

கதை மாமா என்றழைக்கப்படும் சிவாவை சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். இன்னைக்கு என்ன கதை சொல்லப் போறீங்க மாமா என்றான் திலீப். நண்பர்கள் புதையல் தேடிப் போன கதை சொல்லட்டா என்று கேட்டார் சிவா. ஐ! புதையல் கதையா, சொல்லுங்க, சொல்லுங்க என்றாள் ஜனனி.
பிரிக்கலாமா வேணாமா? - ரஞ்சித், காசி, சுந்தர் மூன்று பேரும் நண்பர்கள். சின்ன வயசுல இருந்தே அவங்க ஊருக்கு பக்கத்துல இருக்கும் காட்டுக்குள்ளே புதையல் இருக்குன்னு கேள்விப்பட்டு அதை எடுக்கலாம்னு கிளம்பிப் போனாங்க. காட்டை அடைந்ததும் மூணு பேரும் ஒண்ணா போறதைவிட தனித்தனியா பிரிஞ்சு போகலாம்னு முடிவெடுத்தாங்க. புதையல் நம்ம மூணு பேர்ல யாருக்கு கிடைச்சாலும் நாலு பாகமா பிரிச்சி நாம ஆளுக்கு ஒரு பாகம், நம்ம ஊருக்கு நல்லது செய்ய ஒரு பாகம்னு பிரிச்சுக்கலாம் என்றான் சுந்தர்.
ஊஹூம், அதெல்லாம் முடியாது. யாருக்கு கிடைக்குதோ அவங்களுக்குத்தான் மொத்த புதையலும் என்றான் ரஞ்சித். சரி, சரி சண்டை போடாதீங்க. மொதல்ல புதையல் கிடைக்கட்டும், அப்புறம் அதை எப்படி பிரிக்குறதுன்னு பாக்கலாம் என்றான் காசி. என்னைத் தவிர யாருக்கு புதையல் கிடைச்சாலும் அதை எப்படியாவது எனக்கு சொந்தமாக்கிடுவேன், என்ற கெட்ட எண்ணம் அவன் மனதிற்குள் இருந்தது மற்ற இருவருக்கும் தெரியாது. மூவரும் தனித்தனியே பிரிந்து சென்றனர்.
ஒன்றாக இருக்கும் போது இருந்த தைரியம் இப்போது தனியே செல்லும்போது ரஞ்சித்துக்கு இல்லை. ஐயோ இப்படி அத்துவான காட்டுக்குள்ள தனியா வந்துட்டோமே புலி, கிலி வந்துட்டா என்ன பண்றதுன்னு நினைச்சான் ரஞ்சித். அடுத்த வினாடி பின்னால் உறுமும் சத்தம், பசியோடிருந்த புலி அவனை அடித்து தின்றது.
அரண்டவனுக்கு... மற்றொரு திசையில் சென்ற காசிக்கு பேய் பயம் உண்டு. பகலில் தனியாக தைரியமாக நடந்தவன் இருட்டியதும் ஐயோ! எதாவது பேய், பிசாசு வந்து அடிச்சிருந்துதுன்னா என்ன பண்றதுன்னு யோசிக்கும் போதே அவனுடைய மேல் துண்டை பின்னாலிருந்து யாரோ இழுப்பது போல தோன்றியதால் திருப்பிப் பார்த்தான். மரக்கிளையில் மேல்துண்டு மாட்டியிருந்ததை அவன் கவனிக்கவில்லை. நிலவொளியில் பின்னாலிருந்த மரத்தின் நிழல் கரிய உருவம் போல் காட்சியளித்தது. காற்றில் காய்ந்த சருகுகளின் அசைவு யாரோ நடந்து வருவதைப் போல கேட்டது. அரண்டவனுக்கு இருண்டதல்லாம் பேய் என்பதை நிரூபிக்கும்படி, ஐயையோ! பேய் என்னை பிடிச்சு இழுக்குதுன்னு பயந்து ஓட ஆரம்பித்தான். கல் தடுக்கி கீழே விழுந்தவன் பயத்திலேயே மாரடைப்பு வந்து மடிந்தான்.
மூணாவது நண்பன் சுந்தர் புதையலைப் பற்றி மட்டுமே நினைச்சுக்கிட்டு போனான். எனக்கு கண்டிப்பா புதையல் கிடைக்கும். மத்த ரெண்டு பேரும் தடுத்தாலும் அதை நாலு பாகமா பிரிச்சு அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாகம் கொடுத்துட்டு, என்னுடைய பங்கை அம்மா அப்பாகிட்ட கொடுத்துட்டு நாலாவது பாகத்தில் ஊரில் பள்ளிக்கூடமும், மருத்துவமனையும் கட்டணும் என்று பலவாறு எண்ணியபடி நடந்தவனுக்கு எதிரே ஒரு பெரிய புதையல் பெட்டி தெரிந்தது. அதன் மீது "எண்ணம் போல் வாழ்க்கை" என்று எழுதப்பட்டிருந்தது. சந்தோஷமாக அதை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பி தானும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான். ஊருக்கு தேவையான நல்ல காரியங்களையும் செய்து ஊர் மக்களையும் மகிழ்ச்சியுடன் வாழ வைத்தான்.
என்ன பிள்ளைகளா கதை பிடிச்சுதா என்று சிவா கேட்டதும் அதுவரை சத்தமில்லாமல் கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கைகளைத் தட்டி ரொம்ப நல்லாயிருந்துச்சு மாமா என்றனர்.
எதிர்மறை எண்ணமும் சுயநலமும்: பாவம் அந்த ரெண்டு நண்பர்களை கொன்னுட்டீங்களே மாமா என்றான் ஆகாஷ். டேய்! நானா கொன்னேன் அவங்களோட எதிர்மறை எண்ணங்கள்தான் அவங்களை கொன்னுச்சு, என்றார் சிவா. ஆமா, அவங்க புலியைப் பத்தியும், பேயைப் பத்தியும் நினைச்சுக்கிட்டு இருந்ததால அதனாலயே இறந்துட்டாங்க, சுந்தர் மட்டும்தான் புதையலைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்ததால எண்ணம் போல் வாழ்க்கைனு எழுதியிருந்த புதையல் பெட்டி அவனுக்கு கிடைச்சுது என்றாள் குட்டிப் பெண் மோனிகா.
அதுமட்டுமில்ல மத்த ரெண்டு பேரும் புதையலை தான் மட்டும் அனுபவிக்கணும்னு நினைச்சாங்க. சுந்தர் மட்டும்தான் மத்தவங்களுக்கு கொடுக்கணும், ஊருக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சான். அதனாலதான் அவனுக்கு புதையல் கிடைச்சுது இல்லையா மாமா என்றான் முகமது. பெரியவர்கள் கதைகளை மட்டும் சொல்லிவிட்டு குழந்தைகளுக்கு பேச வாய்ப்பு கொடுத்தால் போதும், கதையில் உள்ள நல்ல கருத்து என நாம் நினைப்பதை விட அதிகமான விஷயங்களை குழந்தைகள் வெளிக் கொணர்வார்கள் என்று மனதில் நினைத்தபடி எல்லோரையும் பாராட்டி ஆளுக்கொரு கடலை மிட்டாய் கொடுத்தார் கதை மாமா சிவா.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர்,
டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com