

பாடங்களைத் தாண்டி அதிகமான கருத்துக்களை மாணவர்களோடு உரையாடுபவர் ஆசிரியர் இதயராஜா. கடிந்து கொள்ளாமல் மாணவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் அவரது அணுகுமுறை மாணவர்களை தயக்கமின்றி பேச வைக்கும். அன்றும் அப்படியே வகுப்பில் அவர் பேசிக் கொண்டிருந்த போது ஒரு மாணவி எழுந்து சார், எண்ணம்போல் வாழ்க்கைனு சொல்றாங்களே, எல்லோருமே வாழ்க்கையில பெரிய ஆளாகனும்னு தானே நினைப்பாங்க. ஆனா எல்லோரும் அப்படி ஆகுறதில்லயையே ஏன் என்றாள்.
ரொம்ப சரியான கேள்வி ஜேனட், எல்லோருடைய எண்ணமும் பலிக்கிறது இல்லை. யாருக்கு எண்ணமும், அதை நிறைவேற்றத் தேவையான தீவிர செயல்பாடும் இருக்கோ அவங்க மட்டும்தான் எண்ணியதை அடைய முடியும். உதாரணத்துக்கு ஒருவர் சென்னையிலிருந்து திருச்சிக்குப் போகணும்னு நினச்சு காரில் ஓட்டுநர் இருக்கையில் ஏறி உட்கார்ந்தா மட்டும் போதுமா? கார் ஓட்டத் தெரியணும். சோர்ந்து போகாமல் கவனத்தை வேறெங்கும் திசை திருப்பாமல் செல்ல வேண்டிய பாதையில் தொடர்ந்து சொல்லணும். திருச்சியில் எங்கு போய் சேர வேண்டும் என்ற முகவரி தெரிய வேண்டும். இதெல்லாம் சரியா இருந்தால் மட்டும்தான் அவரால் இலக்கை அடைய முடியும்.
உங்களை மாதிரி ஆகணும்! - அதுபோல பொத்தாம் பொதுவாக பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்காமல் என்னவாக வேண்டும் என்ற குறிக்கோள் வேண்டும். அதை அடையத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தத் துறையில் சாதித்தவர்களை முன் மாதிரிகளாக கொண்டு அவர்களை பின்பற்ற வேண்டும். அவர்களை விட சிறந்த சாதனை புரிய என்ன செய்ய வேண்டும், அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று ஆராய்ந்து, தொடர்ந்து செயல்பட வேண்டும். வீணான பொழுது போக்குகளில் நேரத்தையும், கவனத்தையும் செலவழிக்காமல் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் ஒரு நாள் லட்சியத்தை அடைய முடியும்.
சார் , அந்த மாதிரி சாதிச்சவங்க இப்ப யாராவது இருக்காங்களா என்றான் ஈஸ்வர்.
ஓ! நிறைய பேர் இருக்காங்கப்பா. இரண்டு நண்பர்கள் தஞ்சாவூரில் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்கள். இருவருமே ஏழை குடும்பத்தில் பிறந்தவர்கள். தினமும் கல்லூரிக்கு போகும் வழியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாளிகையின் முன் நின்று வெள்ளை நிற அம்பாசிடர் காரில் செல்பவரை வேடிக்கை பார்த்து விட்டு செல்வார்கள். ஒருநாள் அந்த கார் அவர்கள் அருகில் நின்றது. உள்ளிருந்து கம்பீரமான தோற்றத்தில் முறுக்கு மீசையுடன் இருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வால்டர் தேவாரம் இறங்கினார். என்ன தம்பிகளா தினமும் உங்களை இங்கே பார்க்கிறேன் என்ன வேண்டும் என்றார். நண்பர்களில் ஒருவர், சார், உங்களை மாதிரி ஆகணும்னா என்ன செய்யணும் என்றார். அதுக்கு நீ என்.சி.சி.யில் சேர், ரைபிள் கிளப்பில் சேர், கல்லூரி நேரம் போக மற்ற நேரம் மைதானத்தில் பயிற்சி செய், நல்லா படி என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் சொன்னது போலவே என்.சி.சி., துப்பாக்கி சுடும் பயிற்சி, கல்லூரி நேரம் போக மற்ற நேரம் மைதானத்தில் பயிற்சி என உற்சாகத்துடன் உழைத்தார். கல்லூரி படிப்பிற்கு பிறகு சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி வெற்றி பெற்று உழைப்பால் உயர்ந்தார். எந்த மாளிகையின் வெளியே நின்று ஏக்கத்துடன் பார்த்தாரோ அதே மாளிகையில் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளே நுழைந்தார். ஆசிரியர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த மாணவ மாணவியர் உற்சாகத்துடன் கைகளைத் தட்டினார்.
யார் சார் அவர்? என்றான் ரசாக்.
அவர் தான் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கலியமூர்த்தி.
ஆமா சார் கல்வியோட முக்கியத்துவத்தை பற்றி இவர் பேசிய வீடியோக்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன் என்றாள் சித்ரா.
கனவு மெய்ப்பட... சார் எனக்கு ரொனால்டோ மாதிரி சிறந்த கால்பந்து வீரனாகணும்னு ஆசை. ஒரு வாரம் தொடர்ந்து போனேன். ஆனா காலையில எழுந்து பயிற்சிக்கு போக சோம்பேறித்தனமா இருந்ததுன்னு போகலை. சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு போகலாம்னா நண்பர்களோட அரட்டை, செல்போன் விளையாட்டுன்னு போகவே முடியல என்றான் விக்டர். விக்டர் மற்றவர்களெல்லாம் பொழுது போக்குகளில் நேரத்தை வீணாக்கும் போது தன் இலக்கை நோக்கி தொடர்ந்து செல்பவர்கள் மட்டுமே அதை அடைய முடியும். கனவு காண்பது எளிது. அதை அடைய நிறைய விலை கொடுக்க வேண்டும். பெரிய இலக்கை அடைய சிறிய ஆசைகளை தியாகம் செய்ய தயாராக வேண்டும். நீ மன உறுதியோடு இன்னைக்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டாலும் உன்னால் ரொனால்டோவை விட மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரனாக முடியும் என்றார் ஆசிரியர் இதயராஜா.
நிச்சயமா செய்யுறேன் சார் என்றவன், சார் அந்த இரண்டு பேரில் இன்னொருவர் என்ன ஆனார்? என்றான்.
ஆமாம் அதை சொல்ல மறந்துட்டேன். தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கலியமூர்த்தி ஆனதும்மரியாதை நிமித்தம் மாவட்ட ஆட்சியாளரை சந்திக்க சென்ற போது அங்கே ஆட்சியாளராக அமர்ந்திருந்தது வேறுயாருமில்லை அவருடைய நண்பர் தான். கலெக்டராக வேண்டுமென்ற உறுதியோடு கல்லூரி நேரம் போக மற்ற நேரமெல்லாம் நூலகங்களில் புத்தக வாசிப்பில் மூழ்கிய அவரது நண்பர் இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியாளராகி விட்டார் என்றதும் மாணவர்களின் கரகோஷம் வகுப்பறையை அதிர வைத்தது.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர்,
டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com