Last Updated : 12 Dec, 2023 04:30 AM

 

Published : 12 Dec 2023 04:30 AM
Last Updated : 12 Dec 2023 04:30 AM

தேர்வு மேசை மேல் தண்ணீர் பாட்டில், சாக்லேட், சாண்ட்விச்...

தேர்வு அறை. அமைதியும் குழந்தைகளும் உறைந்திருக்கும் இடம். நூறு மதிப்பெண் தேர்வை எழுத நேரமில்லை என்றால் தேர்வு நேரத்தை இரண்டரையிலிருந்து மூன்றாக மாற்றுகிறோம். வினாத் தாளை சரியாக வாசித்துப் புரிந்து கொள்ளாமல் பலரும் பதில் எழுதி விடுகிறார்கள். பொதுத் தேர்வுகளில் பதற்றம் இல்லாமல் வினாத்தாளை வாசிக்கும் நேரம் என்று கால் மணி நேரம் தரப்படுவதால் தேர்வு நேரம் இன்னும் கால்மணி நேரம் கூடி மூன்றேகால் மணி நேரமாகிறது. தேர்வறைக்குள் அனுமதிக்கும் நேரத்தையும் பள்ளிகளில் வரச் சொல்லும் நேரத்தையும் சேர்த்தால் பொதுத்தேர்வுக்கான மொத்த நேரம் பல மணி நேரம். பொதுத்தேர்வு நேரப் பதற்றம் என்பது குழந்தைகளை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தையும் தொற்றிக்கொள்கிறது. தேர்வறைக் கட்டுப் பாடுகள் தனிக் காப்பியம். அதிலும் பொதுத்தேர்வு விதிமுறைகள் தரும் பதற்றத்தில் படித்ததெல்லாம் மறந்தே போய்விடலாம்.

செயல்முறைத் தேர்வு எங்கே? - தேர்வு என்பது மதிப்பீடு. அனைத் துத் திறன்களையும் எவ்வாறு எழுத்து மூலம் மட்டுமே மதிப்பிட முடியும்? சிந்தனை, உயர் சிந்தனை என்று வினாக்கள் இருந்தாலும் சிந்தனையை வெளிப்படுத்த எழுத்தைத் தவிர வேறு வழியே இல்லையா? காலம் காலமாக எத்தனையோ சிந்தனையாளர்கள் பேசியும் எழுதியும் மதிப்பீட்டு முறைகளில் ஏன் மாற்றமே வரவில்லை? அறிவியலில் கூட எல்லா வகுப்புகளிலும் செய்முறைத் தேர்வுகள் ஏன் இல்லை?என்று ஏராளமான கேள்விகளோடு பல ஆண்டுகளாக தேர்வறையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டி ருக்கிறேன்.

வழக்கமாக, தேர்வு தொடங்கி அரை மணி நேரத்திற்கு உள்ளா கவே மாணவர்களில் பலரும் சோர்ந்து விடுகின்றனர். அறையில் வீற்றிருப்பவர்களில் எப்படியும் இரு வருக்கு முகமெங்கும் தூக்கம் பொங்கிக் கொண்டே இருக்கும். ஓரிருவர் தூங்கிவிடுவர். யோசித்து யோசித்து தானே பதில் எழுத வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? தேர்வு நேரம் குறித்த ஆய்வுகள் ஏதேனும் உள்ளனவா? இப்படித் தொடர்ந்து பல கேள்விகள் மனதுள் அலையடிக்கிறது. ‘A brilliant young mind’ கணித மேதை ஒருவரைப் பற்றிய படம் நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு தேர்வுக்காட்சி. தேர்வு தொடங்குவதற்கு முன்னால் தேர்வு மேசைகளின் மேல் தண்ணீர் பாட்டில், ஒரு சாக்லேட், ஒரு சாண்ட் விச் வைக்கப்பட்டிருக்கும். இது எவ்வளவு அற்புதமான, குழந்தை நேயமான சிந்தனை. நாம் சிற்றுண்டி தரவேண்டாம். அழுத்தங்கள் இல்லா மல் இயல்பானதாக தேர்வுகளை நடத்துகிறோமா?

சிந்தித்து எழுத நேரம் வேண்டாமா? - தேர்வு முடிந்ததும் ஆசிரியரான எனக்கும் ஓய்வு. திடீரென நாம் தேர்வு எழுதிப் பார்த்தால் என்ன என்று ஒருமுறை தோன்றியது. விடைத்தாளை எடுத்து ‘வெற்றிக் கொடி’ நாளிதழுக்கு எழுதிய ஒரு கட்டுரையை எடுத்து அதைப் பார்த்து எழுதத் தொடங்கினேன். நான்கு பக்கங்கள் எழுதி முடிக்க 45 நிமிடங்கள் ஆனது. பார்த்து எழுத இவ்வளவு நேரம் என்றால் அதே கட்டுரையை நினைவிலிருந்து எழுத எவ்வளவு நேரம் ஆகும்? இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கூட ஆகலாம். அதற்கு மேலும் ஆகலாம்.

சிந்தித்து எழுத அதிக நேரம்தேவை என்பதால்தான் மனப் பாடத்தை அச்சாகக் கொண்டு தேர்வுச் சக்கரம் சுழல்கிறது. ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் எழுத்துத் தேர்வுகளே போதும். பல்வேறு திறன்களுக்கு ஏற்ற மதிப்பீட்டு முறைகளை உருவாக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையே பள்ளிக்கல்வி முழுமைக்கும் நடை முறைப்படுத்தப்பட வேண்டும். கல்வியில் மாற்றம் என்பது மதிப்பீட்டு முறை மாற்றத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும். அது தான் அச்சாணி. அப்போது தான்சிந்திக்கும் தலைமுறையை உரு வாக்க முடியும்.

- கட்டுரையாளர் எழுத்தாளர், பள்ளி ஆசிரியர். தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x