

ஆங்கில கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய ‘ரோட் நாட் டேக்கன்’ என்ற கவிதையை ஆசிரியர் டோமினிக் வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். இரண்டு பாதைகளில் ஒன்று பலரும் பயணித்து நடப்பதற்கு ஏதுவான பாதையாக இருந்தது. மற்றொன்று யாரும் நடக்காத கரடு முரடானதாக இருந்தது. பலத்த சிந்தனைக்கு பிறகு இரண்டாவது பாதையை கவிஞர் தேர்ந்தெடுப்பதாக கவிதை முடிந்திருந்தது.
ஆசிரியர் மாணவர்களிடம் இப்படிப்பட்ட இரண்டு பாதையில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்றார். மாணவன் முத்து, சார் நான் முதல் பாதையை தேர்ந்தெடுப்பேன். கரடு முரடான பாதையில் கஷ்டப்பட்டு நடப்பதை விட ஏற்கெனவே இருக்கும் நல்ல பாதையை தேர்ந்தெடுப்பதுதானே புத்திசாலித்தனம் என்றான்.
எதிர்காலத்தை செதுக்குபவர்
மாணவி சப்திகா, சார் நான் இரண்டாவது பாதையைதான் தேர்ந்தெடுப்பேன். ஏற்கெனவே மத்தவங்க நடந்த பாதையில் சுலபமா நடப்பதை விட கரடு முரடான பாதையில் நடந்து புதுசா ஒரு பாதையை உருவாக்கினா நமக்கு பின்னாடி வர்றவங்களுக்கு நாம உதவி செய்த மாதிரி இருக்கும் இல்லையா என்றாள்.
வெரி குட் சப்திகா, இந்த கவிதை சொல்ல வரும் கருத்தும் இதுதான். நமக்கு முன்னாடி வாழ்ந்த விஞ்ஞானிகள் இரண்டாவது பாதையை தேர்ந்தெடுத்ததால்தான் இன்றைக்கு நாம பல அறிவியல் கண்டுபிடிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது வாழ்பவர்களில் அப்படி சொல்லக் கூடியவர்கள் பில்கேட்ஸ், சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் போன்றவர்கள். இதில் எலான் மஸ்க்தான் எதிர்காலத்தில் நாம் பயன்படுத்த போகும் தொழில்நுட்பங்களின் முன்னோடியாக இருப்பார் என்கிறார்கள். அப்படி என்ன சார் அவர் செய்திருக்கார்? அவரைப் பற்றி சொல்லுங்க சார் என்றாள் ஷர்மிளா. பாடத்திற்கு அப்பால் பல தகவல்களை பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் மகிழ்ச்சியுடன் சொல்லத் தொடங்கினார்.
எலான் மஸ்க் தென்னாபிரிக்காவில் பிறந்தவர். படிப்பில் படு சுட்டி, ஆனால் தனிமை விரும்பி. இதனால் சக மாணவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானார். சிறுவயதிலேயே பெற்றோர்களிடையே மணமுறிவு ஏற்பட்டதால் அப்பாவுடன் வாழ்ந்தார். ஆனாலும் தந்தையும் எலான் மீது பாசத்தை காட்டாமல் கொடுமைப்படுத்தினார்.
தன் துன்பங்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப ஒரு நாளில் பத்து மணி நேரத்துக்கு மேலாக அறிவியல் சார்ந்த புத்தகங்களில் மூழ்கிக் கிடப்பார் எலான் மஸ்க். அதிலும் ஐசக் அசிமோவ் எழுதிய எதிர்காலம் பற்றிய அறிவியல் புத்தகங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.
பல சோதனைகளை வீட்டிலேயே செய்து பார்ப்பது அவரது வழக்கம். 10 வயதிலேயே வீடியோ கேமின் கோடிங்கை கற்றுக் கொண்டு புதிய வீடியோ கேமை உருவாக்கி அதை 500 டாலருக்கு விற்றார். அப்போதே ஒரு பிசினஸ் மேன் ஆக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டது. உயர்நிலைக் கல்விக்குப் பிறகு கனடாவிற்கு சென்று படிப்பை தொடர்ந்தார்.
படிக்க ஆகும் செலவை சமாளிக்க கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்தார். பின் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கிடைத்த ஸ்காலர்ஷிப் உதவியுடன் இரண்டு பட்டப் படிப்புகளை முடித்தார்.
வானுக்கும் பூமிக்கும்
பிறகு ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி எந்த இடத்திற்கும் எளிதில் செல்ல உதவும் கூகுள் மேப் போன்ற ஒரு மென்பொருளை உருவாக்கினார். பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி அதை விற்க முயற்சி செய்தார் முதலில் தோல்வியை மட்டுமே சந்தித்தவர் பிறகு தன் கண்டுபிடிப்பின் பயன்பாட்டை எல்லோருக்கும் புரிய வைத்ததும் பலரும் அதை வாங்க முன் வந்தனர்.
பிறகு எக்ஸ் டாட் காம் என்ற ஆன்லைன் பேமென்ட் நிறுவனமான பேபாலை உருவாக்கினார். நிறைய பணம் சம்பாதித்ததும் அங்கேயே தேங்கி விடாமல் அடுத்தது என்ன என்ற கேள்வியுடன் முன்னேறி செல்லும் இயல்புடையவர் எலான். தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் மின்சார கார் உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்திலும் பூமியிலிருந்து மக்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்தார்.
முதலில் படு தோல்வியை கண்டார். பணத்தை எல்லாம் இழந்து விமர்சனங்களுக்கு ஆளானார். வாழ்க்கையில் எத்தனை இழப்புகளை சந்தித்தாலும் தன் கனவின் மீதும் தன் உழைப்பின் மீதும் கொண்ட நம்பிக்கையால், செய்த தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டு தொடர்ந்து உழைத்தார். இன்று உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னணியில் உள்ளார்.
யாரும் போகாத பாதையை தேர்ந்தெடுத்ததால்தான் மாற்று எரி சக்தியான சோலார் பேனலை உருவாக்கும் சோலார் சிட்டி, மனித மூளையில் சிப்பை பொருத்தி மனிதருக்கும் கம்ப்யூட்டருக்கும் நேரடி தொடர்பை உருவாக்கும் நியூரோ லின்க், புல்லட் ரயிலை விட மூன்று மடங்கு வேகமாக பயணிக்கும் ஹைப்பர் லூப், அதிவேக இன்டர்நெட் தொடர்பை தரும் ஸ்டார் லிங்க் போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களை நிர்ணயிக்கும் பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார் என்றார் ஆசிரியர்.
சார் நாங்களும் அவரை போல யாரும் பயணிக்காத பாதையை தேர்ந்தெடுத்து புதிய பாதைகளை நிச்சயம் உருவாக்குவோம் சார் என்றான் முத்து.
- கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com