

மிமாலினி தினந்தோறும் பள்ளிக்குச் சென்று வரு ம்போதெல்லாம் தன் வீட்டுக்கு அருகில் உள்ள வாய்பேசாதோர் காப்பகத்தை பார்த்துக் கொண்டே வருவாள்.
ஒரு நாள் சென்று வாய் பேச இயலாத, நடக்க முடியாமல் தவழும் குழந்தைகளை அருகருகே அழைத்து அன்பு காட்டி, சிறு சிறு விளையாட்டு விளையாடினாள். குழந்தைகளுக்கோ மாலினியை மிகவும் பிடித்துப் போயிற்று. ஒவ்வொரு நாளும் அவள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
வரும்போதெல்லாம் கதை, நகைச்சுவை, பழமொழி எல்லாம் சொல்லிக் கொடுப்பாள். குழந்தைகளுக்குத் தேவையான இனிப்பு விளை யாட்டுப் பொருளைப் பரிசாக தருவாள். காப்பக அதிகாரி, மாலினியை அணுகி நாளை மாற்றுத்திறனாளி தின சிறப்பு விருந்தினராக பேசுவதற்கு அழைத்தார்.
அம்மா, அப்பாவிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டு விழாவிற்கு அழைத்தாள். அரங்கம் நிறைந்து குழந்தைகள் தயாராக அமர்ந்த நேரம் மாலினியும் பெற்றோரும் காப்பகத்திற்குள் நுழைந்தனர். அவர்களைக் கண்டவுடன் குழந்தைகள் கைதட்டி மிகுந்த உற்சாகத்தோடு ஆரவாரம் செய்தனர்.
மாலினி மேகம் பொழிவது போல் பேசியும் இடிமுழக்கமாய் முழங்கி இன்னிசைத்து, நகைச்சுவையாகவும், உருக்கமாகவும் நவரசத்தோடு பேசி அசத்தினாள். நிகழ்ச்சி முடிந்து மாலினி கீழே இறங்கும் போது குழந்தைகள் மற்றவர்களை எல்லாம் கடந்து விட்டு அவள் கையை குலுக்கி ஆரவாரம் செய்தனர். அதில் ஒரு குழந்தை மட்டும் அவள் அருகில் சென்று முணுமுணுத்து சி.... சிறப்பு என்று கூறியது. வாய் பேச முடியாத குழந்தையை பேச வைத்ததை நினைந்து பேரானந்தம் அடைந்தாள். மாலினியின் பேச்சு கேட்க விருப்பம் இல்லாதவரையும் விரும்ப செய்யும் அளவிற்கு அமைந்தது.
இதைத் தான் வள்ளுவர்,
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் - குறள்: 643
என்கிறார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்