

ஸ்மார்ட் ஆன உறுதிமொழி எப்படி எடுப்பது என்று ஆசிரியர் முத்து செல்வம் பிளஸ் 2 மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். சார், ஸ்மார்ட் என்பதற்கு என்ன விளக்கம் சொன்னீங்க? இன்னொரு தடவை சொல்லுங்க நான் எழுதி வச்சுக்கிறேன் என்றான் மாணவன் நாகராஜ்.
சரி சொல்றேன், SMART என்றால்
S - SPECIFIC
M - MEASURABLE
A - ACHIEVABLE
R - RELEVANT
T - TIME BOUND
முதல் எழுத்து S – SPECIFIC. எந்த விஷயம் உங்களுக்கு மிகவும் தேவை என்று யோசித்து குறிப்பிட்ட இலக்கை எடுத்துக் கொள்ளுதல். 15 மார்க் எடுக்கும் பூவரசன் நல்ல மார்க் எடுக்கணும்னு நினைக்கிறது குறிப்பிடத்தக்க உறுதிமொழி கிடையாது. 40 மார்க் எடுக்கணும்னு நெனச்சா அது குறிப்பிடத்தக்க உறுதிமொழி.
ரொம்ப பெரிய குறிக்கோள் இருந்து அதை அடைவதற்கான திட்டமே வகுக்காமல் இருந்தால் அதை அடையவே முடியாது. அதனால எத்தனை முறை புத்தாண்டு உறுதிமொழி எடுத்தாலும் என்னால என் குறிக்கோளை அடையவே முடியவில்லை; அப்புறம் எதுக்கு உறுதிமொழி எடுக்கணும்னு விரக்தி அடைந்து விடுவோம்.
அடுத்த நிலைக்கு முன்னேற... MEASURABLE-னா என்ன சார் என்றாள் கோகிலா. 70 மார்க் எடுத்துட்டு இருக்க சித்ரா அடுத்த தேர்வுல எவ்வளவு மார்க் எடுக்குறா, என்ன முன்னேற்றம் அடைந்து இருக்கான்னு பார்க்க முடியுதுன்னா அது அளவிடக்கூடியதுதானே. எப்பவும் உங்களுடைய குறிக்கோளை சிறு சிறு பகுதிகளா பிரிச்சுக்கணும்.
சித்ரா போல ஒவ்வொரு நாளும் ஒரு பாடத்துக்கு ஒரு மணி நேரம் வீதம் 5 மணி நேரம் படிப்பேன்னு நேரம் ஒதுக்கி படிக்கணும். ஒரு வாரத்துக்கு அட்டவணை போட்டு, அதை செயல்படுத்தி, வார இறுதியில் அந்த பாடங்களை தேர்வு எழுதிப் பார்க்கணும். வகுப்பில் பாடம் நடத்தும் போது நல்லா கவனிப்பது, நோட்ஸ் எடுப்பது, நண்பர்களோடு சேர்ந்து படிப்பது எல்லாமே உங்களை அடுத்த நிலைக்கு முன்னேற உதவும்.
மூன்றாவது A – ACHIEVABLE. உங்களுடைய உறுதிமொழி நடைமுறைக்கு சாத்தியமானதா இருக்கணும். 10 மார்க் எடுக்கக்கூடிய ஒருத்தர் அடுத்த தேர்வில் நான் எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு எடுக்கணும்னு உறுதிமொழி எடுத்தால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. அடுத்தது R - RELEVANT. நீங்கள் எடுக்கும் உறுதிமொழி உங்களுடைய நீண்ட காலக் குறிக்கோளுக்கு தொடர்புடையதா, இல்லையா என்று பார்க்கணும்.
உதாரணத்துக்கு உங்களுடைய நீண்ட கால குறிக்கோள், ஐஏஎஸ் ஆகவோ பெரிய கால்பந்தாட்ட வீரராகவோ கிரிக்கெட் வீரராகவோ, இசையமைப்பாளராகவோ ஆகணும் என்பதாக இருக்கலாம். ஆனால், அதுக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத வகையில் எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நானும்செய்கிறேன் என யூடியூப் ஆரம்பித்து வீடியோ போடுவது, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது என நேரத்தையும் ஆற்றலையும் அதில் செலவழிப்பது உங்கள் நீண்ட கால குறிக்கோளை அடைய தடையாகிவிடும்.
விடா முயாற்சி விஸ்வரூப வெற்றி: இறுதியாக T - TIME BOUND. எந்த ஒரு உறுதிமொழியாக இருந்தாலும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். உதாரணமாக ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் காலேஜ் முடித்து இரண்டு ஆண்டுக்குள் ஐஏஎஸ் பாஸ் செய்து விடுவேன் என்ற காலவரையரை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இப்போதிலிருந்து தினமும் செய்தித்தாள், புத்தகங்கள் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சார் நீங்க சொல்றபடி உறுதிமொழி ஸ்மார்ட் ஆனதா இருந்தா அதை நிச்சயமா நிறைவேற்றிட முடியுமா சார் என்று கேட்டான் நாகராஜ். அதில் என்ன சந்தேகம்? நிச்சயமா முடியும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என கேள்விப்பட்டது இல்லையா. தொடர் முயற்சி மட்டுமே எந்த உறுதி மொழியையும் நிறைவேற்ற உதவும்.
பேசிக் கொண்டிருந்த ஆசிரியர் முத்து செல்வம் அதோ பாருங்க என்று கை நீட்டினார். அவர் கைகாட்டிய இடத்தில் மதில் சுவர் மீது ஒரு அரச மரம் முளைத்திருந்தது. அதன் வேர் சுவரில் இறங்கி இருந்ததால் மதில் சுவர் விரிசல் அடைந்திருந்தது. ஒரு விதை மரமாக எடுத்த தொடர் முயற்சி அந்த சுவரையே விரிசல் அடைய வைத்திருக்கிறது. அதுபோல ஒவ்வொரு நாளும் உறுதிமொழியை நிறைவேற்ற நீங்கள் எடுக்கும் சிறு சிறு தொடர் முயற்சியும் அதில் முன்னேற்றத்தையும் உற்சாகத்தையும் தந்து குறிக்கோளை அடைய உதவும்.
நீங்கள் எடுக்கும் உறுதி மொழியை கைப்பட எழுதி உங்கள் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்து, மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். அதை அடைந்து விட்டதாக கற்பனை செய்து மனத்திரையில் பார்க்க வேண்டும். உங்கள் உறுதிமொழி ஸ்மார்ட் ஆனதாக இருந்தால் அதை நோக்கி தொடர்ந்து நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதை அடைய உங்களுக்கு உதவும்.
- கட்டுரையாளார்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம், தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com