குழந்தைகள் தினம் 2023: விஞ்ஞானத்தில் அலாதியான பிரியம் கொண்ட பிரதமர் நேரு

குழந்தைகள் தினம் 2023: விஞ்ஞானத்தில் அலாதியான பிரியம் கொண்ட பிரதமர் நேரு
Updated on
2 min read

சந்திரயான்- 3 விண்கலத்தின் வெற்றிக்குப் பிறகு இஸ்ரோ என்றதும், ‘இந்தியாவின் பெருமை’ என்று சின்னக் குழந்தையும் சொல்லும். அதேபோன்று நாட்டை தலைநிமிரச் செய்யும் கல்லூரிகள் சிலவற்றை சொல்லக் கேட்டால், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் என்று சிறுவர்களும் சொல்லக் கூடும். இவை மட்டுமின்றி தேசத்தின் முகமாக விளங்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த முக்கிய நிறுவனங்கள் பல நாட்டின் முதல்பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டவை என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும் எத்தகைய காலச்சூழலில் இந்தியாவின் தூண்களாக இவற்றை நேரு கட்டமைத்தார் என்பதை அறிவீரா?

ஆங்கிலேயரின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்று பலர் நினைத்திருந்த காலம் அது.அடிமை விலங்கோடு, அறியாமை விலங்கும் விலக வேண்டும்; அதற்கு அறிவியல் வளர்ச்சி முக்கியம் என்றுஉறுதி பூண்டார் பிரதமர் நேரு. ஆகவேதான் விடுதலை பெற்ற இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற கையோடு அறிவியல் கொள்கை மசோதாவில்தான் முதலில் கையெழுத்திட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளின் செல்வ செழிப்பை பார்த்து இன்றும் ஏக்கப் பெருமூச்சி மட்டுமே விடுகிறோம் நாம். இந்த நாடுகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்தியாவிலும் அவற்றுக்கு இணையான கல்வி, அறிவியல் கட்டமைப்பு உண்டாக்க தீர்மானித்தார் நேரு.

தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து! - உலகிலேயே முதன்முதலில் நிலவுக்குரஷ்யா 1959-ல் விண்கலம் அனுப்பியது. அதை கண்டு போட்டியோ, பொறாமை உணர்வோ கொண்டு பதிலடியாக இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கும் என்று சபதம் எடுக்கவில்லை நேரு. நிலவில் கால்பதிப்பதை அவர் என்னவாக கண்டார் என்பதை அவரது சொற்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம். “ஒரு விண்கலத்தால் நிலவை அடைய முடியும் என்றால், கிரகங்களை வைத்து ராசி, பலன்கள் சொல்லிக் கொண்டு மூடநம்பிக்கையில் இனியும் நம் சமூகம் இருக்கலாகாது என்பதை அல்லவா இது உணர்த்துகிறது?” என்ற கேள்வியை எழுப்பினார்.

அதாவது நிலவை நோக்கிய பயணத்தை இந்தியா தனது மூடநம்பிக்கைகள், சடங்கு, சம்பிரதாயங்கள் போன்ற பிற்போக்குத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வாய்ப்பாக கருதினார் நேரு. நாட்டை அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்த இந்த நிகழ்விலிருந்து ஊக்கம் பெற்றார்.

விஞ்ஞான தோழர்கள்: தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்தி தனது திட்டத்தை செயல்படுத்த நினைக்காமல் நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்களை கூட்டாக இணைத்து அமல்படுத்தினார். இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தையென போற்றப்படும் விக்ரம் சாராபாயுடன் இணைந்து இன்கோஸ்பார் என்றழகைப்படும் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி கமிட்டியை 1962 நிறுவினார். அதற்கு முன்பே இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தையான ஹோமி பாபாவின் மூலம்இந்திய அணுசக்தித் துறை, ஹோமிபாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை நிறுவினார். அணுசக்தித்துறையின் ஒரு பிரிவாக இன்கோஸ்பார் தொடங்கப்பட்டது.

இதுவே 1969-ல்இஸ்ரோவாக வடிவெடுத்தது. இதேபோன்று நோபல் புகழ் விஞ்ஞானி சர் சி.வி. ராமன் மூலம், இந்திய அறிவியல் கழகத்தைத் தொடங்கினார் நேரு. விஞ்ஞானி எஸ்.எஸ்.பட்நகர் மூலம் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலை உருவாக்கினார். இத்தகைய நிறுவனங்களே அந்நாள் தொடங்கி இந்நாள்வரை நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகின்றன. அடுத்து, இந்தியா கல்வியில் எட்டவேண்டிய உயரத்தை அடைய 1949-ல்அமெரிக்க சென்றபோது உலகப்புகழ்வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிலையமான மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைப் பார்வையிட்டார். அதற்கு இணையான கல்வி தரத்தில் ஐஐடி-ஐ முதன்முதலில் காரக்பூரில் 1950-ல்நிறுவினார்.

அதைத் தொடர்ந்துபம்பாய் ஐஐடி (1958), சென்னை ஐஐடி (1959), கான்பூர் ஐஐடி (1959), டெல்லி ஐஐடி (1961) ஆகிய நிறுவனங்களை இந்திய அரசின் நிதியில் தொடங்கினார். இதையடுத்து ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மை கழகம், இந்திய சுரங்கப் பள்ளி, வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நிறுவினார். மொத்தத்தில் மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனத்திலிருந்து விடுதலைபெற அறிவியல் வளர்ச்சி அத்தியாவசியம் என்று எண்ணியதுபோன்றே பஞ்சம், பசி, சுகாதாரமின்மை, எழுத்தறிவின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இன்றியமையாதது என்கிற திண்ணம் கொண்ட பண்டித ஜவஹர்லால் நேரு தான் வாழ்ந்த காலத்திலேயே கண்ட கனவை நினைவாக்கினார். அன்று அவர் தோற்றுவித்த நிறுவனங்கள் இன்று பலரது கனவை நிஜமாக்கிக் கொண்டிருக்கின்றன.

- கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in