

மனநல ஆலோசகர் டாக்டர் கோமளா வளரிளம் பிள்ளைகளை கையாள்வது பற்றி பெற்றோர்களிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
அன்பான பெற்றோர்களே! எல்லோரும் உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். நான் சொல்லும்வரை கண்களை திறக்காதீர்கள்.
இப்போது நீங்கள் குரங்கை பற்றி மட்டும் நினைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார். ஒரு நிமிடத்திற்கு பிறகு இப்போது கண்களை திறங்கள், எத்தனை பேர் குரங்கைப் பற்றி நினைக்கவே இல்லை என்று கேட்டபோது ஒருவர் கூட கை உயர்த்தவில்லை.
ஒரு அம்மா எழுந்து கண்ணை மூடியதில் இருந்து குரங்கைப் பத்தி மட்டும்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் மேடம் என்றார். இன்னொருவர் எழுந்து அவங்களாவது ஒரு குரங்கு பத்திதான் நினைச்சாங்க எனக்கு மனசு ஃபுல்லா குரங்கு கூட்டமே இருந்துச்சு மேடம் என்றதும் அரங்கத்தில் சிரிப்பலை.
செய்யக் கூடாததை சொல்லாதீர்! - டாக்டர் கோமளாவும் சிரித்தபடி உங்களுக்கு மட்டுமில்ல மனித மனதின் இயல்பே அப்படித்தான். எதை நினைக்க கூடாதுன்னு சொல்றோமோ அதைத்தான் மனசு நினைக்கும். பெரியவங்களான நமக்கே இப்படி இருந்தால் டீன் ஏஜ் பிள்ளைகளை பற்றி யோசிச்சுபாருங்க.
இந்த வயதில் பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என தீர்மானிக்கும் திறன் இருக்காது. எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும், ரிஸ்க் எடுக்கும் குணமும் அதிகமாக இருக்கும். அதனால் எதை பார்க்க கூடாது என தடை செய்கிறீர்களோ அதில் என்னதான் இருக்குன்னு பார்த்துடலாமேனு நினைப்பாங்க.
அதனால தான் பிள்ளைகளிடம் என்ன செய்யணும்னு சொல்லணுமே தவிர எதை செய்யக்கூடாதுன்னு சொல்லக்கூடாது. இந்த வயதில் நண்பர்கள்தான் முக்கியம்னு நினைப்பாங்க. அதனால் நல்ல நண்பர்களின் சேர்க்கை ரொம்ப அவசியம்.
தவறான பழக்கம் உள்ள நண்பர்கள் அழுத்தம் கொடுத்தாலும் எனக்கு இந்த பழக்கம் வேண்டாம் என்று "நோ" சொல்லும் மன தைரியம் பிள்ளைகளுக்கு வேண்டும். அதுக்கு சின்ன வயசுல இருந்தே அவர்களோட உணர்வுகள் சரியோ தவறோ, அதை வெளிப்படுத்தும் சுதந்திரம் கொடுத்து வளர்க்கணும்.
நண்பர்கள் முன்னே திட்டாதீர்: உனக்கு எதுவும் தெரியாது நான் சொல்றதை மட்டும் கேளு என்று அதிகாரம் செய்து வளர்த்தால், உங்களுக்கு "சரி "என்று சொல்லி பழகியவர்கள் இப்போது நண்பர்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் அதனால் எப்போதுமே அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேளுங்க. அவங்க உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுங்க.
அவங்க சொல்வது உங்களுக்கு சின்ன விஷயமா தோன்றினாலும், இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா என்று சொல்லாமல் அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லைன்னா உங்களால அவங்களைப் புரிஞ்சிக்கவே முடியாதுன்னு நினைத்து உங்களிடம் எதையுமே சொல்ல மாட்டாங்க. அவங்க சொல்றத வச்சு ஜட்ஜ் பண்ணி, அட்வைஸ் பண்ணாதீங்க.
நண்பர்கள்தான் முக்கியம் என்று நினைப்பவர்களிடம் உன் ஃப்ரெண்ட்ஸ் சரியில்ல அவங்களோட பழகாதேன்னு சொன்னா கேக்க மாட்டாங்க. மாறாக உங்களோட பேசுவதை நிறுத்திடுவாங்க. முக்கியமா ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி அவங்கள திட்டாதீங்க. அதை மிகப்பெரிய அவமானமா நினைப்பாங்க. அதனால உங்களுக்கும் அவங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி உருவாகிவிடும்.
மேடம் எந்நேரமும் கண்ணாடி முன்னாடி நின்னு மேக்கப் பண்றதும், போன்ல பேசறது மெசேஜ் அனுப்புறதுமாவே இருக்காங்க. யாரோட பேசுறாங்க என்ன பண்றாங்கன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது. பத்திரிகைல டிவில வர்ற செய்தி எல்லாம் பார்த்தா பயமா இருக்கு. ஏதாவது சொன்னா என்ன நம்ப மாட்டீங்களான்னு அழுகுறாங்க, கத்துறாங்க. எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியவில்லை மேடம் என்றார் ஒருவர்.
இந்த வயசுல தன்னை அழகுபடுத்திக்க நினைக்கிறதும் எதிர் பாலினத்தவர் தன்னை பார்க்கணும் அவங்களோட பேசணும்னு நினைக்கிறதும் ரொம்ப இயல்பான விஷயம் தான். ஏன் இந்த வயசுல நாமும் அப்படி தானே இருந்திருப்போம். நம்ம காலத்துல போன் இல்ல. அது இப்ப இருப்பதால நம்ம பிள்ளைகளுக்கு முகநூல், இன்ஸ்டாகிராமில் முன் பின் தெரியாதவங்களோடவும் பழக வாய்ப்பு இருக்கு. ஆனா அதோட சாதக பாதக அம்சங்கள் என்னென்ன நாமதான் அவங்களுக்கு புரிய வைக்கணும்.
கலந்துரையாடுங்கள்: டிவில வர்ற செய்திகளை பார்த்துட்டு பயப்படுறத விட்டுட்டு, அந்த சம்பவங்களை பத்தி பிள்ளைகளோட பேசுங்க. முன்பின் தெரியாதவங்கள முழுசா நம்பி நம்மைப் பற்றிய தகவல்களை கொடுக்கிறதால என்னென்ன நடக்கும்னு கலந்துரையாடுங்க.
உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது இந்த வயசுல இருந்த போது படிக்காம காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதனால வாழ்க்கையில பாதிக்கப்பட்டு இருந்தா அதைப்பத்தி பேசலாம். ஆனா நீங்க பேசுற விதம் கலந்துரையாடலா இருக்கணுமே தவிர இளைஞர்களை குறை சொல்வதாகவோ அட்வைஸ் பண்ணுவதாகவோ இருக்கக் கூடாது.
பள்ளிக்கூடம் படிக்கிற வயசுல பிள்ளைகளுக்குன்னு தனியா போன் அவசியமில்லை. கரோனா காலத்துல ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக் கொடுத்ததா இருந்தாலும் பாஸ்வேர்ட் போடக் கூடாது என கண்டிப்பா சொல்லிடுங்க. அதுக்கு நீங்க ஒரு முன்மாதிரியா இருக்கணும்.
உங்க போன்லயும் பாஸ்வேர்ட் எதுவும் போடக் கூடாது. போட்டாலும் அது வீட்ல இருக்கும் மத்தவங்களுக்கு தெரியணும். அப்பதான், பிள்ளைகள் நீங்க சொல்வதை கேட்பாங்க. தனக்கு பிடிக்காத ஒன்றை மற்றவர்கள் சொல்லும்பொழுது பெண் பிள்ளைகள் அழுவதும், ஆண் பிள்ளைகள் கோபமாக கத்துவதும் இயல்பான ஒன்றுதான். அவங்க உணர்ச்சி வசப்பட்டு கத்தும்போது நீங்களும் கோபப்பட்டு கத்தாமல் அமைதியாக கையாளுங்கள்.
கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு மேடம். ஆனா பசங்க நாங்க சொல்ற பேச்சை கேக்காம, அதை வாங்கிக் குடுங்க இதை வாங்கிக் குடுங்கன்னு எதையாவது கேட்டு அடம் பிடிச்சு கத்தும்போது டென்ஷன் தானா ஏறுது. எப்படி மேடம் அமைதியா இருக்க முடியும்? என்று கேட்டார் ஒருவர்.
சொல்றேன் என்று தொடர்ந்து பேசலானார் டாக்டர் கோமளா.
(தொடரும்)
- கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்; தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com