

உலகின் சிறந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்றதும் ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் பெயரை பலர் சட்டென சொல்லக் கூடும். அதுவே தமிழ்நாட்டின் சுனாமி விழிப்புணர்வு இளம் பிரச்சாரகர் யாரெனக் கேட்டால் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவரும் சுனாமி விழிப்புணர்வு பிரச்சாரகருமான சிவசக்தியை அறிவோம் வாருங்கள்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய முதல் பேரிடர் 2004-ல் ஏற்பட்ட சுனாமியே ஆகும். இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, அந்தமான் நிக்கோபார் தீவுகளுடன் சேர்த்து இலங்கை, மாலத்தீவு என 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்டு உயிரையும் உடைமைகளையும் பறிகொடுத்தனர்.
இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜப்பான் நவம்பர் 5-ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கத் தீர்மானித்தது. சுனாமி பாதிப்புகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெருமளவு தாக்கத்தைக் குறைக்க முடியும் என்பதால் ஐநா சபை இந்நாளை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்துகிறது.
இதன் பொருட்டு 2016-லிருந்து உலகம் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சுனாமி விழிப்புணர்வு உச்சி மாநாட்டினை ஜப்பான் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜப்பானில் உள்ள குமாமோட்டோ என்ற இடத்தில் கடந்த அக் 23, 24-ம் தேதிகளில் நடைபெற்ற 2024-ன்சர்வதேச உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உச்சி மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் மாணவர் சிவசக்தி பங்கேற்றார். 44 நாடுகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது பற்றியும், மாநாட்டில் பெற்ற அனுபவங்கள் குறித்தும் மாணவர் சிவசக்தி நம்முடன் பேசியதிலிருந்து...
முன்மாதிரி மாணவர்: நான் பிறந்ததே 2007-ல்தான் என்பதாலும் எனது சொந்த ஊரான நாட்டுப்பசுக்களுக்குப் புகழ்பெற்ற உம்பளச்சேரி கடலோரத்திலிருந்து தள்ளி இருப்பதாலும் எனக்கு சுனாமியின் பாதிப்பு நேரடியாக இருந்ததில்லை. ஆனாலும் சீராட்டிப் பாராட்டி வளர்த்த குழந்தைகளையும் உயிருக்கு உயிராய் பராமரித்த கால்நடைகளையும் சுனாமியில் இழந்த உற்றார் உறவினர் பலர் எனக்குண்டு.
அப்பா கட்டிடத்தொழிலாளி. எங்கள் கிராமத்தில் உள்ள அரசு தமிழ்வழிப் பள்ளியிலேயே 10-ம்வகுப்புவரை படித்தேன். அன்பாசிரியர்கள் வாய்த்ததாலும் படிப்பில் நாட்டமிருப்பதாலும் பொதுத்தேர்வில் 500-க்கு 474 மதிப்பெண் பெற்றேன். இதன்மூலம் காடம்பாடியில் உள்ள நாகப்பட்டினம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தகுதி அடிப்படையில் இடம் கிடைத்தது. கணினி அறிவியல், கணிதப் பாடப்பிரிவில் சேர்ந்து தற்போது பிளஸ் 2 படிக்கிறேன்.
என்னைப்போன்ற மாதிரி பள்ளி மாணவர்களுக்கு உணவு, தங்கும் விடுதி வசதியுடன் சேர்த்து நீட், ஜெஇஇ, கேட், கியூட் என அத்தனை விதமான நுழைவுத் தேர்வுகளுக்கும் தமிழக அரசே இலவசமாக பயிற்சி வழங்கி வருகிறது. இதனிடையில் தமிழ் வழியில் படித்தாலும் ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் யூடியூப் சேனல்கள் மூலம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச பயின்றேன். ஆசிரியர்களும் ஆங்கில மொழி அறிவை வளர்க்க உதவியதால் தமிழக அரசு செலவில் உயர்கல்வியை வெளிநாட்டில் படிக்கத் தகுதி பெற்றேன். இதன் அடுத்தகட்டமாகத்தான் ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மாநிலங் களைச் சேர்ந்த சிறப்பாக படித்துவரும், ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடிய அரசு பள்ளி மாணவர்கள் என்கிற அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்து நானும், காரைக்காலி லிருந்து ஒரு மாணவியும், மேலும் ஆந்திரா, ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு மாணவர் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட்டோம்.
ஜப்பானில் சுனாமி மாநாட்டில் பேச வேண்டிய தலைப்பு, அங்கு கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் உள்ளிட்டவை தொடர்பாகப் பள்ளி நேரம்போக ஆறு மாதக்காலம் அரசு மாதிரி பள்ளி மாணவர் ஆலோசகர் ஆகாஷ் சார் மூலம் சிறப்புப் பயிற்சி பெற்றேன். ‘கூகுள் மீட்’ வழியாக சக பங்கேற்பாளர்களுடனும் கலந்துரையாடி வந்தேன்.
பேரழிவிலிருந்து மீண்ட நகரம்: கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் பிருந்தாவின் துணையுடன் கடந்த அக்.18-ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பான் நோக்கி 5 மாணவர்களும் புறப்பட்டோம். முதல் விமான பயணம் பரவசமூட்டியது. டோக்கியோ விமானநிலையத்திலிருந்து ஜெர்மனி, கம்போடியா, சாலமன் தீவுகள், வானுவாடூ குடியரசு ஆகிய 4 நாடுகளின் மாணவர் பிரதிநிதிகளுடன் கூட்டாக இணைந்து செயல்படும் பிரிவில் இந்திய மாணவர்கள் சேர்க்கப்பட்டோம்.
எல்லோரும் வேறுபாடு பார்க்காமல் நட்புடன் பேசிப் பழகினார்கள். மாநாடு நடைபெறும் குமாமோட்டோ நகரமே 2016-ல்பயங்கர நிலநடுக்கத்தாலும் 2020-ல்பெருமழையாலும் பலத்த சேதமடைந்த இடம் என சுற்றுப்பயணத்தின்போது அறிந்து அதிர்ந்தோம். குறுகிய காலத்தில் பேரழிவிலிருந்து மீண்டு நகரை புதுப்பித்த விதத்தை ஜப்பானிய மாணவர்கள் விளக்கியபோது ஆச்சரியமாக இருந்தது.
மாநாட்டில், 2004-ல் கற்ற பாடத்திலிருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்ட சுனாமி வருமுன் எச்சரிக்கை அளிக்கும் தொழில் நுட்பம் பற்றி இந்திய மாணவர்கள் பேசினோம். கூடவே சுனாமி மீள்கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்காக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒடிசாவின் வெங்கட்ரைப்பூர், நொலியாஷி ஆகியகடலோர கிராமங்கள் பற்றி எடுத்துரைத் தோம். எங்கள் பேச்சுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
நாடு திரும்பியதும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராலும் மாவட்ட ஆட்சியராலும் பெரிதும் பாராட்டப்பட்டேன். எளிய மக்களைக் காக்கவும் மீட்கவும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதே எனது லட்சியம். தற்போது சுனாமி வருவதற்கு வெறும் 20 நிமிடங் களுக்கு முன்பாக அபாய ஒலி எழுப்பும் தொழில்நுட்பம்தான் வளர்ந்துள்ளது. நான் ஆடு, மாடுகளுடன் வளர்ந்தவன் என்பதால் மனிதர்களைப் போலவே அந்த ஜீவன்களையும் சுனாமியிலிருந்து காக்க வேண்டுமானால் இன்னும் முன்கூட்டியே எச்சரிக்கை தரக்கூடிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நிகழ்த்த நினைக்கிறேன். இவ்வாறு மாணவர் சிவசக்தி கூறினார்.
- கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in