பெரிதினும் பெரிது கேள் - 15: 65 வயதுவரை தோல்விகளை தோற்கடித்து வெற்றி கண்டவர்

பெரிதினும் பெரிது கேள் - 15: 65 வயதுவரை தோல்விகளை தோற்கடித்து வெற்றி கண்டவர்
Updated on
3 min read

மாலை சிறப்பு வகுப்புகள் முடிந்து பிள்ளைகள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு தான் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தலைமை ஆசிரியர் ஜே.கிருஷ்ணமூர்த்தி எனப்படும் ஜே.கே. அன்று தனியா நின்று கொண்டிருந்த ஒரு மாணவனை பார்த்து, வீட்டுக்கு போகாம இந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்கபா என்று கேட்டார். அவன் அழுதபடியே சார் என் பெயர் முகமது ஆசீம். சார் நான் காலாண்டு தேர்வில் மூன்று பாடத்துல ஃபெயில் ஆகிட்டேன். வீட்டுக்கு போனா அப்பா பெல்ட்டால அடிப்பாருன்னு பயமா இருக்கு; அதனாலதான் இங்கேயே உக்காந்துட்டு இருக்கேன் சார். சரி அவ்வளவுதானே நான் வந்து உங்க அப்பா கிட்ட பேசுறேன். அவர் இனிமே உன்ன அடிக்கவே மாட்டார். அடுத்த தடவை நல்லா படிச்சு மார்க் எடுத்துடு என்றார். சார் நான் எவ்வளவு படிச்சாலும் எனக்கு படிப்பு ஏறவே மாட்டேங்குதே! அப்பாவும், டீச்சரும் நான் வேஸ்ட்னு சொல்றாங்க. ஆமா என்னால யாருக்குமே பிரயோஜனம் இல்ல என்றான் அழுதபடியே. அவனை தன் அறைக்கு அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

சலிக்காமல் முயற்சி செய்! - ஆசிம் இந்த உலகத்துல பிரயோஜனம் இல்லாதவங்கன்னு யாருமே கிடையாது. எல்லாருக்கும் ஏதாவது ஒரு திறமை நிச்சயம் இருக்கும். உன்கிட்டயும் நிச்சயமா எதாவது திறமை இருக்கும். அது என்னன்னு நீ தான் கண்டுபிடிக்கனும். அதுல தொடர்ந்து முயற்சி செய்தால் உன்னாலையும் சாதிக்க முடியும் என்றபடி தன் அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். இந்த புத்தகத்துல வாழ்க்கையில நிறைய முறை தோற்றுப் போய் ஆனா சலிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து ஜெயிச்சவங்க நிறைய பேரை பற்றி கொடுத்திருக்காங்க, படிச்சு பார் என்றார். புத்தக அட்டையில் 'தோல்விகளை தோற்கடித்த சாதனையாளர்கள்' என்ற தலைப்பை பார்த்ததும் ஆர்வத்துடன் அவன் பிரித்த பக்கத்தில் ஒரு வயதான பெரியவர் படமும் அவரைப் பற்றிய தகவலும் இருந்தது. இவர் யார் தெரியுமா என்றதும், சார் இவர் படத்தை கேஎப்சி சிக்கன் கடைகள்ல பார்த்து இருக்கேன். கர்னல் ஹார்ட் லேண்ட் சான்டர்ஸ் இவர் பெயர். ஆறு வயசிலேயே அப்பா இறந்திட்டதால அம்மா வேலைக்கு போனாங்க. அதனால அப்பவே அவருக்கு சமையல் செய்ய கற்றுக் கொடுத்துட்டாங்க. 13 வயசுலையே வீட்டை விட்டுவிட்டு வெளியே போய் வேலைக்கு போனார். வயதை மாற்றி அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்ததால் அங்கிருந்து நீக்கப்பட்டார்.

ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்து அங்கேயும் ஒருத்தரோட சண்டை போட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டார். ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மற்றவர்களை கவரும் விதத்தில் பேசும் திறமை இல்லை என அங்கிருந்தும் விரட்டப்படுகிறார். சரி, அம்மா சொல்லிக் கொடுத்த சமையல் கலையாவது கை கொடுக்குமானு கோழி வறுத்து விற்க முயன்றார். 1009 முறை தோற்ற பிறகு கடைசியில் ஒரு ஹோட்டலில் மட்டும் வாங்கிப் பார்த்து சுவை பிடித்துப் போகவே தொடர்ந்து வாங்குகிறார்கள். அதன்பிறகு அவர் பிரபலமான கேஎஃப்சி முதலாளி ஆகிவிட்டார். ஆனால், அப்போது அவருக்கு வயது 65. 13 வயதிலிருந்து 65 வயதுவரை தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் எப்போதுமே சோர்ந்து போகவில்லை. ஆர்வமுடன் கேட்டுக்கொண்டே அடுத்த பக்கத்தை திருப்பியவன் சார் இது தாமஸ் ஆல்வா எடிசன்தானே என்றான். ஆமாம், இவர் படிக்க லாயக்கு இல்லாதவர்ன்னு ஸ்கூல்ல இருந்து விரட்டப்பட்டவர். பிறகு 1368 கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்.

என்னை கவர்ந்தவர்! - அடுத்த பக்கத்தை திருப்பினான் அசீம் இது யார் தெரியுமா என்று கேட்டதும், சார் இவர்தான் என்னுடைய ரோல் மாடல் உலகப் புகழ் பெற்ற கூடை பந்தாட்டக்காரர் மைக்கேல் ஜோதான் இவருடைய மேட்ச் நிறைய பார்த்திருக்கேன் என்றான். வெரி குட் இவர் தன்னைப் பற்றி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா என்றபடி ஒரு பத்தியை சுட்டிக்காட்டி, இதை படி என்றார். அசீம் உரக்க வாசித்தான். "என் விளையாட்டுக்களில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான பந்துகளை தவறவிட்டிருக்கிறேன். 300-க்கும்அதிகமான விளையாட்டுகளில் பங்குபெறும் வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறேன். 26 போட்டிகளில் என் அணி எனது தவறுகளால் வெற்றி வாய்ப்பினை இழந்து இருக்கிறது. தொடர்ந்து நான் அடைந்த தோல்விகள் தான் என்னை வெற்றியாளன் ஆக்கியது. நீங்கள் தோல்வி அடையாமல் எதையும் சாதிக்க முடியாது. இன்னும் நீங்கள் தோல்வி அடையவில்லை என்றால் இன்னும் வாழவே தொடங்கவில்லை என்று அர்த்தம்".

வாசித்து முடித்ததும் , ‘சார் எனக்கும் இவர மாதிரி விளையாடனும்னு ரொம்ப ஆசை. இதுல சேர்த்து விட சொன்னா எங்க அப்பா முதல்ல எல்லா சப்ஜெக்ட்லயும் மார்க் வாங்கி பாஸ் பண்ற வழிய பாருன்றார்; நான் என்ன செய்யறது புத்தகத்த பார்த்தாலே பயமா இருக்கு என்றான் அசீம். சரி உன் அப்பா கிட்ட பேசி உன்னை கூடைப்பந்தாட்ட அணியில் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. ஆனா நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும் என்றதும் அதுவரை இல்லாத ஆர்வத்துடன் சொல்லுங்க சார் என்ன பண்ணனும் என்றான். தினம் நான் கொடுக்கும் கேள்வி பதில்களை படிச்சிட்டு வந்து எனக்கு டெஸ்ட் எழுதி காட்டணும் என்றதும் சரி சார் என்ற அசீமின் குரலில் சற்றே சுரத்து குறைந்து இருந்தது தினமும் டெஸ்ட் எழுதணும்னதும் பயந்துட்டியா? எதைப் பார்த்து பயப்படுறியோ அதை தொடர்ந்து செய். உன்பயம் போகும் வரை தொடர்ந்து செய்அதில் நீ எக்ஸ்பர்ட் ஆயிடுவ என்றதும்மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொண்டவனாய் சரி சார் நிச்சயம் செய்கிறேன் என்றான். சரி வா வண்டியிலே இரு, உன்னைஉங்க வீட்ல விட்டுட்டு உங்க அப்பாகிட்டையும் பேசிடுறேன் என்றதும் உற்சாகத்துடன் வண்டியில் ஏறிக்கொண்டான் அசீம் - கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம். தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in