பெரிதினும் பெரிது கேள் - 24: ஸ்மார்டான உறுதிமொழி ஏற்போம்!

பெரிதினும் பெரிது கேள் - 24: ஸ்மார்டான உறுதிமொழி ஏற்போம்!
Updated on
2 min read

அரையாண்டு விடுமுறை முடிந்து வகுப்பில் பொருளியல் ஆசிரியர் முத்து செல்வன் விடைத்தாள்களை கொடுத்து வாங்கிய பிறகு மாணவ மாணவியருடன் உரையாட தொடங்கினார். பிள்ளைகளே உங்கள்ல எத்தனை பேர் புத்தாண்டு உறுதிமொழி எடுத்திருக்கீங்க? பாதிப்பேர் மட்டுமே கைகளை உயர்த்தினர்.

சரி, கை தூக்காதவங்க யாராவது எழுந்து ஏன் நீங்க உறுதிமொழி எடுக்கலன்னு சொல்லுங்க என்றார். துடுக்கான மாணவன் பூவரசன் எழுந்து, சார் நானும் ஒவ்வொரு வருஷமும் இனிமே நல்லா படிக்கணும், எல்லா பாடத்திலும் நல்ல மார்க் எடுக்கணும்னு உறுதிமொழி எடுக்கிறேன்; ஆனா அப்படி நடக்கிறதே இல்ல. சரி அப்புறம் எதுக்கு வீணா உறுதிமொழி எடுக்கணும்னு இந்த வருஷம் எந்த உறுதி மொழியும் எடுக்கல சார் என்றான். வகுப்பில் லேசான சிரிப்பலை எழுந்தது.

நல்ல மார்க்னா எவ்வளவு எடுக்கணும்னு நினைக்கிற? நான் பாஸ் பண்ணாலே அது நல்ல மார்க் தான் சார். சரி இன்னைக்கு பேப்பர் கொடுத்தேனே, எவ்வளவு மார்க் எடுத்திருக்க என்றார். அவன் சற்றும் தயங்காமல் 15 மார்க்கு சார் என்றதும் கொல்லென அனைவரும் சிரித்ததில் வகுப்பே அதிர்ந்தது.

சரி, நீ சொல்ற நல்ல மார்க் எடுக்க இதுவரைக்கும் என்ன முயற்சி எடுத்து இருக்க? ஒவ்வொருமுறை பேப்பர்ல ஃபெயில் மார்க் பார்க்கும்போதும் டெய்லி காலைல சீக்கிரம் எழுந்து படிக்கணும், இனிமே ஃபெயில் ஆக கூடாதுன்னு தோணும் சார். ஆனா காலையில எந்திரிக்கணும்னு நினைச்சாலே தூக்கமா வரும் அதனால தூங்கிடுவேன் சார் என்றான் பூவரசன்.

முதன்முறையாக எடுத்த உறுதிமொழி: சரி நீ உக்காரு என்றவர், உறுதிமொழி எடுத்த யாராவது நீங்க என்ன உறுதிமொழி எடுத்து இருக்கீங்கன்னு விருப்பப்பட்டால் சொல்லலாம் என்றார். சித்ரா எழுந்து, சார் நான் இதுவரைக்கும் 60, 70 மார்க்தான் எடுத்துட்டு இருக்கேன். இனிமே எல்லா பாடத்திலும் 90-க்கு மேல எடுக்கணும்னு உறுதிமொழி எடுத்து இருக்கேன் என்றதும் அனைவரும் கைதட்டினர்.

வெரி குட், இந்த குறிக்கோளை அடையஎன்ன திட்டம் வச்சிருக்க? சார் நானும் ஸ்டெல்லாவும் ஒரு வாரம் முழுக்க அன்னன்னைக்கு என்ன படிக்கணும்னு அட்டவணை போட்டு படிக்கப் போறோம் சார். சனி, ஞாயிறுல டெஸ்ட் எழுதிப் பார்த்து தப்பானதை திரும்பி படிப்போம் சார். ஒன்பதாவது வரைக்கும் நானும் பூவரசன் மாதிரிதான் சார் இருந்தேன். அந்த வருஷம்தான் முதல் முறையா இனி பெயிலாகவே கூடாதுனு உறுதிமொழி எடுத்தேன். அன்னையிலிருந்து தினமும் கொஞ்சம் கொஞ்சமா படிக்கிறதால 60, 70 மார்க் வரைக்கும் வாங்க முடியுது.

சரி எது உன்னை உறுதிமொழி எடுக்கவும், அதை செயல்படுத்தவும் உந்தி தள்ளியது? - சார் எங்க அப்பா கூலி வேலை பாக்குறாரு. எங்க வீட்ல பொண்ணுங்க பத்தாவதுலயோ, பிளஸ் 2-லயோ ஃபெயில் ஆனா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. எங்க அக்காவும் அப்படி சீக்கிரமே கல்யாணம் ஆகி இப்ப ரெண்டு குழந்தைங்களோட சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா. ஒரு வாட்டி வீட்டுக்கு வந்தப்ப நீ எப்படியாவது படிச்சு ஒரு வேலைக்கு போயிடு, என்ன மாதிரி கஷ்டப்படாதேனு அழுதுகிட்டே சொன்னா.

தெளிவான பதில் இருக்கா? - அன்னைக்குதான் இனி பெயிலாகவே கூடாதுன்னு முடிவெடுத்தேன் சார். காலேஜ் பீஸ் கட்டி அப்பாவால என்ன படிக்க வைக்க முடியாது. நல்ல மார்க் எடுத்தா ஏதாவது ஒரு கவர்மெண்ட் காலேஜ்ல ஸ்காலர்ஷிப்ல சேர்ந்திடுவேன். படிச்சு ஒரு வேலைக்கு போயிட்டா எங்க அக்கா மாதிரி கஷ்டப்பட வேண்டாம் இல்ல சார் என்ற போது அவள் கண்களில் நீர் திரையிட்டு இருந்தது.

அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த வகுப்பறை மீண்டும் பலத்த கைதட்டலால் அதிர்ந்தது. இம்முறை ஆசிரியரும் சேர்ந்து கைகளை தட்டினார்.

வெரி குட் சித்ரா. நிச்சயமா நீ உன் குறிக்கோள் அடைஞ்சிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஸ்டுடென்ட்ஸ் நாம எதுக்காக படிக்கிறோம், நம்ம எதிர்காலம் எப்படி இருக்கணும் என்ற கேள்விகளுக்கு உங்ககிட்ட தெளிவான பதில் இருந்தா நீங்க எல்லாருமே சித்ரா மாதிரி ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு உங்க குறிக்கோளை அடைஞ்சிடுவீங்க.

அது இல்லாததாலதான் பூவரசன் மாதிரி பசங்க முன்னேற்றமே இல்லாம அதே நிலையில இருக்காங்க. அதோட உங்க உறுதிமொழி ஸ்மார்ட் ஆனதாவும் இருக்கணும். அது படிப்பு சார்ந்ததா மட்டும் இருக்கணும்னு அவசியம் இல்ல. உங்களோட பிற திறமைகளை வளர்ப்பதாகவோ அல்லது கெட்ட பழக்கங்களை விட்டு நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதாகவோ கூட இருக்கலாம்.

அது என்ன சார் ஸ்மார்ட்டான உறுதிமொழி என்று கேட்டான் கரீம்.

சொல்றேன் SMART னா

S - SPECIFIC

M- MEASURABLE

A - ACHIEVABLE

R - RELEVANT

T - TIME BOUND

அதாவது நீ எடுக்கும் உறுதிமொழி குறிப்பிடத்தக்க, அளவிடக் கூடிய, உனக்கு ஏற்புடையதான, ஒரு கால வரையறைக்குள் அடையத்தக்கதாக இருக்கணும். சரி உங்களுக்கு புரிகிறபடி உதாரணத்தோட சொல்றேன். என்ற விளக்கம் ஆரம்பித்தார் ஆசிரியர் முத்து செல்வம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர் எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம், தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in