

நாள்தோறும் காலையில் பள்ளிக் கூடுகையில் 10 நிமிடங்கள் நாளிதழ் வாசிக்கும்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் பள்ளிக் கல்வித் துறை மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.
ஏனென்றால் அன்றாடம் இரவில் நான் நாளிதழ் வாசிக்கிறேன். நாளிதழ் வாசிக்கும் பழக்கம், எனக்கு அவ்வளவு சுலபமாக வரவில்லை.
ஒவ்வொரு நாளும் அம்மா, அப்பாவின் திறன்பேசியில் இணையம்வழி விளையாட்டை விளையாடுவேன். தினமும் 10 நிமிடம் கண்டிப்பாக நாளிதழ் படித்தால்தான், 10 நிமிடம் திறன்பேசியில் இணையம்வழி விளையாடத் தருவதாக அப்பா சொன்னார்.
இப்படி இணைய விளையாட்டுக்கு ஆசைப்பட்டு நாளிதழை வாசிக்க ஆரம்பித்தேன். இப்போது நாள்தோறும் புதிய செய்திகளையும், புதிய சொற்களையும் தெரிந்துகொள்கிறேன்.
பொதுவாகப் பள்ளிக்கூடத்தை விட்டு மாலை வீட்டுக்குத் திரும்பும் மாணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திறன்பேசியிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இவற்றால் எந்தப் பயனும் இல்லை. நாளிதழ் வாசித்தால் இதுவரை அறியாதவற்றைத் தெரிந்துகொள்ளலாம். ஆகவே, தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் நாளிதழ் வாசிப்புத் திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
- இ.ம. ஜெகநாத், 8ஆம் வகுப்பு, தி நோபிலி மெட்ரிக் பள்ளி, கே. புதூர், மதுரை.
சிறப்பான பதிவு எழுதிய மாணவர் ஜெகநாத்துக்கு வாழ்த்துகள். இதே தலைப்பில் நல்ல பதிவுகளை அனுப்பிய மாணவர்கள் ச. ஜயதுர்கா, மா.வித்யா, அ.ம.கவின்பாலா, க.ரா.யக்ஷிதா, கா.நேயா, க.ஜேசு சாமுவேல், சு. அனந்த்யா லியானா, ர.ஹரி பிரசாத் ஆகியோருக்குப் பாராட்டுகள்.