பெரிதினும் பெரிது கேள் - 30: வளரிளம் பிள்ளைகளைப் புரிந்து கொள்வோம்!

பெரிதினும் பெரிது கேள் - 30: வளரிளம் பிள்ளைகளைப் புரிந்து கொள்வோம்!
Updated on
2 min read

பள்ளியின் ஆண்டு விழாவோ என்று எண்ணும் அளவுக்கு அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு 9,10, 11,12 வகுப்பு பெற்றோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். "வளரிளம் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?" என்ற தலைப்பில் பேச மனநல ஆலோசகர் டாக்டர் கோமளா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

அவரை அறிமுகப்படுத்திய தலைமை ஆசிரியர் அன்பார்ந்த பெற்றோர்களே! வழக்கத்திற்கு மாறாக இன்று இவ்வளவு பெற்றோர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. இன்றைய கூட்டத்தின் தலைப்பும், வந்திருக்கும் சிறப்பு விருந்தினரும் தான் அதற்கு காரணம் என்பதும் உங்கள் பிள்ளைகளை கையாள நீங்கள் எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்பதும் இதிலிருந்து புரிகிறது.

உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் இந்த கூட்டம். நம்ம சிறப்பு விருந்தினர் பேசுவதற்கு முன்னால் உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் உள்ள பிரச்சினைகள் பற்றியும் உங்கள் பிள்ளைகளிடம் உள்ள எந்த விஷயத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்பது பற்றியும் நீங்கள் சொன்னால், அதற்கான தீர்வுகள் குறித்து டாக்டர் பேச வசதியா இருக்கும் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

சமாளிக்க முடியவில்லை! - உடனே ஒருவர் எழுந்து சார் எம் புள்ளகிட்ட ஒரு பிரச்சினை இருந்தால் சொல்லலாம், மொத்த பிரச்சினையுமே புள்ளையா வந்து பொறந்து இருக்கு, என்னத்த சொல்ல என்றதும் அரங்கம் முழுவதும் சிரிப்பலை. மற்றொருவர் எழுந்து, 8-வது வரைக்கும் நல்லாதான் சார் இருந்தான்.

இப்ப நான் சொல்றது எதையும் அவன் கேட்கிறதில்லை. ஸ்கூல்ல இருந்து வந்து, பைய தூக்கி மூலையில் போட்டுட்டு வெளியே போனா 8, 9 மணிக்கு மேலதான் வீட்டுக்கு வருவான். எங்கடா போனேன்னு கேள்வி கேட்டா பதில் சொல்றது கிடையாது. சாப்பிட்டு, தூங்கிடுவான், படிக்கிறதே கிடையாது என்றார்.

என் புள்ளையும் எந்நேரமும் பிரண்ட்ஸ்களோடுதான் ஊர சுத்திகிட்டு இருக்கான் சார். நல்ல பிரண்ட்ஸ்ங்களா இருந்தாலாவது பரவால்ல ஒவ்வொருத்தனும் தலை முடிய கலர் அடிச்சுக்கிட்டு காதுல கம்மல் போட்டுக்கிட்டு சுத்துறானுங்க. அதுல ரெண்டு பேரு டாஸ்மாக் கடை வாசலில் நிற்கிறதையும், தம் அடிக்கிறதையும் நானே பார்த்து இருக்கேன்.

எங்க இவனும் கெட்டுப் போயிடுவானோன்னு பயமா இருக்கு. அவங்களோட சுத்தாதன்னு சொன்னா என் ஃப்ரெண்ட்ஸ்ங்கள பத்தி எனக்கு தெரியும் நீங்க ஒன்னும் சொல்லத் தேவையில்லைன்னு கத்துறான் என்றார்.

இப்பல்லாம் பேசுறதே இல்லை! - அடுத்து ஒரு அம்மா எழுந்து சார் பையனுங்களே தேவலாம். இந்த காலத்துல பொண்ணுங்கள வளர்க்கறது ரொம்ப கஷ்டம்.வீட்ல எந்நேரமும் போனோடவே சுத்துறா. என்னதான் பண்றான்னு பாக்கலாம்ன்னுபக்கத்துல போனதும் ஆஃப் பண்ணிடுறா.

இவ இல்லாத நேரத்துல எடுத்து பார்க்கலாம்னா பாஸ்வேர்ட் போட்டு வச்சிருக்கா. வர வர மார்க் எல்லாம் ரொம்ப குறையுது ஒரு மணி நேரத்துக்கு மேல போன் எடுக்க கூடாதுன்னு சொன்னா ரூமுக்குள்ள போய் பூட்டிக்கிட்டு அழுகுறா. சாப்பிட மாட்டேங்குறா. என்ன பண்றதுனே தெரியல.

முன்னாடி ஸ்கூல்ல என்ன நடந்தாலும் என்கிட்ட வந்து சொல்லுவா. இப்பல்லாம் எதுவுமே பேசறது இல்ல. ஏதாவது நல்லது சொன்னா கூட சும்மா என்னை திட்டிக்கிட்டே இருப்பீங்களான்னு கேட்குறா. நேத்துஅவளோட ஃபிரண்டுக்கு யாரோ ஒரு பையன் லவ் லெட்டர் குடுத்து பெரிய பிரச்சினை ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு ஆம்பள பசங்களோட பார்த்துப் பழகு, படிக்கிற வயசுல இந்த மாதிரி எல்லாம் பிரச்சினைல நீயும்மாட்டிக்காதன்னு சொன்னேன்.

அட்வைஸ்பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா இதனாலதான்நான் எதுவுமே உங்ககிட்ட சொல்றதில்லைங்கிறா. பெத்தவங்க எதுவுமே சொல்ல கூடாதா? அவங்க நல்லதுக்குதான் சொல்றோம்னு ஏன் இந்த பசங்க புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க என்ற குரல் தழுதழுக்க கூறி அமர்ந்தார்.

சில நிமிடம் அமைதி நிலவியது. டாக்டர் கோமளா எழுந்து ஒலிபெருக்கி முன் நின்றுஉணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த பெற்றோர்களை கூர்ந்து பார்த்தபடி பேசலானார்.

சொல்லும் விதம் தவறு: அன்பு பெற்றோர்களே உங்களோட எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன். முதல்ல நாம ஒரு விஷயத்த புரிஞ்சுக்கணும். இந்த காலகட்டம் உங்க பிள்ளைகளுக்கு ரொம்ப மன அழுத்தங்களையும், போராட்டங்களையும் தரக்கூடிய பருவம். ஹார்மோன் மாற்றங்களாலும் அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களாலும் தான் யார் என்ற அடையாளத்தை தேடும் வயது இது.

முன் மூளை இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாததால், தான் செய்வது சரியா, தவறா என்று தீர்மானிக்கவோ, சரியான முடிவு எடுக்கவோ முடியாமல் தடுமாறும் வயது. வெற்றி தோல்வியை சரியாக எதிர்கொள்ள முடியாமலும் கோபம், ஏமாற்றம், வருத்தம், பொறாமை போன்ற உணர்வுகளை கையாளத் தெரியாமலும் தவிக்கும் வயசு இது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் எழுந்து அவங்களுக்கு இது எதுவும் தெரியாதுன்னு தானே மேடம் நாங்க சொல்றத கேளுங்கன்னு சொல்றோம் அதையும் கேட்க மாட்டேங்கிறாங்களே என்ன பண்றது என்றார்.

சார் நீங்க சொல்ற விஷயம் சரியா இருந்தாலும் சொல்ற விதம் தவறாக இருந்தால் பசங்க அதைக் கேட்க மாட்டாங்க. அவங்க தன்னை ஒரு வளர்ந்த ஆணாகவோ, பெண்ணாகவோ கருதுவதால் உனக்கு எதுவும் தெரியாது நான் சொல்றத மட்டும் செய்யுன்னு சொன்னா அவங்க ஈகோ பாதிக்கப்படும். அதனால நீங்க சொல்ற எதையும் கேட்க மாட்டாங்க. மேலும் எதை நீங்க செய்யக் கூடாதுன்னு சொல்றீங்களோ அதை வேணும்னே செய்வாங்க. ஏன் தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினார்.

ஏன் மேடம் என்று ஒருவர் கேட்கவே

தொடர்ந்து பேசலானார் டாக்டர் கோமளா.

(தொடரும்)

கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்

தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in