

முதுகுத் தண்டு வழக்கமாக இருக்கக் கூடிய நிலைக்கு எதிரான நிலையில் பண்ணக் கூடிய ஆசனம்தான் விபரீதகரணி. உடல் எடை குறைக்க பெரிதும் உதவக் கூடிய ஆசனம் இது.
தரையில் ஒரு விரிப்பின் மீது படுத்துக் கொள்ளவும். மூச்சை விட்டவாறு இரண்டு கால்களையும், பாதம், முட்டி மற்றும் தொடைகள் இரண்டையும் சேர்த்து வைத்து தரையில் இருந்து, இடுப்பு பகுதியையும் சேர்த்து தூக்க வேண்டும். கைகள் முதுகின் கீழ் பகுதியை (low back) தாங்கிக் கொள்ள வேண்டும். முழங்கை முட்டிகளை தரையில் ஊன்றிக் கொள்ளலாம். இந்த நிலையில் நம்முடைய உடல் தரையில் இருந்து ஒரு டிக் மார்க் போல் காணப்படும். இந்த நிலையில் மூச்சை நமது சக்திக்கு ஏற்றவாறு இழுத்து விட வேண்டும்.
ஆரம்ப காலங்களில் 10- 20 வினாடிகள் மூச்சை இழுத்து விடலாம். தாடையை கீழ் நோக்கி அழுந்த வைக்க வேண்டும். கழுத்தை தரையில் இருந்து தூக்கக் கூடாது, தலையை நன்றாக அழுந்த வைத்து, கண்களை மூடிக் கொண்டு மூச்சை வெளியே விடுவதில் கவனத்தை செலுத்த வேண்டும். அப்படி செய்யும் போது அடி வயிற்றை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். இந்த நிலையில் முன் கூறியது போல் சில மூச்சுக்கள், சில வினாடிகள் இருந்து விட்டு மெதுவாக ஒவ்வொரு முதுகெலும்பாகத் தரையில் படுமாறு காலை மடித்துக் கொண்டே ஆசன நிலையில் இருந்து வெளியே வர வேண்டும். பிறகு சில நிமிடங்கள் அப்படியே தளர்வாக படுக்க வேண்டும். இந்த ஆசனத்திற்கு மாற்று ஆசனமாக மத்ஸ்ய ஆசனம் செய்வது நல்லது.
பலன்கள்: எல்லா சுரப்பிகளையும் தூண்டக்கூடிய ஆசனம் இது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தைராய்டுக்கு மிகவும் உதவி செய்யும். அதேப் போன்று வெரிகோஸிஸ் வெயின் உள்ளவர்களுக்கும் இது பயனளிக்கக் கூடியது. உடல் எடை குறைப்பிற்கு இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் காலக்கட்டத்தில் வரக்கூடிய பிரச்சினைகள், பி சி ஓடி, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த ஆசனம் உதவும்.
யார் செய்யக் கூடாது: மாதவிலக்கு ஆன பெண்கள், கண்களில் அழுத்தம் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தவிர்க்கலாம்.முதுகு வலி, டிஸ்க் ப்ரொலாப்ஸ், குடலிறக்கம், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த ஆசனத்தைப் பழக வேண்டும்.
பயிற்சி எங்களுடையது...முயற்சி உங்களுடையது... ஆரோக்கியம் நம்முடையது.
(யோக பலம் தொடர் நிறைவுற்றது)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்
யோகா செய்பவர்: அம்ருத நாராயணன்
படம்: எல்.சீனிவாசன்
தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்