

இன்றைய தலைமுறை குழந்தைகள் ’2கே கிட்ஸ்’ என்றழைக்கபட பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இந்த காலத்து குழந்தைகள் எல்லா விதங்களிலும் முந்தைய தலைமுறையினரை விட முன்னோக்கி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது மகிழ்ச்சியைக் கொடுக்கும் அதே நேரத்தில் கொஞ்சம் கவலைப்படவும் வைக்கிறது.
ஏனெனில் இன்றைய குழந்தைப் பருவம் என்பதே இல்லாமல், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு வகுப்பு என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். புத்தக மூட்டை, பள்ளி ப்ராஜெக்ட் வேலைகள் என பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே குனிந்து வேலை செய்பவர்களுக்கு, கழுத்து வலியும், முதுகு வலியும் சிறுவயதிலேயே தொற்றிக் கொண்டு துளிர்களை கஷ்டப்படுத்தும். இந்நிலையில் இன்றைய சிறுவர்களுக்கு புஜங்காசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“புஜங்க” என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுப்பதுபோல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தின் முடிவில், நல்ல பாம்பு தலை தூக்கிப் பார்ப்பது போல் காணப்படும்.
புஜங்காசனம் செய்வது எப்படி? - விரிப்பின் மேல், குப்புறப்படுத்து கைகளை நீட்டி வைக்கவும். பிறகு கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக பலமாக ஊன்றி வைக்கவும். மூச்சை உள் இழுத்து தலையை தரையில் இருந்து மேலே தூக்கி நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியை மெல்ல உயர்த்தவும். தலையையும், முதுகையும் முடிந்த அளவு பின்னோக்கி வளைத்து மார்பை நன்றாக விரிக்கவும். முழங்கைகள் உடலோடு ஒட்டியபடி இருக்க வேண்டும். பிறகு நிதானமாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு தலையை கீழே இறக்கி அதிலிருந்து முதல் நிலைக்கு வரவும்.
முதன் முதலாக புஜங்காசனம் செய்பவர்களில் சிலருக்கு, ஆரம்பத்தில் கழுத்தில் வலியும், கைகளில் நடுக்கமும் இருப்பது சகஜம். தொடர்ந்து செய்து வரும் போது, வலிகள் நீங்கி விடும். மேலும்முதுகையும் தலையையும் பின்னால் வளைக்கும் போது சிலருக்கு குதிகால்கள் சேர்ந்திராமல் விலகிப் போகலாம். சுலபமாக இருப்பதால் அப்படியே செய்யாமல், ஆரம்பத்தில் இருந்தே குதிகால்களை சேர்த்து வைத்து பயிற்சி செய்வது தான் நல்லது. தொடர்ந்து இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதால், எவ்வளவு நாள்பட்ட கழுத்து வலி, மற்றும் முதுகு வலியாக இருந்தாலும் தீர்வு காண முடியும். பயிற்சி எங்களுடையது...முயற்சி உங்களுடையது... ஆரோக்கியம் நம்முடையது.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்
யோகா செய்பவர்:அம்ருத நாராயணன்
படங்கள்: எல்.சீனிவாசன்
தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்