பெரிதினும் பெரிது கேள் - 26: படிப்பு திறமையை கலைத்திருவிழாவில் கண்டுபிடித்த ஆசிரியர்!

பெரிதினும் பெரிது கேள் - 26: படிப்பு திறமையை கலைத்திருவிழாவில் கண்டுபிடித்த ஆசிரியர்!
Updated on
2 min read

அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலில் கையெழுத்திட வராத பெற்றோர்களை போன் செய்து வர சொல்லியிருந்தார் ஆசிரியர் மாலவன். ஓய்வறையில் இருந்தபோது ஆறாம் வகுப்பு ஜனார்த்தனனின் அம்மா வந்தார்.

ஏம்மா நேத்து ஓபன் டே-க்கு வராம இன்னைக்கு போன் பண்ணி கூப்பிட்டாதான் வரீங்க என்று சற்று கண்டிப்பான குரலில் கேட்டார். சார் நேத்தே வந்து இருப்பேன். இவன் எல்லா பாடத்திலும் அஞ்சு மார்க் பத்து மார்க்னு வாங்கி இருக்கான். மத்த பேரெண்ட்ஸ் முன்னாடி வந்து கையெழுத்து போட ரொம்ப அவமானமா இருந்ததுசார். அதான் இன்னைக்கு வந்தேன். எவ்வளவோ திட்டி அடிச்சு பாத்துட்டோம் சார்.

அவனுக்கு படிப்பே வர மாட்டேங்குது. போன பரீட்சையில மார்க் கம்மி ஆயிடுச்சுன்னு அவனோட அப்பா அடி அடின்னு அடிச்சாருன்னு வீட்டை விட்டு ஓடி போயிட்டான். ரொம்ப படாத பாடுபட்டு தேடி கண்டுபிடிச்சோம். என்ன பண்றதுன்னே தெரியல சார்.

அம்மா! அவனை படிக்க, எழுத வைத்து பார்த்ததில் அவனுக்கு டிஸ்லெக்சியா என்கிற கற்றல் குறைபாடு இருப்பது தெரிஞ்சுது. சார் என்ன புதுசா ஏதோ சொல்றீங்களே அது என்ன நோயா சார்?

நோயல்ல குறைபாடு

சேச்சே, நோய் எல்லாம் இல்லம்மா, வெறும் குறைபாடுதான். சரியான முறையில் பயிற்சி கொடுத்தா அவனாலயும் நல்ல வாசிக்க, எழுத முடியும். இந்த வருஷம்தான் புதுசா வந்து சேர்ந்ததுனால அவன பத்தி முழுசா தெரிஞ்சுக்க எனக்கு கொஞ்ச நாள் ஆயிடுச்சு. இந்த முறை உங்கள தனியாக சந்தித்து பேசினது நல்லதுதான். அவனை மாதிரி இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்களுக்கு ஸ்கூல் முடிஞ்சதும் ஒரு மணி நேரம் வாசிக்க பயிற்சி கொடுக்கலாம்ன்னு இருக்கிறேன்.

ரொம்ப நன்றி ஐயா. ஒரு மாசமா ஏதோ கலைத்திருவிழா டிராமா டான்ஸ்னு கூத்தடிச்சுக்கிட்டிருந்தான். இனி அதுக்கெல்லாம் நேரம் கிடையாதுன்னு கண்டிஷனா சொல்லிடுங்க சார். நீங்க அவனை படிக்க வச்சிருங்க. படிக்கலனா கண்ண விட்டுட்டு தோல் எல்லாம் உரிச்சு எடுத்துருங்க நான் கேள்வியே கேட்க மாட்டேன்.

அம்மா அடிக்கிறதால திட்டுவதால மட்டும் பசங்க படிச்சிட மாட்டாங்க அவங்களோட பிரச்சினையை சரியா புரிஞ்சுகிட்டு தேவையான பயிற்சிகள் கொடுத்தால் மட்டுமே அதை சரி செய்ய முடியும். அப்புறம் உங்க பையனுக்கு நல்ல நடிப்பு திறமை இருக்கு. அதை கலை திருவிழாவில்தான் கண்டுபிடிச்சேன்.

சார் அவன் என்ன நடிகனாவா ஆகப் போறான்? ஒழுங்கா படிக்க சொல்லுங்க சார். ஏன் நடிகன் ஆனா என்ன தப்பு? ஒரு படம் நடிக்க உலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் டாம் குரூஸோட சம்பளம் எவ்வளவுனு தெரியுமா? 8000 கோடி ரூபாய். 8000 கோடியா அம்மாடியோவ்!

நிறையாக மாற்றியவர்

ஆமா அவரும் உங்க பையன் மாதிரிதான். சின்ன வயசுலயே அவருக்கு கற்றல் குறைபாடு இருந்துச்சு. படிக்கிறது எதையுமே ஞாபகம் வச்சுக்க முடியாது. அவரோட அப்பாவும் ரொம்ப கண்டிப்பானவர். டாம் குரூஸூக்கு கற்றல் குறைபாடு இருக்குன்னு கண்டுபிடிச்சதும் அவங்க அம்மா அவர்கிட்ட சொன்னது என்ன தெரியுமா? உன்கிட்ட என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடி; அதுல தொடர்ந்து முயற்சி செய். அவரும் நிறைய முயற்சி எடுத்தார் குத்து சண்டை வீரர் ஆகணும்னு ஆசைப்பட்டு பயிற்சியில் சேர்த்தார். காலில் அடிபட்டு அதிலிருந்து விலகி விட்டார். கால்பந்து ரொம்ப பிடிச்சதுன்னு அதுல சேர்ந்து நல்லா விளையாடுனார். ஆனால், மேட்சுக்கு முன்னாடி நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியதால டீமை விட்டு வெளியேற்றப்பட்டார்.

11 வயசு இருக்கப்ப அவரோட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மணமுறிவு ஆனது அதுலயும் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளானார். பள்ளியில் நாடகப் பயிற்சியில் சேர விரும்பினார். ஆனால் உடன் இருந்த மாணவர்கள் உனக்கு ரெண்டு லைன் கூட ஞாபகம் வச்சுக்க முடியாது; நீ எல்லாம் பக்கம் பக்கமா டயலாக் படிச்சு நடிக்க போறியா என்று கிண்டல் செய்தாங்க. ஆனால், நாடகப் பொறுப்பாசிரியர் டாமுக்கு சிறு வேடம் தந்து அடுத்த நாள் படிச்சிட்டு வந்து நடிக்கணும் என்றார்.

இரவு முழுதும் கஷ்டப்பட்டு வசனங்களை மனப்பாடம் செய்து அற்புதமாக நடிச்சார். இனி நடிப்புதான் என் வாழ்க்கை என அன்னைக்கு முடிவு செய்தார். கடுமையான தொடர் முயற்சிக்குப் பிறகு ஒரு படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறு வேடம் என்றாலும் சிறப்பாக நடித்ததால் வேறொரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்றைக்கும் 60 வயசு ஆனாலும் மத்தவங்க நடிக்க பயப்படும் அபாயகரமான காட்சிகளில் துணிந்து நடிப்பதால்தான் முன்னணிகதாநாயகனாக அதிக சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கிறார். எந்த துறையாக இருந்தாலும் அதை மனதார நேசித்து உழைத்தால் பெரிய ஆளாக முடியும். உங்க பையனும் அப்படிபெரியாளா ஆவான் என்று நம்புகிறீர்களா?

அவர் சொல்வதை எல்லாம் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்த ஜனார்த்தனின் அம்மா, சார் நீங்க இவ்ளோ சொன்ன பிறகு நான் நம்பாமல் இருப்பேனா. நிச்சயமா நம்புறேன் சார் என் பையனும் ஒருநாள் பெரிய ஆளா வருவான் என்றார்.

கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்.

தொடர்புக்கு:anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in