

இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கத் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வகை செய்யும் ‘பிரதமரின் வித்யாலட்சுமி’ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து 22 லட்சம் மாணவர்கள்வரை பிணையம் இல்லாத கடன் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையான, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு 2024 முதல் 2031 நிதியாண்டுவரை ரூ.3, 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி புதிய கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 7,000 மாணவர்கள் கல்விக்கடன் பெற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்.
இதேபோன்று மாவட்டம்தோறும் இத்திட்டத்தின் பயன்களை எடுத்துரைத்தால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயனடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை அறிவோம் வாருங்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - இந்தியாவில் தொழில்நுட்ப, தொழில்முறை கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 860 நிறுவனங்கள் தகுதி வாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை (www.nirfindia.org/Rankings/2024/OverallRanking.html) பட்டியல் மூலம் இந்நிறுவனங்களை அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் தமிழ்நாடு உள்பட்ட நாட்டின் பல மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. கியூஎச்இஐ நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டத்துக்கு முதல் கட்டமாக தகுதி பெறுகிறார்கள்.
இவர்கள் ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு 75%வரை பிணையம் இல்லாத கடன் பெறலாம். கூடுதலாக, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்வரை பெறக்கூடிய பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்சம்வரை கல்விக் கடன் பெறலாம். ஆண்டுதோறும் இந்த பிரிவைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்கள் பெறக்கூடிய கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். அரசு வழங்கக்கூடிய வேறெந்த உதவித்தொகையினையும் பெறக்கூடியவர்களாக இருப்பின் இந்த திட்டத்தின்கீழ் அவர்கள் பயன் பெற முடியாது.
இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியமானது அவர்கள் மேற்கொள்ளும் உயர்கல்வி படிப்பை முடிக்கும்வரை வழங்கப்படும். எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கிகள், சம்பந்தப்பட்ட மாணவர் பட்டப்படிப்பை முடித்து பணியில் சேர்ந்து ஊதியம் ஈட்ட அவகாசம் அளிக்கின்றன. இதனால் வட்டியைத் திருப்பி செலுத்த, பட்டம் பெற்ற பிறகும் கூடுதலாக ஆறு மாதக்காலம் முதல் ஓராண்டுக் காலம்வரை அவகாசம் வழங்கும் முறையைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் இந்த சலுகை வங்கிக்கு வங்கி மாறுபட வாய்ப்புள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: மத்திய உயர்கல்வித் துறை புதிய ஒருங்கிணைந்த இணையதளமாக PM-Vidyalaxmi-ஐ கொண்டுவரவிருக்கிறது. இதன் வழியாக அனைத்து வங்கிகளையும் தொடர்பு கொண்டு உரிய கல்விக் கடன் மற்றும் வட்டி மானியங்களை மாணவர்கள் பெற ஏற்பாடு செய்யப்படும். ஈ-வவுச்சர் மற்றும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) வேலட் வசதி மூலம் வட்டி மானியங்கள் விநியோகம் செய்யப்படும்.
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு விண்ணப்பிக்கக் கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்ற வேண்டும்:
1. வித்யாலட்சுமி இணையதளத்தில் லாக்-இன் செய்து விண்ணப்பதாரர் பதிவு செய்ய வேண்டும்.
2. பொதுக் கல்விக் கடன் விண்ணப்பப் படிவத்தை (CELAF) பூர்த்தி செய்ய வேண்டும்.
3. படிவத்தில் அனைத்து விவரங்களையும் பதிவேற்றிய பிறகு அவசியமான கல்விக்கடனைத் தேடி தங்களது தேவை மற்றும் தகுதிக்கு ஏற்றார்போல் விண்ணப்பிக்க வேண்டும்.