

தலைமை ஆசிரியரும் தமிழாசிரியருமான துர்காவின் வகுப்பு தொடங்கிய சில நிமிடங்களில் பரமேஸ்வரியும் அவள் அம்மாவும் வாசலில் வந்து நின்றனர். குடி நோய்க்கு அடிமையான தந்தை இறந்து போகவே ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு இன்றுதான் பள்ளிக்கு வருகிறாள் பரமு.
டீச்சர் பரமுவுக்கு டிசி கொடுத்துடுங்க அவ இனிமே ஸ்கூலுக்கு வர மாட்டா என்றார் அவளது அம்மா. ஏம்மா? அவ நல்லா படிக்கிறா; கலெக்டர் ஆகணும்ற கனவோட இருக்கா; என்ன பிரச்சினை உங்களுக்கு? கஞ்சிக்கு வழி இல்லாதவங்களுக்கு கலெக்டர் ஆகுற கனவெல்லாம் தேவையா டீச்சர்? இனி நாங்க ரெண்டு பேரும் வேலை பார்த்தாதான் பசி இல்லாம இருக்க முடியும். இவள கட்டி குடுக்கணும், இவ தம்பிய படிக்க வைக்கணும் என்றார் அம்மா. மௌனமாய் நின்ற பரமுவின் கண்களில் கண்ணீர்.
சரி நீங்க வெளியே உட்காருங்க. நான் இந்த வகுப்பு முடிச்சிட்டு வந்து உங்கட்ட பேசுறேன். பரமு நீ உள்ள போய் உட்காரு, என்று சொல்லிவிட்டு வகுப்பை தொடர்ந்தார் ஆசிரியை துர்கா.
தரையில் கண்ட செய்தி: மகாராஷ்டிரா மாநில ஏழாம் வகுப்பு தமிழ் புத்தகத்துல நம்ம புதுக்கோட்டையில் உள்ள ஆதனகோட்டை என்ற கிராமத்தில் வாழ்ற ஜெயலட்சுமின்ற பெண்ணைப் பற்றிய பாடம் இருக்கு. அத பத்தி இன்னைக்கு பேசலாம். ஜெயலட்சுமியின் அம்மா மனநிலை சரியில்லாதவங்க. அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார். வேற வருமானம் இல்லாததால ஜெயலட்சுமி பள்ளிக்கூடம் போயிட்டு வந்த பிறகு முந்திரி கம்பெனியில் வேலைக்கு போய் சம்பாதிச்சு அம்மா, தம்பிய காப்பாத்துனா. வேலைய முடிச்சுட்டு இரவில் தெரு விளக்குல உட்கார்ந்துதான் படிப்பா. ரெண்டு அல்லது மூணு மணி நேரம் தூங்குறதே பெரிய விஷயம். எப்படியாவது படிச்சிட்டா தன் குடும்ப சூழ்நிலை மாறிடும் என்ற நம்பிக்கையோட, படிச்சா. என்.எம்.எம்.எஸ், டிரஸ்ட் போன்ற மத்திய, மாநில அரசாங்கத் தேர்வுகளில்தான் வெற்றி பெற்றதோடு இன்னும் மூணு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து உதவித்தொகை பெற வச்சுருக்கா. பாடப்புத்தகங்கள் தவிர மத்த புத்தகங்கள் வாசிக்கிறதுலையும் அவளுக்கு ரொம்ப ஆர்வம். குறிப்பா நட்சத்திரம், நிலா, ராக்கெட்னு வானியல் சார்ந்த விஷயங்களை தேடித்தேடி படிப்பா. உங்கள மாதிரி பிளஸ் 1 படிச்சிட்டு இருந்தப்ப ஒரு நாள் கீழே கிடந்த ஒரு பேப்பர்ல நாசாவுக்கு போறதுக்கான போட்டித் தேர்வு பற்றிய தகவல்கள் இருந்ததை பார்த்தா. அதில் கலந்துகிட்டு நாசாவுக்கு போக தேர்வானா. ஆனா அமெரிக்காவுக்கு போயிட்டு வர பாதி செலவு அவளே ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.
ஊருக்கு கழிவறை: அச்சச்சோ! லட்சக்கணக்குல செலவாகுமே டீச்சர்; அந்த அக்கா என்ன பண்ணாங்க? அரசு பள்ளி மாணவி நாசா போக பணம் தேவை என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவவே நிறைய பேர் உதவி செய்ய முன் வந்தாங்க. தேவையான அளவு பணம் கிடைச்ச பிறகும் உதவ முன்வந்த ஒரு தொண்டு நிறுவனத்திடம் எனக்கு எதுவும் வேணாம், எங்க ஊருக்கு நீங்க கழிவறை கட்டிக் குடிக்க முடியுமான்னு கேட்டா. அவங்களும் 126 வீடுகளுக்கும் கழிவறைகள் கட்டிக் கொடுத்திருக்காங்க. இப்ப அந்த கிராமமே சுகாதாரமான கிராமமா மாறிடுச்சு. எவ்வளவு நல்ல மனசு டீச்சர் அந்த அக்காக்கு. அவங்களுக்கு கிடைச்ச பணத்தை ஊருக்கு நல்லது பண்ண கொடுத்திருக்காங்களே! அதனாலதான் அவங்க பேர் பாட புத்தகத்தில் வந்திருக்கா?
அதுமட்டும் இல்லம்மா, 2021 வது வருஷம் சில தொண்டு நிறுவனங்கள் செயற்கைக்கோள் உருவாக்கும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. நாடு முழுவதும் இருந்து ஆயிரம் மாணவர்களை தேர்வு செஞ்சாங்க. அதுல ஜெயலட்சுமியும் தேர்வானா. அங்கு கிடைத்த பயிற்சியால எடை குறைந்த சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கினா. கரோனா பரவலுக்கு முன்பு இருந்ததை விட இப்ப வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடின் அளவு குறைஞ்சிருக்குன்னு தன் ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்கா. இதன் மூலமா ஐந்து உலக சாதனை செய்த ஜெயலட்சுமி பல விருதுகளும் பெற்றிருக்கா. இந்த வருஷமும் பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தின் 26 மாவட்டங்களை சார்ந்த 86 மாணவர்களை தேர்வு செய்து அவர்களைக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்கைக்கோள் ஒன்றை ஏவ திட்டமிட்டாங்க.
விண்ணை நோக்கி: இதுலயும் நம்ம ஜெயலட்சுமி அக்கா செலக்ட் ஆகிட்டாங்களா? ஆமா, நவம்பர் 2 முதல் 6 வரை இஸ்ரோவில் நடந்த இந்த முதல் கட்ட செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சியில் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளான சிவதானுபிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன் உட்பட பலரும் இவங்களுக்கு பயிற்சி குடுத்தாங்க. இன்னும் இரண்டு பயிற்சிகளுக்குப் பிறகு இந்த மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிச்சு ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்போறாங்க. இப்ப அந்த அக்கா என்ன படிக்குறாங்க டீச்சர்? வானியல் படிக்க ஆசை இருந்தாலும் ஐஏஎஸ் படிச்சு இந்திய ஆட்சி பணிக்கு வந்தால் நிறைய சமூகப் பணிகள் செய்ய முடியும்றதால கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு படிக்கிறா. ஜெயலட்சுமியின் ஐஏஎஸ் ஆகும் கனவு பலிக்கும்னு நினைக்கிறீங்களா? நிச்சயமா பலிக்கும் டீச்சர். அம்மா, அப்பா யாரோட ஆதரவும் இல்லாம இவ்வளவு சாதனை செஞ்சிருக்காங்க! ஐஏஎஸ் என்ன, அதுக்கு மேலயும் அவங்களால சாதிக்க முடியும் என்றாள் பரமு. சரி, ஜெயலட்சுமியால சாதிக்க முடிஞ்சாஉங்க எல்லாராலும் சாதிக்க முடியுமா முடியாதா? நிச்சயமா முடியும், என்றனர் கோரசாக. வெளியே உட்கார்ந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பரமுவின் அம்மா யாரிடமும் சொல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறினார். பரமுவுக்கு டிசி வாங்கும் எண்ணமும் அவர் மனதை விட்டு வெளியேறி இருந்தது. - கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com