

சித்தி வந்துட்டாங்க என்று உற்சாகம் ததும்ப மாணிக்கம் அழைப்பதைக் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மலர் தங்கை லதாவை வரவேற்றார். லதா சித்தியை மாணிக்கத்திற்கு ரொம்ப பிடிக்கும். தன் பெற்றோருடன் பேச தயங்கும் விஷயங்களை கூட சித்தியுடன் சகஜமாக பேசுவான்.
காபியுடன் சற்று ஓய்வாக மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மாணிக்கம் மூன்று வருஷம் ஆச்சு உன்ன பார்த்து; நல்லா வளர்ந்துட்ட. சரி, உன் படிப்பு எல்லாம் எப்படி இருக்கு என்றார் லதா.
உடனே மலர் ஆமா, ஆள் மட்டும் தான் வளர்ந்துட்டே போறான். அறிவு குறைஞ்சுகிட்டே போகுது. முன்னாடி 80, 90 மார்க் வாங்கினவன் இப்ப பாஸ் ஆகுறதே பெரிய விஷயமா இருக்கு. கேட்டா, படிச்சதெல்லாம் எக்ஸாம்ல மறந்துடுச்சுன்னு சொல்றான். தூங்குறதுக்கு முன்னாடி கூட போனையே பாத்துட்டு இருந்தா படிச்சது எங்க ஞாபகத்துக்கு வரும்? ஒன்பதாவது வந்துட்டான் அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் எழுதணும். நீயாவது அவனுக்கு புத்தி சொல்லு என்று புலம்பினாள் மலர்.
ஆரம்பிச்சிட்டீங்களா, என்ன பத்தி குறை சொல்லலனா உங்களுக்கு தூக்கமே வராதே என்று குரலை உயர்த்தினான் மாணிக்கம்.
சூழல் சூடாவதை உணர்ந்த லதா,சரி மாணிக்கம் வா நம்ம காலாற நடந்துட்டு வரலாம் என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
நடந்தவாறே, இப்ப கிரிக்கெட் கிளாசுக்கெல்லாம் போறியா என்று கேட்டார்.
தல தோனின்னா! - இல்ல சித்தி கரோனா வந்ததும் கிளாஸ் மூடிட்டாங்க. அடுத்த வருஷம் பத்தாவது போக போற, ஒழுங்கா படிப்ப பாரு கிரிக்கெட்ட அப்புறம் பாத்துக்கலாம்ன்னு அம்மா சொல்லிட்டாங்க என்று வருத்தத்துடன் சொன்னான் மாணிக்கம். அடடா! சின்ன வயசுல இருந்து தோனி மாதிரி ஆகப் போறேன்னு சொல்லுவியே; தோனின்னா உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல என்று கேட்டார் லதா.
என்ன பிடிக்குமா! தல தோனின்னா எனக்கு உயிர் சித்தி என்றவன், தோனியின் வறுமையான இளமைக்காலம், அவரது ஹெலிகாப்டர் ஷாட், இந்திய அணிக்குள் வந்து அவர் படைத்த சாதனைகள், உலக கோப்பையை வென்றது, பெற்ற விருதுகள், கூல் கேப்டனாக விளங்கியது, சிஎஸ்கேக்கு விளையாடியது என அரை மணி நேரம் தோனியின் பெருமைகளை பேசிக்கொண்டே வந்தான்.
இருவரும் ஒரு பூங்காவில் நுழைந்து அமர்ந்தனர். மெதுவாக படிப்பை பற்றி ஆரம்பித்தார் லதா. சரி, முன்னாடி நல்லா படிச்சிக்கிட்டு இருந்தியே இப்ப என்ன ஆச்சு? மார்க் குறையறதுக்கு என்ன காரணம்னு நினைக்குற? நல்லாதான் சித்தி படிக்குறேன், ஆனா எக்ஸாம்ல எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது.
மாணிக்கம் மறதி இருந்தால் எல்லா விஷயமும் மறந்து போகணும் இல்லையா? நாம வீட்ல இருந்து கிளம்பி இங்க வர அரை மணி நேரம் ஆச்சு. இந்த அரை மணி நேரம் தோனிய பத்தி பேச முடியுற அளவுக்கு தகவல்களை ஞாபக வச்சுக்க முடியுதுன்னா, அதுல இருக்கிற ஆர்வம்தான காரணம். அதே ஆர்வத்தோட கவனமா, புரிஞ்சு படிச்சா பாடத்தையும் உன்னால நல்லா ஞாபகம் வச்சு எழுத முடியும். ஆமா, அம்மா ஏதோ நீ தூங்கும்போது கூட போனை வச்சு பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்றாங்களே அது உண்மையா?
இரவா, பகலா என்கிற குழப்பம்: சற்று தயங்கியவன் பிறகு ஆமா சித்தி, டியூஷன் போயிட்டு வந்து கொஞ்ச நேரம் விளையாடலாம்னு போன எடுப்பேன். அம்மா திட்டுனா, சரி தூங்குறேன்னு போர்வையை போர்த்திகிட்டு, போனை உள்ள வெச்சி விளையாடிட்டு இருப்பேன். தப்புன்னு தெரியுது. மூணு வருஷமா பழகிடுச்சா, விடமுடியலை என்றான். படிக்கிறது எல்லாம் உனக்கு மறந்து போறதுக்கு இது ஒரு முக்கியமான காரணம் மாணிக்கம். எப்பவும்தூங்குறதுக்கு முன்னாடி நாம என்ன பார்க்கிறோமோ, இல்ல என்ன நினைக்கிறோமோ அதை பத்திதான் நம்ம மூளை இரவு முழுவதும் யோசிச்சிட்டு இருக்கும்.
அதனால, நீ படிச்சது மறந்துபோய் விளையாடிய விளையாட்டுதான் ஞாபகத்துல இருக்கும். போனோட வெளிச்சம் இது இரவா பகலா என்ற ஒரு குழப்பத்தை மூளைக்கு ஏற்படுத்துவதால் இரவில் சுரக்க வேண்டிய மெலனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது குறைஞ்சிடும். ஞாபகமறதிக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.
ஆன்லைன் விளையாட்டுக்கள்ல கிடைக்கிறரிவார்டுகளால மூளையில் டோபோமின் என்ற ஹார்மோன் சுரந்து அடுத்தடுத்த லெவெலுக்கு போக தொடர்ந்து விளையாட வைக்கும். நேரம் போறதே தெரியாம விளையாடுற அளவுக்கு நம்மை அடிமையாக்கிடும். இரவுல தூக்கம் கெடுவதால மூளை சோர்வாகிடும். வகுப்பில் கவனிக்க முடியாது. கவனிக்காததால பாடம் எதுவும் புரியாது. புரியாம படிக்கிறதால படிச்சத ஞாபகம் வச்சுக்க முடியாது.
ஓ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா சித்தி. சரி இந்த பழக்கத்தை விடனும்னா என்ன பண்ணனும்?
தூங்குறதுக்கு குறைஞ்சது ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி டிவி, போன் போன்ற எந்த கேட்ஜெட்டையும் பயன்படுத்தக் கூடாது. வேணும்னா ஸ்கூல்ல இருந்து வந்ததும் ஒரு அரை மணி நேரம் விளையாடு. அதைவிட உனக்கு பிடிச்ச கிரிக்கெட்டை கிரவுண்ட்ல போய் விளையாடினா உடம்புக்கும் மனசுக்கும் நல்லது. உடம்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நான் அம்மா கிட்ட சொல்லி மறுபடியும் உன்னை கிரிக்கெட்ல சேர்த்துவிட சொல்றேன்.
என் செல்ல சித்தி, என்று சித்தியை கட்டிப்பிடித்துக் கொண்டான் மாணிக்கம். என்னை கிரிக்கெட் விளையாட விட்டா நான் ஏன் போன்ல கேம் விளையாட போறேன்? அதே சமயம் படிக்கவும் நேரம் ஒதுக்கி படிச்சி மார்க் எடுத்துடணும் சரியா. சரி சித்தி. ஆனா எப்படி படிச்சா மறக்காம இருக்கும்? ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன் சொல்றேன், என்று ஆரம்பித்தார் லதா. (டிப்ஸ் தொடரும்...) - கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம், தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com