

உங்கள் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு வாழும் உதாரணம், ‘துணிச்சல்’ என்கிற பொருள்படும் ‘வேலியன்ட்’ சிம்பொனி படைத்திருக்கும் இசைஞானி இளையராஜா. சிம்பொனி அமைத்த முதல் இந்தியர் இளையராஜா என்று பெருமிதம் கொள்கிறோம்.
உண்மையில், 51 நாடுகளை உள்ளடக்கிய ஆசிய கண்டத்திலேயே சிம்பொனி உருவாக்கிய முதல் இசை மாவீரன் இவர்தாம். இசைத்துறையில் அவர் ஆற்றிவரும் சாதனைகளைப் போன்றே அவரது ஆளுமையும் பலருக்கு மகத்தான உந்துசக்தி. இசைக்கு இணையாக தம் வாழ்க்கையையும் அவர் அணுகும் விதம் இளம் தலைமுறையினருக்கு வாழ்க்கைப்பாடம்.
அந்த ஒரு வரி மட்டுமே கவிதை மீதம் ஆயிரம் அதற்கான ஒத்திகை என்றான் ஒரு கவிஞன். அதுவே இளையராஜா வார்த்த அத்தனை ஆயிரமும் உன்னத இசை. தமது ஐம்பது ஆண்டுகால இசை வாழ்க்கையில் 7000த்துக்கும் மேற்பட்ட பாடல்கள், 1400-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு கானங்களும் பின்னணி இசையும் அமைத்தவர்.
இதுதவிர சுயாதீனமாக, ‘ஹவ் டு நேம் இட்’ (How to Name it, 1986), ‘நத்திங் பட் விண்ட்’ (Nothing But Wind, 1988), ‘திருவாசகம் ஓரடோரியோ’ (Oratorio, 2005), ‘திவ்யபாசுரங்கள்’ (2024) போன்ற அபாரமான இசைக் காவியங்களைப் படைத்தவர். ஓர் அசாத்திய இசைக் கலைஞன் அபூர்வமாக 200 ஆண்டுகள் வாழ்ந்து அயராது உழைத்து இடைவிடாது இசை மழை பொழிந்து உருவாக்கக் கூடியதை வெறும் 50 ஆண்டுகளில் செய்து காட்டி இருக்கிறார் இளையராஜா என அறிஞர்கள் மெச்சுகின்றனர்.
இதற்கு மேல் அவர் தொட சிகரம் ஏது என நினைத்தால், மேற்கத்திய செவ்வியல் இசை வடிவத்தின் உச்சமாகப் போற்றப்படும் சிம்பொனியை எழுதி முடித்தார். அதைவிடவும் லண்டனில் தமது சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு நாடு திரும்பியதும் “இனிதான் ஆரம்பம்” என்கிறார் அந்த 82 வயது இளைஞர். அதனால்தானோ என்னவோ ‘சிம்பொனி எண் 1’ என்று அதற்கு பெயரிட்டுள்ளார்.
சிறந்த மாணவனே சிறந்த ஆசான்! - தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தின் மூங்கில் காட்டில் குருத்துகளை சுவைத்த சிறார் மத்தியில் புல்லாங்குழல் இழைத்த சிறுவன் ஞானதேசிகன் (இளையராஜாவின் இயற்பெயர்). ஆகச்சிறந்த மாணவனே ஆகச்சிறந்த ஆசானாக முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை நெடுக பல நிகழ்வுகளை மேற்கோள்காட்ட முடியும்.
இளம் பிராயத்திலிருந்தே சகோதரர்களுடன் சேர்ந்து கச்சேரிகளில் பாடி வந்த இளம் ஞானசேதிகனின் கால்கள் இசை அமைக்க அல்ல பயிலவே பட்டிக்காட்டில் இருந்து பட்டணத்துக்குப் புறப்பட்டன. சவால்கள் பல கடந்து 1976இல் ‘அன்னக்கிளி’ பட வாய்ப்பும் கிடைத்தது. இசைக்கூடத்தில் முதல் பதிவு தொடங்கியதும் மின்சாரம் தடைப்பட்டது. அபசகுனம் என்று உச்சுக்கொட்டின பல உதடுகள். சற்றும் தளராத ராக தேவன், “ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல” என்று அத்தனை பேரையும் கூடிய சீக்கிரம் சொல்ல வைத்தார்.
வானொலியில் “மச்சான பாத்தீங்களா”, “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” கேட்ட மாத்திரத்தில் மக்கள் மயங்கினர். அதுவே, அன்றைய பிரபல பத்திரிகைகள் வெளியிட்ட ‘அன்னக்கிளி’ திரை விமர்சனத்தில் இசை என்கிற சொல்லே இடம்பெறவில்லை. தமிழர்கள் ராஜ கானத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். அடுத்த நான்கே ஆண்டுகளில், 1980இல் இளையராஜா இசையமைத்த 100வது படமான, ‘மூடுபனி’ வெளிவந்துவிட்டது.
இன்றும் கிட்டார் என்றதுமே, ‘என் இனிய பொன் நிலாவே’ முணுமுணுக்காதவர் உண்டோ! அடுத்த மூன்றே ஆண்டுகளில் 1983இல் 200வது படம். 1987இல் 400வது படம் ‘நாயகன்’-க்கு இசையமைத்தபோதும் இசை ரசிகர்கள்தான் அவருக்கு ரோஜா இதழ்களை தூவினரே தவிர சில ஊடகங்கள் அப்போதும் முட்களையே விதைத்தன.
என்றும் என் கானம்: இசையில் உச்சம் தொட்ட அவரை நண்பர்கள் ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் அழைத்துச் சென்றனர். அப்போதும், சொர்க்கமே என்றாலும் அது இசைக்கு ஈடாகுமா என்றவர் உலகம் போற்றும் இசை மாமேதைகளான மொசார்ட், பாக், பீத்தோவன் ஆகியோர் வாழ்ந்த பிரதேசங்களைத் தேடிச் சென்றார்.
1982இல் ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்’ பாடலில் தான் நிகழ்த்திக் காட்டிய மேற்கத்திய இசை ஜாலத்தைப் பிரபல பிரெஞ்சு ஆர்கெஸ்ட்ரா இசைஞர் பால் மோஹியாவுக்கு (Paul Mauriat) இளையராஜா எடுத்துரைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அந்த சுற்றுப்பயணத்தின்போது நிகழ்ந்தது.
நாடு திரும்பிய மறு கணமே, “என் கானம் இன்று அரங்கேறும்” என இசையில் சஞ்சரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு வருடத்துக்கே 52 வாரங்கள்தான். ராஜாவோ ஓராண்டில் 56 படங்கள்வரை இசையமைத்தார். எதையாவது சாதித்தாக வேண்டும் என இளம் வயதில் இரவு பகல் பாராமல் இயங்குபவர்களைக் கண்டதுண்டு.
80 வயதிலும் விடியற்காலை நாலு மணிக்குக் கண்விழித்து சாதகம் செய்யும் சாதகப்பறவை அவர். ஓய்வின்றி எப்படி உங்களால் உழைக்க முடிகிறது என்று கேட்பவர்களிடம், “மூச்சு விட கடினமாக இருக்குமா என்ன, இசை என் மூச்சு” என்கிறார். அதையும் தாண்டி ஓய்வு நேரம் கிட்டியபோது, ஏற்கெனவே மெட்டுக்குப் பாட்டெழுதும் தமது ஆற்றலை மெருகேற்றச் மரபார்ந்த இலக்கண வகைமையான வெண்பா எழுதப் பயின்று, ‘வெண்பா நன்மாலை’ சூட்டினார்.
நிகழ் கால ராஜா: ஏதாவது ஒரு கலை வடிவத்தில் பாண்டித் தியம் அடைவதே மாபெரும் சாதனை என்றால் கர்னாடக சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, பாப் (Pop), டிஸ்கோ (Disco), ராக் அண்டு ரோல் (Rock and Roll), பைலா (Baila) போன்ற சர்வதேச இசை வடிவங்கள், தமிழ் இசை, இந்தியாவின் பன்மைத்துவ பண் இசை வடிவங்களையெல்லாம் கரைத்துக் குடித்து பாட்டாலே புத்தி சொல்கிறார், பாட்டாலே பக்தி சொல்கிறார்.
தனக்கு வந்த இன்னல்கள், இடர்ப்பாடுகள், தூற்றுதல்கள் என அத்தனை தடைக் கற்களையும் உண்மையிலேயே படிக்கற் களாய் மாற்றியவர். தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்ந்த ஈடு செய்யமுடியா இழப்புகளையும், ஏமாற்றத்தையும் தனது சுயத்தின் வலிமையை சோதிக்கும் சந்தர்ப்பமாக அணுகும் திண்மை கொண்டவர். வேலை இன்றி அவரை பழிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, “நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் போது 30 நாட்களில் சிம்பொனி எழுதி முடித்து விட்டேன்” என்று ஒரு புன்னகையால் சகாப்தம் படைத்தவர்.
உன்னால் முடியும்! உன்னால் முடியும்! என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டால் நிச்சயம் ஒரு நாள் வெல்வோம் என்பீர்களேயானால், “உன்னால் முடியும் என்று சொல்லாதே செய்” என்று செய்து காட்டுபவர். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் அவரு நம்ப முடியாத சாதனைகள் பல புரிஞ்சாராம் என்கிற கடந்த கால கதை அல்ல, நிகழ் கால நிஜம் இந்த ராஜா.
- susithra.m@hindutamil.co.in