பெரிதினும் பெரிது கேள் - 22: மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்

பெரிதினும் பெரிது கேள் - 22: மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டர்
Updated on
2 min read

பெரிய கிளாஸ் வர வர பதில் எல்லாம் ரொம்ப பெருசா இருக்கு, அதைப் பார்த்தாலே பயமா இருக்கு சித்தி. இவ்வளவு பெருசா படிச்சாலே எப்படியும் மறந்துடும் எதுக்கு படிக்கணும்னு தோணுது; என்ன பண்றது சித்தி என்று மாணிக்கம் கேட்டான்.

பயமும் அவநம்பிக்கையும் மறதியோட முக்கியமான நண்பர்கள். நல்ல நினைவாற்றல் வேணும்னா “என் ஞாபக சக்தி ஒவ்வொரு நாளும் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு" என்ற ஆழ்மன கட்டளையை (auto suggestion) திரும்பத் திரும்ப சொல்லி மனசுல பதிய வைக்கணும். சினிமாவில் திரையில பாக்குற படம் மறக்காமல் இருக்கிற மாதிரி பாடத்தையும் ஒரு கதையா மாத்தி மனத்திரைல பார்த்தா மறக்கவே மறக்காது. உதாரணத்துக்கு, நாம பயன்படுத்தும் பழங்கள் உணவுப் பொருட்களில் என்னென்ன அமிலம் இருக்குன்னு உங்க சயின்ஸ் புக்கில் ஒரு கேள்வி இருக்கு இல்லையா? ஆமா சித்தி அதை எப்ப பாத்தாலும் மாத்தி மாத்தி எழுதிடுவேன்.

ரோபோ செய்த சேட்டை: சரி நான் இப்ப சொல்லித்தர மாதிரி படிச்சா மறக்காது. கண்ண மூடிட்டு நான் சொல்றத அப்படியே சினிமா மாதிரி மனசுல காட்சிப்படுத்தி பாரு. மாலிக்னு ஒரு விஞ்ஞானி இருந்தாரு. அவருக்கு ஆப்பிள் சாப்பிடணும்னு ஆசையா இருந்துச்சு. அவரு ஒரு ரோபோவை உருவாக்கி இருந்தார். எந்திரன் படத்தில் வந்த ரோபோ பேரு என்ன?

சிட்டி. கரெக்ட், இந்த ரோபோ பேரு சிட்ரிக். மாலிக் சிட்ரிக்க கூப்ட்டு ஃப்ரிட்ஜ்ல ரவுண்டா ஆப்பிள் இருக்கும், போய் எடுத்துட்டு வான்னு சொன்னாரு. அது போயி எலுமிச்சம் பழத்தை எடுத்துட்டு வந்துச்சு. உடனே மாலிக் இது இல்ல; சிவப்பு கலர்ல ரவுண்டா இருக்கும்னாரு. ரோபோ போயி தக்காளிய எடுத்துட்டு வந்துச்சு. கோவத்துல தக்காளியை தூக்கி வீசி எறிஞ்சார். வாசல்ல நின்ன ஒரு எருது அதை சாப்பிட்டுடுச்சு.

விஞ்ஞானி, ரோபோகிட்ட நல்லா தேடி பாரு உள்ள ரவுண்டா இருக்கும்ன்னு சொன்னாரு. அது திரும்பவும் போய் தேடிப் பாத்துட்டு ஒரு திராட்சைக்குலை வரைந்திருந்த படத்தைக் கொண்டு வந்து கொடுத்துச்சு. விஞ்ஞானிக்கு பயங்கர கோபம் வந்து திராட்சை படத்தை டாரு டாரா கிழிச்சு போட்டாரு. சரி இந்த கிறுக்கு ரோபோ வேலை செய்ய லாய்க்கு இல்லைன்னு அவரோட பொண்ணு வினிய கூப்பிட்டாரு. வினி எட்டிப் பார்த்தா. வினியோட முகத்துல ஏதோ அசிங்கமா இருந்துச்சு. ஏம்மா உன் முகம் இப்படி இருக்குன்னு கேட்டா, நான் முகத்துக்கு தயிர் போட்டேன் அது எனக்கு லாக்டோ கேலமைன் எஃபெக்ட் கொடுக்கும்னு சொன்னா.

சரி மாணிக்கம், திரும்ப கண்ண மூடிகிட்டு நான் சொன்ன கதையை நினைவு படுத்தி பாரு. நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. மாலிக் என்ன சாப்பிட நினைச்சாரு? மாலிக் ஆப்பிள் சாப்பிட நினைச்சாரு.

ஆப்பிள்ல மாலிக் அமிலம் இருக்கு: சிட்ரிக் போய் என்ன கொண்டு வந்துச்சு? சிட்ரிக் போய் எலுமிச்சம் பழம் கொண்டு வந்துச்சு. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் இருக்கு. தக்காளியை எது சாப்பிட்டது?

தக்காளியை ஆக்ஸ் (எருது) சாப்பிட்டுச்சு. தக்காளில ஆக்சாலிக் அமிலம் இருக்கு. திராட்சைப் பழம் வரைஞ்சிருந்த பேப்பரை என்ன பண்ணாரு? திராட்சை பழம் வரைச்ச படத்தை டாரு டாரா கிழிச்சி போட்டாரு. திராட்சைல டார்ட்டாரிக் அமிலம் இருக்கு.

வினியோட முகம் எப்படி இருந்துச்சு? வினியோட முகம் அசிங்கமா இருந்துச்சு. வினிகரில் அசிட்டிக் அமிலம் இருக்கு. தயிர் எப்படி ஆக்கும்னு அவரோட பொண்ணு சொன்னா? தயிர் லாக்டோ கேலமைன் போட்ட மாதிரி ஆக்கும்னு சொன்னா.

தயிர்ல லாக்டிக் அமிலம் இருக்கு. வெரி குட் மாணிக்கம், கண்ண தொற. இனிமே எதுல என்ன அமிலம் இருக்குன்னு கேட்டா மறப்பியா?

வாவ்! சித்தி ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்.

தொடர்பு படுத்தினால் சுலபம்: குட், இப்படி உன் பாடங்களை கதையா மாத்திக்கிட்டா மறக்காம எக்ஸாம்ல எழுதி மார்க் வாங்கிடலாம். அறிவியல்ல முன்னேற்றம் வரவர நம்ம மூளைக்கு வேலையே கொடுக்காமல் அதை சோம்பேறி ஆகிட்டோம்.

செல்போன் வந்த பிறகு நம்ம வீட்ல இருக்குறவங்களோட போன் நம்பரை கூட நினைவுல வச்சுக்காம எல்லாத்தையும் போன்ல ஸ்டோர் பண்ணி வைக்கிறதுனால மூளையோட நினைவாற்றல் குறைந்து போகுது. தெரிஞ்ச விஷயத்தை தெரியாத விஷயத்தோடு தொடர்புபடுத்தி பார்த்தா அது மறக்காது. உதாரணத்துக்கு 9102470815 இந்த போன் நம்பரை நம்ம வசதிபடி 2 அல்லது 3-ஆ பிரிச்சுக்கிட்டு தெரிஞ்ச விஷயங்களோட தொடர்புபடுத்தி பாக்கணும்.

பொதுவா போன் நம்பர் ஒன்பதுலதான் ஆரம்பிக்கும் இல்லையா. அடுத்து அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்தநாள். சுதந்திரம் கிடைத்தது 47-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8வது மாதம் 15ஆம் தேதி.

சூப்பர் சித்தி எவ்வளவு நம்பரை இப்படி ஞாபகம் வச்சுக்க முடியும்?

தொடர்ந்து பயிற்சி செஞ்சிக்கிட்டே இருந்தா ஒரு கம்ப்யூட்டரை விட அதிகமான தகவல்களை நம்ம மூளையில் சேமிச்சு வைக்க முடியும். தேங்க்ஸ் சித்தி, இனி என்னால படிச்சதெல்லாம் ஞாபகம் வைத்து நல்ல மார்க் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருச்சு. (தொடரும்) - கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம், தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in