மாதம் ஒரு நாள் கட்டாய சமூகப் பணி

மாதம் ஒரு நாள் கட்டாய சமூகப் பணி
Updated on
2 min read

ஜென் இசட் தலைமுறையினருக்கு சமூக அக்கறை இல்லை, பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வது எனத் தெரியவில்லை என்றெல்லாம் விமர்சிக்கிறோம். இதற்குப் பள்ளி வகுப்பறைக்குள் தீர்வை தேடுவதைக் காட்டிலும் மக்களுடன் இணைந்து சேவைகள், விழிப்புணர்வுப் பணிகளில் மாணவர்கள் ஈடுபடும்போது நல்லதொரு மாற்றத்துக்கான வாய்ப் பாக அமையும்.

ஏற்கெனவே, சாரண சாரணியர் படை, இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், போதைப்பொருள் ஒழிப்பு மன்றம் உள்ளிட்ட மன்றங்கள் பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆர்வம் உள்ள சில மாணவர்கள் பணி செய்கின்றனர். இவற்றைத் தாண்டி 5ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்புவரை படிக்கும் மாணவர்களை மாதம் ஒரு முறை சமுதாயப் பணியில் ஈடுபடுத்துவது நல்லது.

முன் தயாரிப்பு: மாணவர்களின் வகுப்புக்குத் தக்கபடி பள்ளிக்கு அருகில் உள்ள கிராமம், சிறுநகரங்களில் அவர்களைப் பணியில் ஈடுபடுத்தலாம். எந்த இடத்தில், எந்தப் பிரிவின்கீழ் சேவை செய்ய உள்ளார்கள் என்பதைத் தனித்தனி குழுக்களாகப் பிரித்து, ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். காலையில் பள்ளியில் இருந்து புறப்பட்டு மாலையில் பள்ளிக்குத் திரும்பி அங்கிருந்து அவரவர் வீட்டுக்குச் செல்வதாகத் திட்டமிட வேண்டும்.

மாணவர்கள் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கான கருவிகள், துண்டுப் பிரசுரங்கள், பாதுகாப்புக் கருவிகள், தூய்மைப் பணிக்குத் தேவையான பொருள்கள், மரக்கன்றுகள் நடுவதற்குத் தேவையான மரக்கன்றுகள், தளவாடங்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும். முதலுதவிப் பொருள்கள், மதிய உணவு, குடிநீர், போக்குவரத்து ஆகியவற்றைப் பள்ளி நிர்வாகம், உள்ளாட்சி மன்றங்கள் ஏற்பாடுசெய்ய வேண்டும்.

சொல்லும் செயலும்: உள்ளாட்சி, மருத்துவம், வனம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை, சமூக நலம் ஆகிய துறைகளின் மூலம் மாணவர்கள் நிறைய பணிகளைச் செய்ய முடியும். மாதந்தோறும் சுழற்சி அடிப்படையில் பணிகளை மாற்றி வழங்கலாம். உள்ளாட்சி நிர்வாகத்துக்குத் திடக் கழிவு மேலாண்மை பெரிய சவாலாக உள்ளது.

குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரித்தல், மின்னணுக் கழிவை முறையாக அகற்றுதல், சிறுதானிய உணவில் உள்ள ஊட்டச்சத்துப் பலன்கள், கடற்கரை தூய்மைப்படுத்துதல், மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாப்பு, திறன்பேசி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுதல், சைபர் குற்றம், பணச் சேமிப்பு, உடற்பயிற்சியின் முக்கியத்துவம், தற்காப்புக்கலை யின் அவசியம், நீர், மின்சாரம், எரிபொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், மழைநீர் சேக ரிப்பு, இயற்கை வேளாண்மை, மாடித்தோட்டம், நீர்நிலைப் பாதுகாப்பு சார்ந்து மக்களிடம் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத் தினால் மக்களை எளிதாகச் சென்றடையும்.

அன்றாடம் எளிதில் மட்கும் பொருள்களைப் பயன்படுத்தல், ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல், கடைக்குச் செல்லும்போது கையை வீசிச் செல்லாமல் துணிப்பை எடுத்துச் செல்வது, டீ-காபி உள்ளிட்ட உணவுப் பொருள்களை சூடாக ஞெகிழிப் பைகளில் வாங்கி வந்து உண்பதைத் தவிர்ப்பது போன்ற ஆலோசனைகள் சிறார் வழியாக மக்களிடம் கொண்டு செல்லும்போது நிச்சயம் செவிமடுப் பார்கள்.

இதுதவிர குளக்கரைகளில் மரக்கன்று நடுதல், விதைப்பந்து தயாரித்தல், சாலை ஓரம்-பொது இடம்-கல்வி வளாகம்-தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல், முதியோர் இல்லம் சென்று உதவுதல், நடைபாதை சீரமைப்பு, வீடுகளுக்குக் காய்கறி விதை-மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபடலாம்.

எந்தெந்த வகையில் மோசடி வலையில் மக்கள் விழுந்து பணத்தை இழக்கிறார்கள் என்பது சார்ந்தும், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் சார்ந்து விழிப்புணர்வு, போதைப்பொருளுக்கு எதிராக, சாலை விதிகளை மதித்தல் ஆகியவை சார்ந்த விழிப்புணர்வுப் பணியில் மாணவர்கள் ஈடுபடலாம். மேற்கூறிய அனைத்து விஷயங்கள் தொடர்பான விழிப்புணர்வை முதலில் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு.

நம் நாடு! நம் மக்கள்! - வகுப்பறைச் சூழ்நிலையைவிட்டு வெளியே வந்து, பணி செய்யும்போது மாணவர்களுக்குள் உற்சாகம் பிறக்கும். நம் நாடு, நம் மக்கள், இந்த மண், காற்றைப் பாதுகாப்பது நமது கடமை - அப்போதுதான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக உணருவார்கள். பல்வேறு தரப்பு மக்களும் எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்து-வளர்ந்து-தொழில் செய்து பணம் ஈட்டுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து அறிந்துகொள்வார்கள்.

நாட்டுப்பற்று வளர, சுற்றுச்சூழல் மீது ஆர்வம் ஏற்பட, தூய்மையின் அவசியத்தை உணர, பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் வளர, பொதுச்சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும் எனும் மனநிலை ஏற்பட, மனிதநேயத்துடன் உதவிட, அனுபவப் பாடம் கற்றிட, பல்வேறு தரப்பட்ட மக்களுடன் கலந்து பழகிட இந்த முயற்சி நல்லதொரு வாய்ப்பு.

மாணவர்கள் படிக்கும் காலத்திலே பல்வேறு இடங்களுக்குச் சென்று சமூகப்பணி செய்வது என்பது அயல்நாடுகள் பலவற்றில் கட்டாயமாக உள்ளது. இது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டும் வருகிறது. நமது பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறையும் இது தொடர்பாக ஆலோசித்து நடைமுறைப்படுத்தினால் இளம் தலைமுறை சிறப்பாக உருவெடுப்பது நிச்சயம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம், திண்டுக்கல்; choraamu@gmail.com

மாதம் ஒரு நாள் கட்டாய சமூகப் பணி
எலான் மஸ்க் மகனுக்கு பெயர் சூட்ட வைத்த ஆசிரியர் | வகுப்பறை புதிது 49

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in