அந்தப் படத்தைப் பார்க்கும்போது யாரெல்லாம் பயந்தீங்க. கை தூக்குங்க? என்றார்.
இம்முறை நான் எழுந்து சொன்னேன் ‘பயமும் இருந்தது.. சந்தோஷமும் இருந்தது’. வெரிகுட்! இதைத்தான் நான் உளவியல்ன்னு சொன்னேன். நிஜ வாழ்க்கையில நாம பார்க்க முடியாத பேய், பிசாசு, ஆவி இதையெல்லாம் கற்பனையாக இருந்தாலும் திரையில் பார்த்து பயப்படும்போது இல்லாததை இருக்கிறதா நினைச்சு நம்ம மனசு திருப்பி அடையுது. இது ஒருவிதமான சாகச உணர்வு மட்டுமில்ல; உளவியல் தேவையும் கூட.
பேய், ஆவிப் படங்கள் பார்க்கும்போது நம்ம உடலில் சுரக்கும் அட்ரினலின் திரவம் சிறந்த உணர்வூக்கியாக செயல்படுவதை கண்டுபிடிச்சிருக்காங்க. நீங்க மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது எவ்வளவு சந்தோஷமா வந்தீங்க. அதுக்குக் காரணம் குட்டிச்சாத்தான் செஞ்ச ஜாலியான சேட்டைகள் மட்டுமில்ல இந்த அட்ரினலின் அட்டாக்கும்தான்! அப்போ.. நிறைய பேய் படம் பார்க்கலாம். அப்படித்தானே சார், இது ஆனந்த்.
அதுதான் தப்பு. பேய் படங்களை அதிகம் பார்த்தா காலப் போக்குல அதுமாதிரி படங்கள்ல உள்ள காட்சிகள், நம்ம நனவிழி மனசுன்னு சொல்லப்படுற ‘சப்கான்சியஸ் மைண்ட்’ல எதிர்மறை எண்ணங்களைதூண்டி நம்ம தன்னம்பிக்கையோட அளவையே குறைச்சுடும்ன்னு கண்டுபிடிச்சி ருக்காங்க. அதனால பேய் படங்களை அளவோட பார்க்கிறதுதான் நல்லது.
புரிஞ்சுது சார் என்று கோரசாக அனைவரும் சொல்லவும் தண்டவாள துண்டு ஒலிக்கவும் சரியாக இருந்தது. எனக்கோ அடி வயிற்றில் அட்ரினலின் சுரக்கிற மாதிரி ஒரு உணர்வு. ஆமாம்! மணிகண்டன் சொன்னானே அந்த சந்து வழியாகத்தான் நானும் வீட்டுக்குப் போயாணும். மீன லோசனி வந்து ‘டேய் சந்து வழியா போகன்னுமேன்னுதானே பயந்துகிட்டு நிக்றே, தைரியமா வா நான் இருக்கேன் என்று எனக்காக சைக்கிளில் ஏறிச் செல்லாமல் அவளது சைக்கிளை தள்ளிக் கொண்டு போனாள். சந்து முடிகிறவரை நான் கண்களை மூடிக்கொண்டேன். எனது கை மீனலோசனியின் சைக்கிள் கேரியரைப் பற்றியிருந்தது. - கட்டுரையாளர் தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in