நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 21: ஆயிரங்களை லட்சங்களாக மாற்றும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 21: ஆயிரங்களை லட்சங்களாக மாற்றும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்
Updated on
2 min read

கடந்த மூன்று அத்தியாயங்களில் குறுகிய கால சேமிப்பு திட்டங்களான தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit), பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்' (Sukanya Samridhi Yojana), ஆண் குழந்தைகளுக்கான ‘பொது வைப்பு நிதி' (Public Provident Fund) என்னும் ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்' (தமிழ் நாட்டில் மட்டும்) குறித்து பார்த்தோம். இந்தத் திட்டங்களை தவிர, அதிக வட்டி தரும் இந்திய தபால் துறையின் சிறந்த சேமிப்பு திட்டங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.

கடைக்கோடி சாமான்யனும் அணுகும் விதத்தில் உள்ள அஞ்சலகங்கள் அட்டகாசமான சேமிப்பு திட்டங்களை கொண்டிருக்கின்றன. பொதுநலன் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேமிப்பு திட்டங்கள் அரசு மற்றும் தனியார் வங்கி சேமிப்பு திட்டங்களைவிட வட்டி விகிதத்தில் சிறந்தவை. இதில் சில ஆயிரங்களில் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் லட்சங்களாக மாறும்.

இவை இந்திய தபால் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதால் 100% பாதுகாப்பானவை. இதில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், கூடுதல் வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இருக்கிறது.

மாதாந்திர சேமிப்பு திட்டம் (Post office monthly savings scheme): இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால் மாதந்தோறும் வருமானமாக அதன் வட்டியை பெறலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். இடையில் 3 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால் 2% வரை தொகை கழிக்கப்படும். 4-ம் ஆண்டில் இருந்து மூடினால் 1% கழிக்கப்படும்.

இதில் ஒருவர் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்யலாம். கூட்டு கணக்காக இருந்தால் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு செயதால் ரூ. 550 வட்டி கிடைக்கும். ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 2,475 வட்டி கிடைக்கும்.

கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra): இது அஞ்சலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில் சிறந்ததாக விளங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் அந்த தொகை இரட்டிப்பாக கிடைக்கும். இதில் குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு தொகை 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தை கணக்காளர் வேறொருவருக்கு மாற்றி தரலாம். 30 மாதங்களுக்கு பிறகு, பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம். இதில் கடன் பெறும் வசதியும் இருக்கிறது.

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் (National Savings Certificate): இந்தத் திட்டம் நிலையான வருமானத்தை தரக்கூடியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் இணையலாம். குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு எதுவும் இல்லை. இந்த முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் வரிசலுகை பெறலாம். தற்போதைய நிலவரப்படி 6.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1000 முதலீடு செய்தால் 5 வருடம் கழித்து 1389.49 ரூபாயாக கிடைக்கும்.

முதியோர் சேமிப்பு திட்டம் (Senior citizens Savings scheme): செல்வமகள் சேமிப்பு திட்டத்தை போலவே இந்த திட்டத்துக்கும் அதிக வட்டி (7.4%) வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட நபரும் இந்த சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்கள் 55 வயதை கடந்திருந்தாலும் இதில் இணையலாம். .

இந்த திட்டத்துக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் 3 ஆண்டுகள் நீட்டித்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு 80சி-ன்கீழ் வரிசலுகை வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும். இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் சேமித்தால் 5 ஆண்டுகளின் முடிவில் வட்டியோடு சேர்த்து ரூ.14.28 லட்சம் கிடைக்கும்.

ஓய்வு காலத்தில் பொருளாதார ரீதியாக பிறரை சாராமல் வாழ விரும்புவோருக்கு இது சிறந்த திட்டமாகும். பெற்றோரின் முதுமை காலம் குறித்து யோசிக்கும் பிள்ளைகள் இந்த திட்டத்தில் அவர்களுக்காக சேமிக்கலாம். (தொடரும்) கட்டுரையாளர் தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in