

உலகம் முழுவதும் கடிதம் எழுத ஆர்வமுள்ளவர்களுக்காகத் தொடங்கப்பட்டதே போஸ்ட்கிராசிங். இந்த www.postcrossing.com இணையதளத்தில் உங்களை பற்றிய விபரங்களை முகவரியோடு பதிவு செய்து கொண்டால், உங்களுக்கு ஐந்து வெளிநாட்டு நண்பர்களின் முகவரிகளை, அஞ்சலட்டை எண்ணுடன் கொடுப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் அஞ்சலட்டைகளை ரூ.15 அஞ்சல் தலை ஒட்டி அனுப்ப வேண்டும்.
அந்த கடிதம் அவர்களைச் சென்றடைந்ததும், அவர்கள் உங்களின் அஞ்சலட்டை எண்ணினை அந்த இணையதளத்தில் உள்ளீடு செய்வர். அதன் பின் உங்களின் முகவரி வேறு ஒருவருக்கு அந்த இணையதளத்தால் அனுப்பப்படும். வேறு ஒரு நாட்டில் இருந்து சற்றும் எதிர்பாராத தினத்தில் உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு அஞ்சலட்டை வரும். அஞ்சலட்டையில் உள்ள எண்ணை அதேபோல் நீங்களும் அந்த இணையதளம் சென்று பதிவிட வேண்டும். இது ஏதோ சிக்கல் நிறைந்த பணி என நினைக்க வேண்டாம். ஒரு நாளுக்கு 100 முறைக்கும் மேல் கைப்பேசியில் உலா வருபவர்களுக்கு இது ஒன்றும் சிரமமான பணியல்ல. இப்படியாக ஐந்து அஞ்சலட்டைகள் உங்களுக்கும் வரும். இது போன்று சர்வதேச கடிதத் தொடர்பினைத் தொடரலாம்.
இத்தகைய போஸ்ட்கிராசிங் முறைக்கு அப்பாலும் இன்று உலகில் அதிகமாகக் கடிதம் எழுதுபவர்கள் ஐரோப்பியர்கள் தான். அதனை அடுத்து அமெரிக்கா, ரஷ்யா. வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் இன்றும் கடிதத்திற்கு முக்கியத்துவம் தருவதற்குக் காரணம் அதன் தனித்தன்மையே. கடிதங்கள் நம்மை உயிர்ப்புள்ளவர்களாக வைத்திருக்கும்.
சுற்றுலா தளங்களில் வண்ணப்படங்களுடன் கூடிய அஞ்சலட்டைகள் விற்பனை செய்வதைப் பார்த்திருப்போம். அதுபோன்ற கடிதங்களை அங்கு வரும் வெளிநாட்டினர் விரும்பி வாங்குவதையும் பார்க்கலாம். அவர்கள் அந்த கடிதங்களை வாங்குவதோடு, அங்கேயே அந்த கடிதத்தினை எழுதி, அஞ்சல் நிலையம் சென்று ரூ.15, அஞ்சல் தலை ஒட்டி அனுப்புவதையும் பார்க்கலாம். அதற்குக் காரணம், அந்த இடத்திற்குச் சுற்றுலா வந்ததன் நினைவாக, அந்த கடிதம் அவர்களுக்கு நீங்கா நினைவுகளைச் சுமந்துகொண்டு இருக்கும் என்பதே.
அடுத்த முறை சுற்றுலாவோ, அல்லது உறவினர்களின் ஊர்களுக்குச் செல்லும் போது, அங்குள்ள அஞ்சல் நிலையம் சென்று நீங்களும் ஒரு கடிதத்தினை உங்களுக்கே எழுதி அனுப்புங்கள். அது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது. ஊரில் உள்ள தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களுக்கும் கடிதம் மூலம் உங்கள் அன்பினைப் பகிருங்கள். குறிப்பாகப் பிறந்த நாள்களின் போது கடிதம் எழுதி வாழ்த்து தெரிவியுங்கள். (உலா வருவோம்) - கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்புக்கு: bbcsakthi@gmail.com