

திருப்பூர்: இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அசத்தி வருகிறது திருப்பூர் அரசு தொடக்கப் பள்ளி.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். முதல்கட்டமாக 1,545 பள்ளிகளில் உப்புமா, பொங்கல், கிச்சடிஉள்ளிட்டவை காலை உணவாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே சிலம்பக்கவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நடைமுறை கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது.
முன்னோடி திட்டம்
இதுதொடர்பாக, அப்பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “குழந்தைகள் தினசரி காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்ததால் பாடங்களை போதிய அளவில் கவனிக்க முடியாத நிலை இருந்தது. இதை கண்டறிந்து, கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று காலை உணவு திட்டத்தை தொடங்கினோம். இன்றைக்கு பெற்றோர் மத்தியிலும், சக அரசுப் பள்ளிகளின் மத்தியிலும் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றனர்.
சூடான இட்லி, சப்பாத்தி
ஈராசிரியர் பள்ளியான இங்கு மொத்த மாணவர் எண்ணிக்கை 16 தான். செங்காளிபாளையம், காங்கயம் பாளையம், கண்ணபுரம் என 3 தொடக்கப்பள்ளிகள் அடுத்தடுத்த கிராமங்களில் இருப்பதால், மாணவர்களின் எண்ணிக்கை உயரவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
காலை 6.30 மணிக்கு பள்ளிக்கு வரும் சமையல் பணியாளர்கள் 4 பேர், உணவு தயாரிப்பு பணிகளை தினசரி காலை 8.45 மணிக்குள் முடித்துவிடுகின்றனர். இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, காளான் கிரேவி, குருமா காலை உணவாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
இப்ள்ளியில் படித்து, உயர்கல்விக்காக ஓலப்பாளையம் உயர்நிலைப்பள்ளிக்கு சென்று வரும் ஏழைக் குழந்தைகளும் இங்கு வந்து சாப்பிட்டு பயனடைந்து செல்கின்றனர். பிற்பகல் 3 மணிக்கு நாள்தோறும் கீரை, பால், சுண்டல் இவற்றில் ஏதேனும் ஒன்றை வழங்குகின்றனர்.
ஊர் மக்கள் ஒத்துழைப்பு
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.பிரபாகர் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் பணியில் சேர்ந்தபோது, மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. தொடர்ந்து 20 மாணவர்கள் என்ற எண்ணிக்கையில் இருந்தது.
இதனால் மதிய உணவு திட்டத்துக்காக வழங்கப்படும் காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு ஊரில் உள்ள தன்னார்வலர்கள் உதவியுடன், பள்ளிக் குழந்தைகள் தொடர்ந்து பசியின்றி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ரூ.35 ஆயிரம் மதிப்பில் நிதி திரட்டப்பட்டு சமையல் பாத்திரங்கள் வாங்கினோம்.
தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்புதான் இத்திட்டம் வெற்றிபெற முக்கியக் காரணம்.
காலை சிற்றுண்டிக்காக யாரிடமும் பணம் பெறுவதில்லை. தினமும்ரூ.1,060 செலவாகிறது. தன்னார்வலர் கள் பொருளாக கொடுத்து விடுகின்றனர்.
காலை சிற்றுண்டி திட்டத்தை 2021-ம் ஆண்டு ஜூலை 15-ல் தொடங்கினாலும் கரோனா சூழல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் தொடர முடியவில்லை. இந்நிலையில், கரோனாவுக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி முதல், கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து காலை உணவை அனைத்து வேலை நாட்களிலும் வழங்குகிறோம்” என்றார்.