

பதின்பருவம்தான் மனதையும் உடலையும் ஒருசேர ஆராதிக்க சரியான நேரம். நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்தான், பின்னாளில் வரக்கூடிய அத்தனை நோய்களையும் தவிர்க்க உதவும். இந்த காலகட்டத்திற்கு சூர்ய நமஸ்காரம் மிக அற்புதமான ஆசனமாகும். ஆனால், பயிற்சி செய்வதற்கு முன் சிறந்த யோக சிகிச்சை நிபுணரிடம் முறையாக கற்றுப் பிறகு ஆரம்பிக்க வேண்டும். தினமும் காலை, மாலை என சூர்ய நமஸ்காரம் 6 சுற்றுக்கள் செய்ய ஆரம்பிக்க இந்த வயதே ஏற்றது. ஏனென்றால் இந்த வயதில் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் உடல் இலகுவாக வளைந்து கொடுக்கும். சூரியநமஸ்காரம் செய்தாலே பன்னிரெண்டு விதமான ஆசனங்களின் பலன் நமக்கு கிடைத்து விடும் என்பது இதன் தனிச் சிறப்பு.
முதலில் நேராக நின்று கொண்டு மார்புக்குக் குறுக்கே கைகள் இரண்டையும் கூப்பி நமஸ்கார முத்திரையில் வைக்க வேண்டும். பிறகு அப்படியே பின்னோக்கி வளைய வேண்டும். பின், முன்னோக்கி வளைந்து, கீழ் நோக்கிக் குனிந்து முட்டியை மடக்காமல், இரண்டு கைகளாலும் இரண்டு பாதங்களையும் தொட வேண்டும். இது பாதஹஸ்த ஆசனம். அடுத்து வலது காலை மட்டும் முன்புறமாக வைத்து, முன்னோக்கிப் பார்க்க வேண்டும். இது அஷ்வ சஞ்சலனம். அடுத்து, இரு கால்களையும் பின்னே நீட்டி, மலை போல ஆங்கிலஎழுத்தான ‘வி’ வடிவில் நிற்க வேண்டும். இது மேரு ஆசனம்.
பின்னர், உடலின் அத்தனை அங்கங்களும் பூமியில் படுவது போலப் படுக்க வேண்டும். இது அஷ்டாங்க பூமி ஸ்பரிசம். பிறகு, தலையை மட்டும் மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இது புஜங்க ஆசனம். மீண்டும் மேரு ஆசனம், அஷ்வ சஞ்சலனம், பாத ஹஸ்த ஆசனம் என்று பின்னோக்கி ஒவ்வொரு நிலையாகப் போய், இறுதியாக நமஸ்கார முத்திரை நிலையில் நின்று, கைகளைத் தொங்க விட வேண்டும்.
யாரெல்லாம் செய்யக் கூடாது ? - தலைச்சுற்றல் (வெர்டிகோ) மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், கழுத்துவலி, ஸ்பான்டிலைசிஸ், தண்டுவடப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சூரிய நமஸ்காரம் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஆரம்பத்தில் சொன்னதைப் போன்று எந்த ஆசனமாக இருந்தாலும், தேர்ந்த குருவின் வழிகாட்டுதல்படியே யோகப் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்
யோகா செய்பவர்: அம்ருத நாராயணன்
படங்கள்: எல்.சீனிவாசன்
தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்