Published : 02 Jan 2023 04:00 AM
Last Updated : 02 Jan 2023 04:00 AM

வாழ்ந்து பார் ( 23 ) - தங்கை பூனை கேட்கிறீங்களா?

அரிஅரவேலன்

அணங்கு, கணினியைக் கரும்பலகையில் இருந்து சாப்பிடு என்று தேவநேயனைப் பார்த்துக் புத்தகத்தையும் இருக்கையையும் சுட்டிக்காட்டிக் கூறினாள் அருட்செல்வி. அவன் குழப்பமாய் அவளைப் பார்த்தான். என்ன சொன்னாய்? என்று கேட்டான் தேவநேயன்.

அவள் மீண்டும் கூறினாள். அனைவரும் அவர்களது உரையாடலைக் கவனித்தனர். கணினியைச் சாப்பிடா?! என்று கூறிக் குழப்பமாகப் பார்த்தாள் கயல்விழி. அவளைப் பார்த்து, ‘உதிரன்’ என்று அழைத்து ‘வாவ்’ என்று கூறியபடியே வாயில் ஆட்காட்டி விரலை வைத்து அமைதியாக இருக்கச் சொன்னாள் அருட்செல்வி.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்!: அப்பொழுது, அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்து! என்று கூறியவாறே வகுப்பறைக்குள் எழில் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் மிஸ் போயாச்சு. ஏற்கெனவே மூச்சுவிடலாம் என்றாள் அருட்செல்வி. எல்லோர் முகத்திலும் குழப்பம் தெரிந்தது. அதனைக் கவனித்த எழில், ஏன் எல்லோரும் அரண்டுபோய்ப் பார்க்கிறீர்கள்? என்று வினவினார்.

அருட்செல்விக்கு ஏதோ ஆகிவிட்டது. ‘புத்தகத்தை’, ‘கணினி என்கிறாள்; ‘இருக்கை’யை ‘கரும்பலகை’ என்கிறாள்; ‘தேவநேய’னை ‘அணங்கு’ என்கிறாள்; ‘கயல்விழி’யை ‘உதிரன்’ என்கிறாள். அவள்பேசுவதைக் கேட்டுத்தான் குழம்பி இருக்கிறோம் என்றாள் கண்மணி. என்ன ஆச்சு? என்று அருட்செல்வியிடம் வினவினார் எழில்.

பொருளை மாற்றுவோமா?: என் தம்பியும் நானும் ஒரு புதிய மொழியைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதில் பேசினால் இவர்களுக்குப் புரியவில்லை என்று சிரிப்புப் பொங்கக் கூறினாள் அருட்செல்வி. புதிய மொழியா? என்றார் எழில். ஆமாம். ஒரு சொல்லை ஒரே பொருளில் எப்பொழுதும் பயன்படுத்தச் சலிப்பாக இருந்தது.

அதனால், நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் நூறுசொற்களைப் பட்டியலிட்டோம். அந்த சொற்களுக்கான பொருளை மாற்றிவிட்டோம். எடுத்துக்காட்டாக, ‘அப்பா’ என்ற சொல்லுக்குத் ‘தங்கை’ என்றும் ‘சோறு’ என்ற சொல்லுக்கு ‘பூனை’ என்றும் “சாப்பிடு” என்ற சொல்லுக்கு ‘கேள்’ என்று பொருளை மாற்றினோம்.

அப்பாவிடம் சென்று, தங்கை பூனை கேட்கிறீங்களா? என்று கேட்டதும் அவர் திருதிருவென்று விழித்தார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். நாங்களிருவரும் தொடர்ந்து இப்படிப் பேசினோம். இரண்டொரு நாளில் வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கும் எங்களது மொழி புரிந்தது. அப்புறம் அவர்களும் அம்மொழியில் பேசத் தொடங்கினர். விடுமுறை முழுவதும் இந்த விளையாட்டிலேயே மகிழ்ச்சியாகக் கழிந்தது என்று விளக்கினாள் அருட்செல்வி.

ஓ! ஐயா வந்தாச்சு; அப்புறம் பேசலாம் என்பதைத்தான் இவர் உள்ளே வந்ததும் மிஸ் போயாச்சு, ஏற்கெனவே மூச்சுவிடலாம் என்றாயா? என்று வினவினான் அருளினியன். ஆம் என்றாள் அருட்செல்வி. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த எழில், உன் தம்பிக்கும் உனக்கும் ஆக்கச் சிந்தனை (Creative Thinking) சிறப்பாக இருக்கிறது என்று அருட்செல்வியைப் பார்த்துக் கூறினார். ஆக்கச் சிந்தனை என்றால் என்ன? என்று வினவினாள் மதி.

அது ஒரு வாழ்க்கைத் திறன். கற்பனை செய்தல், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றை இணைத்தோ மாற்றியோ புதியதாக ஒன்றை உருவாக்குதல், அல்லது ஏற்கனவே உள்ள எண்ணத்தின் மீள்பயன்பாடு ஆகியவற்றில் ஒருவருக்குள்ள திறனே ஆக்கச் சிந்தனை எனப்படுகிறது என்று விளக்கினார் எழில்.

கற்பனைத்திறன் என்பது கதை, கட்டுரை எழுதுதல்தானே? என்று வினவினான் அழகன். தொலைபேசி, கேமரா, வானொலி ஆகிய மூன்றையும் இணைத்து கைபேசியைஉருவாக்கியது ஆக்கத்திறனா என்று வினவினாள் இளவேனில். சொற்களின் பொருள்களை மாற்றியதால் உருவானதுதானே அருட்செல்வியின் மொழி என்றான் சாமுவேல். எழுதப் பயன்படும் பென்சிலை காதுகுடையப் பயன்படுத்தல்தானே மீள்பயன்பாடு என்றாள் நன்மொழி. ஆம்! ஆம்! ஆம்! ஆம்! என்றார் எழில் சிரித்துக்கொண்டே.

(தொடரும்) கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர் தொடர்புக்கு: ariaravelan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x