

வளரிளம் பிள்ளைகளின் பெற்றோர் தம் சந்தேகங்களை மனநல ஆலோசகர் டாக்டர் கோமளாவிடம் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் எழுந்து, பிள்ளைகள் நாங்கள் சொல்வதைக் கேட்காமல் எதையாவது கேட்டு அடம் பிடித்து அழும்போதோ, கோபமாக கத்தும்போதோ எங்களுக்கு டென்ஷன் தானா ஏறுது மேடம்.
அந்த நேரத்துல அவங்களை எப்படி கையாளனும்னு தெரியல. பசங்களால எனக்கும் என் மனைவிக்கும் இடையில் சண்டை வருதே தவிர பிரச்சினை தீர மாட்டேங்குது என்றார்.
டீன் ஏஜ் பிள்ளைகளின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எதற்கெடுத்தாலும் அழுவதும், கோபப்படுவதும் இயல்பான ஒன்றுதான். இது புரியாமல், நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு கத்தினாலோ, அடித்தாலோ உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் உள்ள உறவு பாதிக்கும்.
கண்டு கொள்ளாதீர்... அடம் பிடிக்கிறார்கள் என்பதால் அவர்கள்கேட்பதற்கு ஒருமுறை சரி என்று சொல்லிவிட்டால் ஒவ்வொரு முறையும் இன்னும் அதிகமாக அடம்பிடித்து தன் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருங்கள். அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்க. சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தா எதுவும் ஆகிடாது. என்னதான் அடம் பிடித்தாலும் காரியம் நடக்காதுன்னு தெரிஞ்சா அவங்களும் அமைதியாகிடுவாங்க. அப்ப கூப்பிட்டுஉட்கார வச்சு ஏன் அவங்க கேட்ட விஷயத்துக்கு அனுமதி கொடுக்கலை என்பதை எடுத்து சொல்லி புரிய வைங்க. சொல்வதை புரிந்து கொண்டு சரியாக நடக்கும் பொழுது பாராட்டி ஊக்கப்படுத்துங்கள்.
பெற்றோரிடையே புரிதல் அவசியம்: பெற்றோரில் ஒருவர் பிள்ளையை திட்டும்போது மற்றவர் குழந்தைக்கு ஆதரவாக பேசினால் அல்லது நீ பிள்ளையை வளர்க்குறதே சரியில்ல, நீ தான் செல்லம் கொடுத்து கெடுக்குறேன்னு உங்களுக்குள்ள சண்டை போட ஆரம்பிச்சா, உங்க ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி விட்டுட்டு அவங்க தன் காரியத்தை சாதிச்சுக்குவாங்க.
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் இருந்தால் மட்டும்தான் பிள்ளைகளை சரியா வளர்க்க முடியும். உங்களுக்குள்ள இருக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக பிள்ளைகளுக்கு எதிரே சண்டை போடாதீங்க. கணவன் மீது அல்லது மனைவி மீது இருக்கும் கோபத்தை பிள்ளைகள் மீது வார்த்தைகளிலோ செயல்களிலோ காட்டாதீங்க.
வெளியில் தேடுவார்கள்: அம்மா, அப்பாவுக்கு அவங்க பிரச்சினைதான் பெருசா இருக்கு, என் மேல அக்கறை இல்லை என்று நினைச்சா, வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடுவாங்க. அந்த நேரத்தில் தன் மீது எதிர்பாலினத்தவர் யாராவது கொஞ்சம் அன்போடு பேசினால் அது காதல்னு நினைச்சுக்குவாங்க.
புகை, மது போல காதலும் ஒரு போதைதான். காதலிப்பவரை அடிக்கடி பார்க்கணும், பேசணும்னு தோணும் அதுக்காக உங்ககிட்ட பொய் சொல்லவோ, ஏமாற்றவோ தயங்க மாட்டாங்க. காதலிப்பவன் நல்லவன் இல்லை என்று தெரிஞ்சா கூட தன் காதலால் அவனை மாற்றி விட முடியும் என்று நம்புவாங்க.
குழந்தைகளோடு உரையாடுங்கள்: வளரிளம் பருவத்தில் இத்தகைய விஷயங்கள் அவர்களுடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை உரையாடல் வழி பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இந்த வயதில் வருவது உடல் சார்ந்த கவர்ச்சி மட்டுமே, காதல் அல்ல, 25 வயதில் நீ உனக்கான துணையை தேர்ந்தெடுக்கலாம் அதற்கான உரிமை உனக்கு உண்டு.
இப்போது நல்லா படி, உனக்கான சுய அடையாளத்தை உருவாக்கு என்று சொல்லுங்கள். இதற்கு பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவழிப்பது மிகவும் அவசியம். பிள்ளைகளின் நண்பர்களோடும் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியம். பணம் சம்பாதிக்க எந்நேரமும் வேலை, வேலை என இருந்து விட்டு பிள்ளைகள் வழிதவறி போன பிறகு வருத்தப்படுவதாலோ, உன்னால் தான் இப்படியானது என கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதாலோ ஒரு பயனும் இல்லை.
அடையாளத்தை விட்டுச் செல்லுதல்: சில நேரம் தவறுகள் நடந்தாலும் நிபந்தனைகள் அற்ற அன்புடன் குழந்தையை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். நீ என் மானத்தை வாங்கிட்ட, இதுக்கு நீ பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளால் குற்ற உணர்வை பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்தி விடாதீர்கள்.
எதிர்மறை வார்த்தைகள் மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போன்றது. ஆணி பிடுங்கப்பட்டாலும் அதன் அடையாளம் மிச்சம் இருப்பதுபோல உங்கள் வார்த்தைகள் அவர்கள் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடும். இந்த வயதில் அவர்களுக்கு இருக்கும் அளவற்ற ஆற்றலை சரியான திசையில் திருப்பி விடுங்கள்.
அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது கலையை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். வீட்டில் அவர்களுக்கு ஏதேனும் பொறுப்பு கொடுங்கள். இந்த வயதில் தனக்குப் பிடித்தவர்களின் பாராட்டைப் பெற உழைக்கத் தயாராக இருப்பார்கள். உங்கள் நிபந்தனை அற்ற அன்பு அவர்களை தடைகளை தாண்டி சிகரம் தொட வைக்கும் என்று பேசி அமர்ந்தார் டாக்டர் கோமளா.
- கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்; தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com