பெரிதினும் பெரிது கேள் - 14: கல்வியும் தைரியமும் இரு கண்கள்

பெரிதினும் பெரிது கேள் - 14: கல்வியும் தைரியமும் இரு கண்கள்
Updated on
2 min read

அறிவியல் ஆசிரியை மஞ்சுளா பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக அறிவியல் சோதனைகள் செய்து காட்டுவதோடு அவற்றை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் உதவுவார். அதனால் ஒவ்வொரு நாளும் அவர் கையில் என்ன கொண்டு வருகிறார், என்ன சொல்லித் தரப் போகிறார் என்பதைக் காண பிள்ளைகள் ஆவலோடு காத்திருப்பர்.

அன்றும் ஒன்பதாம் வகுப்பறையில் நுழைந்ததும் கரும்பலகையில் பாய்மங்கள் என்று எழுதி பைக்குள்ளிருந்து கண்ணாடி பீக்கர், கல், பஞ்சு பந்து ஆகியவற்றை மேஜை மேல் எடுத்து வைத்தார். ஒரு பீக்கரில் தண்ணீர் எடுத்துவர சொன்னார். முதலில் ஒரு கல்லை எடுத்து தண்ணீரில் போட்டதும் அது மூழ்கியது. பிறகு பஞ்சை எடுத்து போட்டார். சற்று நேரம் மிதந்த பஞ்சு நீரில் ஊறியதும் மூழ்கியது. பிறகு பந்தை எடுத்து உள்ளே போட்டு அழுத்தி கையை விட்டதும் மேலே எழும்பி மிதந்தது. என்ன பார்த்தீங்க பிள்ளைகளா, என்றார். கல்லின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட அதிகம்ங்கிறதால அது உள்ள போயிடுச்சு. பஞ்சு முதல்ல மிதந்துச்சு அப்புறம் ஏன் மூழ்கிடுச்சு டீச்சர் என்று கேள்வி எழுப்பினாள் விஜயலட்சுமி

என்ன சம்பந்தம்? - பஞ்சின் நிறை முதலில் தண்ணீரின் நிறையை விட குறைவா இருக்கு. அதனால மிதக்குது. தண்ணீரில் போட்டதும் நீரை உறிஞ்சி அதன் நிறை அதிகரிப்பதால் அடர்த்தியும் அதிகரித்து உள்ளே போயிடுது. ஆனா பந்தை உள்ளே போட்ட பிறகு அது ஏன் மேல வருதுன்னா பந்து ரப்பரால் செய்யப்பட்டது. அதோட அடர்த்தி நீரின் அடர்த்தியை விட குறைவாக இருக்கும். தண்ணீரும், பந்தினுள் இருக்கும் காற்றும் பந்தை மேல் நோக்கி உந்துவதால் பந்து மிதக்கிறது. நம் வாழ்க்கையும் இது போலத்தான் என்றார் ஆசிரியர்.

நம் வாழ்க்கைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றாள், அகிலா.எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினை இருக்கும். ஆனா அதை பார்த்து பயப்படாம தைரியமா எதிர்கொள்ளணும். அடர்த்தி அதிகமான கல் தண்ணீரில் மூழ்கிடுவது போல பயம் அதிகமானா பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியாம அதிலேயே மூழ்கிடுவாங்க. சிலர் பஞ்சு மாதிரி முதல்ல தைரியமா இருப்பாங்க; பிறகு பயந்து போய் பிரச்சினைகளில் மூழ்கிடுவாங்க.

காமாட்சி எழுந்து, டீச்சர் எல்லா நேரமும்தைரியம் இருக்க மாட்டேங்குதே, எப்படி தைரியத்தை வரவழைச்சுக்கிறது என்றாள். பெண்களுக்கு அவங்க படிச்ச படிப்புதான் தைரியத்தை கொடுக்கும். எந்த காரணத்தைக் கொண்டும் படிப்பை பாதியில விட்டுடாம ஒரு டிகிரிய முடிச்சு வேலைக்கு போயிட்டா சொந்த கால்ல நிக்கலாம். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நம்மபெத்தவங்களுக்கும் நம்ம ஊருக்கும் நல்லது பண்ணலாம் என்றார் மஞ்சுளா டீச்சர்.

நான் படிக்கணும்! - அன்று பள்ளி முடிந்து காமாட்சி வீட்டுக்கு போனபோது வெத்தலை பாக்கு தட்டோட மாமாவும் சொந்தங்களும் வந்திருப்பதை பார்த்தாள். உடனே அவளுக்கு எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பது புரிந்து விட்டது. படுத்தபடுக்கையாக இருக்கும் காமாட்சியின் தாய்வழி பாட்டி உயிருடன் இருக்கும்போதே ராமசாமிக்கும் காமாட்சிக்கும் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று ஏற்கெனவே ஒரு வாரமாக வீட்டில் பேச்சு அடிபட்டது. அதனால்தான் அவள் பள்ளியிலும் சோகமாக இருந்தாள். காமாட்சி இருக்கும் குக்கிராமத்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுவது வழக்கம். சிறுவயதிலேயே திருமணம், இரண்டு மூன்று குழந்தைகள், வீட்டு வேலை, விவசாய கூலி வேலை, குடிகார கணவனிடம் அடி உதை வாங்கும் சராசரி வாழ்க்கையை நான் வாழ மாட்டேன் என்று ஏற்கனவே மனதில் எண்ணியிருந்த அவளுக்கு இன்று மஞ்சுளா டீச்சர் வகுப்பில் சொன்னதிலிருந்து படித்து நல்ல வேலைக்கு போய் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் வைராக்கியமாக மனதில் கொழுந்து விட்டு எரிந்தது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்கு கல்யாணம் வேணாம் படிக்கணும் என்றாள்.

அவ்வளவுதான் அம்மா ஆவேசம் கொண்டவளாக, அடிப்பாவி இப்ப எங்க ஆத்தா உசுரு ஊசலாடுது, சாப்பாட்டுக்கே கஷ்டமாஇருக்கு, எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு என் தம்பியே வந்து பெரிய மனசுபண்ணி கேட்கிறான். இந்த மகாராணிக்கு படிக்கணுமாம்ல! சிறிது நேரம் அமைதியாக இருந்த ராமசாமி பிறகு, சரிக்கா காமாட்சிக்கு பிடிக்கலைன்னா இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம். அவ படிக்கட்டும் என்று சொந்தங்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான். தனக்கு இந்த தைரியத்தை தந்த மஞ்சுளா டீச்சர் காமாட்சியின் மனதில் மலை போல உயர்ந்திருந்தார்.

கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in