

பத்தாம் வகுப்பறைக்குள் நுழைந்த கணித ஆசிரியரான சுதன் பல இருக்கைகள் காலியாக இருப்பதை பார்த்து என்ன இன்னைக்கு நிறைய பேர் வரலையா? என்றார். ஆமா சார், நேத்து நைட் ஃபுட்பால் மேட்ச் பார்த்துட்டு லேட்டா தூங்கி இருப்பானுங்க என்றான் முத்து.
எனக்கும் கால்பந்து பிடிக்கும், நானும் கொஞ்ச நேரம் பார்த்தேன். அப்புறம் காலைல பள்ளிக்கு வர தாமதமாகிடும்னு தூங்கிட்டு, காலைல ஹைலைட்ஸ் பார்த்தேன். சார் உங்களுக்கு ஃபுட்பால் வீரர்களில் யாரை ரொம்ப பிடிக்கும்? திறமை அடிப்படையில மட்டும்னா ரெண்டு மூணு பேரை பிடிக்கும். ஆனா திறமை, மனிதநேய பண்புகள், பழக்க வழக்கங்கள் அடிப்படையில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரொம்ப பிடிக்கும். அப்படியென்ன நல்ல விஷயங்கள் அவர் கிட்ட இருக்கு சார்?
வறுமையால் ரொனால்டோ வயிற்றிலிருந்த போதே கலைக்க முற்பட்ட அவரது தாய் பிறகு அந்த எண்ணத்தை கைவிட்டார். சின்ன பையனா இருந்தப்ப கால்பந்து மைதானத்தில் வேலை பார்த்த அப்பாவுடன் செல்லும் போது கால்பந்து விளையாட்டை வேடிக்கை பார்த்து அதன் மீது ரொனால்டோவுக்கு தணியாத ஆர்வம் ஏற்பட்டது.
வறுமையுடன் கால்பந்தாட்டம்: ஏழு வயதில் தந்தை வேலை பார்த்து வந்த உள்ளூர் கிளப்பில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கோல் அடித்து வெற்றி பெறுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட தன் ஆட்டத்தை கண்டு தன் தந்தை அடையும் மகிழ்ச்சி அவருக்கு பெரிய ஊக்கமாக அமைந்தது. சீனியர் மாணவர்களின் லாக்கர்களை சுத்தம் செய்யும் வேலையை தந்தை செய்து வந்ததை உடன் விளையாடுபவர்கள் கிண்டல் செய்தனர்.
அப்போதும் கிண்டல் செய்தவர்களோடு சண்டை போடவில்லை. ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் ஆறு பேர் தங்க வேண்டிய வறுமை. மூன்று வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை. விளையாட நல்ல ஷூ இல்லை. இருந்தாலும் மனம் தளராமல் சிந்தனை முழுவதும் கால்பந்தில் தன் திறமையை வளர்த்துக் கொள்வதிலேயே இருந்ததால் 11 வயதில் போர்ச்சுகல் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
15 வயதில் சீரான இதயத்துடிப்பு இல்லை, தொடர்ந்து விளையாடினால் உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கப்பட்டார். இருப்பினும் அறுவைசிகிச்சை முடித்து டேவிட் பெக்காமின் 7-ம் எண் ஜெர்சியைப் பெற்று அவர் செய்த சாகசங்களால் சிஆர் 7 என்றே அழைக்கப்பட்டார். 2006-ல் குடி நோய்க்கு ஆளாகி அவரது தந்தை இறந்த போது ரஷ்யாவிற்கு எதிரான தகுதி சுற்றில் விளையாட வேண்டியிருந்தது. உலக கோப்பை போட்டியில் போர்சுகல்லுக்கு அது முக்கியமான விளையாட்டு. நான் கால் பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் கனவு, அதை நான் நிறைவேற்றியே தீருவேன் என்று தந்தையின் கனவுகளை சுமந்து களத்தில் இறங்கினார்.
தங்க காலணி விருது: அவரது உணர்வுப்பூர்வமான ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மட்டுமல்ல எதிரணியினரின் மனங்களையும் ஈரமாக்கியது. 2007, 2008 ஆண்டுகளில் அதிக கோலடித்தவர் என்ற பெருமை பெற்று தங்க காலணி விருது பெற்றார். அவரது அணி பிரிமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை வென்றது.
சமூக வலைத்தளங்களில் அதிகமான ரசிகர்களால் பின் தொடரப்பட்டவர் என்ற பெருமையும், முகநூலில் அதிக விருப்பக்குறி பெற்று கின்னஸ் சாதனை படைத்த பெருமையும் இவருக்கு உண்டு. உலகக் கோப்பை போட்டியிலும் கானாவுக்கு எதிரான போட்டியில் முதல் கோல் அடித்து அதன் மூலம் ஐந்து வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களில் முதல் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஐந்து முறை பாலன் டி ஓர் விருதையும் பெற்றதோடு உலகிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தமானார்.
சார், மெஸ்ஸி ஆறு முறை இதே பாலன் டி ஓர் விருதை வாங்கி இருக்கிறாரே என்றான் மோசஸ். உண்மைதான் ஆனாலும் உலக பிரபலங்களின் பட்டியலில் மெஸ்ஸியை விட ரொனால்டோ முன்னிலையில் இருக்க திறமை மட்டும் காரணமல்ல. அவரது சமூக அக்கறையும் மிகப்பெரிய காரணம். விளையாட்டு வீரர்களின் உடல் முழுவதும் பச்சை குத்தி இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், இவரது உடலில் பச்சை குத்தி இருக்காது. காரணம் இவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்பவர். 2013-ல் தனக்கு கிடைத்த பாலன் டி ஓர் விருதை ஏலத்திற்கு விட்டு அதன் மூலம் கிடைத்த 50 கோடி ரூபாயை கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக கொடுத்தார்.
இவர் தாய் புற்றுநோயால் துன்பப்பட்டதைக் கண்டு வேறு யாரும் அவரை போல சிரமப்பட கூடாது என்று அவருடைய சொந்த ஊரில் உள்ள மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக பல கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார். 2015 நேபாள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 கோடி ரூபாய் தந்தார். அமேசானில் காட்டுத்தீ ஏற்பட்ட பொழுது சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தினார்.
தன் அசாத்திய திறமையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ரொனால்டோவை பெருமைப்படுத்தும் விதமாக அவர் பிறந்த தீவான மதினாவில் உள்ள விமான நிலையத்திற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என அந்த நாட்டு அரசு பெயர் சூட்டியது. கருவாக இருந்த போதே கலைக்கப்பட்டிருக்க வேண்டிய ரொனால்டோ இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் கலைக்க முடியாத நம்பிக்கை கனவுகளை விதைக்கும் ஆதர்ச நாயகனாக வலம் வருகிறார்.
நீங்க சொன்னது உண்மைதான் சார். மத்த வீரர்கள் விளையாட்டுல திறமைசாலிகளா இருந்தாலும் இவர்தான் சமுதாயத்துக்கு நிறைய நல்ல விஷயங்களைப் பண்ணி முன்னுதாரணமா இருக்கார். இவர்கிட்ட நாங்க கத்துக்க வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய இருக்கு சார் என்றான் இஸ்மாயில். - கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்., தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com