பெரிதினும் பெரிது கேள் - 28: பதின்பருவத்து காதல் ஹார்மோன்களின் சேட்டையே!

பெரிதினும் பெரிது கேள் - 28: பதின்பருவத்து காதல் ஹார்மோன்களின் சேட்டையே!
Updated on
2 min read

மதியம் கடைசி வகுப்பில் பாடம் நடத்தினால் மாணவர்கள் சரியாக கவனிக்க மாட்டார்கள் என்பதால் ஆசிரியர் திலீப் ராஜு மாணவர்களோடு பேசுவதற்கு அந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்வார். மாணவ மாணவியரும் அந்த உற்சாகம் நிறைந்த வகுப்புக்காக காத்திருப்பர்.

என்ன பிள்ளைகளா இன்னைக்கு எதைப் பற்றி பேசலாம் என்றதும் சார் கதை சொல்லுங்க, தலைவர்களைப் பற்றி சொல்லுங்க, எங்களை படிக்க விடாமல் நிறைய விஷயம் கவனத்தை திசைதிருப்புது அதை பத்தி பேசலாம் சார் என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள். வெரி குட், எதெல்லாம் உங்க கவனத்தை திசைதிருப்பதுனு சொல்லுங்க என்றார்.

செல்போன், நண்பர்கள், ஆன்லைன் விளையாட்டு, டிவி... அருள் எழுந்து, சார் எங்க மன உளைச்சலுக்கு காரணமே மதிப்பெண்ணும் மதிக்காத பொண்ணும்தான் சார் என்றதும் ஹோவென்ற சத்தத்துடன் அனைவரும் கைகளை தட்டினர். சார் எனக்கு என் அப்பாதான் வில்லனே என்று அந்தோணி எழுந்து சொன்னதும் ஆமோதிப்பதுபோல் பல குரல்கள் ஆமாம் சார் என்றன.

எங்களை நம்பவே மாட்டாங்களா? - ஏன் அப்படி சொல்ற? டிவி பார்க்காத, செல்போன்ல விளையாடாதன்னு நொய் நொய்யின்னு ஏதாவது சும்மா சொல்லிட்டு இருப்பார் சார். உன் தம்பியை பாரு எவ்வளவு நல்லா படிக்கிறான், உன்ன பத்தி குறை சொல்லாதவங்களே கிடையாதுன்னு திட்டுவார். என் தம்பி நல்லா படிச்சா அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும். அவன் பிறக்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சினையே கிடையாது என்றான் ரஹ்மத்துல்லா.

சார் ஆம்பள பசங்களுக்கு அப்பாக்கள் வில்லன்னா எங்களுக்கு அம்மாக்கள்தான் வில்லிகள் என்றாள் சந்திரா. ஆமா சார் அங்க நிக்காத, இங்க நிக்காத, ஏன் இவ்வளவு லேட்டு, எத்தனை தடவைதான் கண்ணாடிய பாப்ப, துப்பட்டாவ ஒழுங்கா போடுன்னு ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க என்றாள் ருக்கு.

அதுவும் என்னோட பிரண்ட்ஸ் முன்னாடி வேணும்னே அம்மா திட்டுவாங்க பாருங்க அப்பதான் பயங்கர கோபம் வரும். பிரண்ட்ஸ் வீட்டுக்கு போய் படிக்கிறேன்னு போனா கொஞ்ச நேரத்துலையே யார் கூட இருக்கேன்னு பாக்குறதுக்காக வீடியோ கால் பண்ணி பேசுவாங்க. ஏன் சார் இந்த அம்மா, அப்பா எங்களை நம்பவே மாட்டாங்களா? ஆம்பள பசங்களோட பேசினாலே கெட்டுப் போயிடுவோமா சார் என்று உஷா கேட்டதும் அதை ஆமோதிப்பதுபோல் அனைவரும் கைகளை தட்டினார்கள்.

சார் லவ் பண்ண தப்பா? சினிமாவில் லவ் பண்ணா கைதட்டுறாங்க இலக்கியத்துல அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு காதலை அமர காதல்னு கொண்டாடுறாங்க. நிஜ வாழ்க்கையில பசங்க லவ் பண்ணா மட்டும் ஏன் சார் வில்லன்ங்களா ஆயிடறாங்க என்று மாலா கேட்டதும் இன்னும் அதிக கைதட்டல் எழுந்தது.

எப்ப லவ் பண்ணலாம்? - அவர்கள் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் நல்லது பிள்ளைகளே! தயங்காம உங்க மனசுல இருப்பதை எல்லாம் கேள்விகளா எழுப்பினதுக்கு பாராட்டுக்கள். சரி உங்க கடைசி கேள்வியான காதலைப் பத்தி பேசலாமா? லவ் பண்றது தப்பானு கேட்டீங்க, அதுக்கு என்னோட பதில் தப்பே இல்லை.

ஆனா எப்ப லவ் பண்ணலாம் அப்படிங்கறது ரொம்ப முக்கியமான விஷயம். உங்க வயசுல ஆணைப் பார்த்தா பெண்ணுக்கும், பெண்ணைப் பார்த்தா ஆணுக்கும் ஏற்படக் கூடிய கவர்ச்சி இயல்பானது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனுஷன் குகையில வாழ்ந்த காலத்திலேயே இனப்பெருக்கத்திற்காக மூளையால் தூண்டப்பட்ட ஹார்மோன் சுரப்புகளில் இன்றுவரை மாற்றமே இல்லை. அதனால் துணை தேடுதல் என்பது இயற்கையிலேயே மூளையில் இருக்கும் முன் பதிவு.

பருவ வயது வந்ததும் ஹார்மோன்களின் தூண்டுதலால் இது இன்னும் அதிகமாக ஊற்றெடுக்கிறது. பசி, தூக்கம், கோபம் வருத்தம் போல இந்த வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியும் இயல்பானது. சினிமாவில் நீங்கள் பார்க்கும் காதலுக்கும் நிஜ காதலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சினிமா ஹீரோக்கள் செய்வதை எல்லாம் நம்மால் நிஜ வாழ்க்கையில் செய்யவே முடியாது.

லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி என நிறைய உதாரணம் சொன்னீங்க. அவங்களுக்கும் உங்கள மாதிரி டீனேஜ்தான் என்பதில் சந்தேகம் இல்லை ஆனா அவங்க காலத்தில் 13, 14 வயதில் கல்யாணம் பண்ணிடுவாங்க. இப்ப குறைஞ்சது 24 25 வயசுவரை படிச்சு, நல்ல வேலையில செட்டில் ஆன பிறகுதான் கல்யாணம் பண்ண முடியும்.

இந்த வயசுல லவ் பண்றேன்னு கவனத்தை சிதற விட்டா உங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பு நிரந்தரமாகிவிடும். நாம இன்னும் குகை மனிதர்கள் இல்லை காலம் நிறைய மாறிடுச்சு. படிச்சு நீ யாருன்னு புரிஞ்சுகிட்டு, உன் திறமைகளை வளர்த்துக்கிட்டா நல்ல வேலை கிடைக்கும். உன் சொந்த காலில் நிற்கும்போது உனக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்து காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம். காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி தானே தவிர காதலே வாழ்க்கை கிடையாது. உங்க எதிர்காலத்தை ஒப்பிடும்போது வேறு எதுவும் முக்கியம் கிடையாது. புரிஞ்சுதா என்று கேட்டார் ஆசிரியர்.

சார் இதுவரை அமரக் காதல்னு நாங்க நினைச்சுகிட்டு இருந்ததெல்லாம் ஹார்மோன்களால் ஏற்படும் இனக்கவர்ச்சிதான்னு அறிவியல் பூர்வமா புரிய வச்சிட்டீங்க. ஆனா எங்க உணர்வுகளை எப்படி சரியா முறைப்படுத்தணும்னு சொல்லித்தாங்க சார் என்றான் விக்டர். சரி சொல்றேன் என்று பேச்சை தொடர்ந்தார் ஆசிரியர் திலீப்.

(தொடரும்)

கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.

தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in