

ஓசூர்: பாகலூரில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான கட்டிடம் அருகே இயங்கும் அங்கன்வாடி மையத்தை இடமாற்றம் செய்ய பெற்றோர் கோரிக்கை விடுத் துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பாகலூர் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே ஊர்புற நூலகம் அமைந்துள்ளது இந்த நூலகம் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அந்த கட்டிடம் சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ஆபத்தான கட்டிடத்தை யொட்டி அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த அங்கன்வாடி கட்டிடமும் பாதுகாப்பாக இல்லை. மழைகாலங்களில் கட்டிடத் தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சுவர்களும் மழைநீரில் ஊறி வலுவிழந்து காணப்படுகிறது. இத்தகைய ஆபத்தான கட்டிடத்தில்தான் குழந்தைகள் படித்து வருகின்றனர். நூலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் இரண்டையும் இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும் என்றும் அதுவரை குழந்தைகளை தற்காலிகமாக வேறு இடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பெற்றோர்கள் கூறியதாவது: பாகலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறு தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்வதால், எங்கள் குழந்தைகளை ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே உள்ள நூலகத்தையொட்டி அமைந்துள்ள அங்கன் வாடி மையத்தில் விட்டு செல்கிறோம். இங்கு வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளும் படிக்கின்றனர். 35-க்கும்மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் இந்த அங்கன்வாடி கட்டிடம் பழைய நூலக கட்டிடத்தை ஒட்டி உள்ளது. அங்கன்வாடி கட்டிடமும் பாதுகாப்பாக இல்லை.
மழைக்காலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அதனால்தான் எங்கள் குழந்தைகளை இங்கு அனுப்புவதற்கு தயங்குகிறோம். இங்கு தண்ணீர் வசதி இல்லாததால் பணியாளர்கள் வெளியில் சென்று தண்ணீர் எடுத்துவருகின்றனர். தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தைகள் மிகவும் சிரமப் படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர் வசதியும் செய்துதர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். அங்கன்வாடி மைய ஊழியர்கள் கூறும்போது, "நூலகமும், அங்கன்வாடி மையமும் ஒரே இடத்தில் சேர்ந்துள்ளது. இந்த இரு கட்டிடங்களும் மிகவும் பழமையாக உள்ளன. இந்த கட்டிடங்கள் வலுவிழந்து விட்டன. பழைய கட்டிடத்தை அகற்றி புதியகட்டிடம் கட்டி கொடுக்க அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். விரைவில் புதிய கட்டிடம் கட்டி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்" என்றனர்.