

சந்தைக்கு போன உதயலட்சுமி யாரையோ திட்டிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். என்னம்மா யாரை திட்டிக்கிட்டிருக்கே என கேட்டார் கணவர் ராஜேஷ். அந்த மூணாவது வீட்டு ராகவனைத் தான். இன்னைக்கும் குடிச்சுட்டு ரோட்ல விழுந்து கிடக்கிறான். அவங்கப்பா குடிச்சு குடல் வெந்து இறந்துபோனதை பார்த்தும் இவனுக்கு புத்தி வரல. அவங்கம்மாவ நெனச்சாதான் பாவமா இருக்கு. புள்ளையாவது நல்லா படிச்சு அவங்கள காப்பாத்துவான்னு பார்த்தா அவனும் குடிக்கு அடிமையாகிட்டான்.
அம்மா பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மகன் சங்கர், அப்பா நீங்க மனநல ஆலோசகர் தானே, எனக்கொரு சந்தேகம் அடிமையாகுறதுன்னா என்ன? ஒரு தடவை குடிச்சாலே அடிமை ஆகிடுவாங்களா? அம்மா சொன்ன மாதிரி குடியால எவ்வளவு கஷ்டம்னு அனுபவபூர்வமா தெரிஞ்சும் ஏன் குடிக்குறாங்க.
சங்கர் நல்ல கேள்வி கேட்ட, இது உன்ன மாதிரி படிக்குற பசங்க எல்லோரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்தான். மது மட்டுமில்லை, புகையிலை, கஞ்சா போன்ற எந்தப் பொருளையுமே அதன் தீய விளைவுகள் பற்றி தெரிஞ்சும் திரும்பத் திரும்ப பயன்படுத்த தூண்டும் நிலைதான் அடிமைத்தனம். தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தும் யாருக்கு வேண்டுமானாலும் இந்நிலை ஏற்படலாம். ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறை வரை யாருக்காவது இந்த அடிமைத்தனம் இருந்தால் அவர் வீட்டிலிருப்பவர் ஒரு முறை போதைப் பொருளை பயன்படுத்தினாலும் மீண்டு வர முடியாத அளவு அடிமைத்தனத்திற்குள் செல்ல மரபணுக்கள் காரணமாகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு சென்று 25 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால்தான் இதிலிருந்து மீள முடியும். அதனால் முதல் தடவை போதை பழக்கம் நமக்கு அறிமுகமாகும் போதே வேண்டாம், இது எனக்குத் தேவையில்லை என்று சொல்லக் கூடிய மன உறுதி நமக்கு அவசியம்.
மதிப்பையும் மதிப்பெண்ணையும் இழந்து... அப்பா இதெல்லாம் பிரெண்ட்ஸ் மூலம் தானே அறிமுகம் ஆகுது. எங்கே வேண்டாம்னு சொன்னா அவங்க நம்ம விட்டுப் போய்டுவாங்களோன்னு பயந்துதான் பழகிடுறாங்க. எங்க கிளாஸ்ல சீனுன்னு ஒரு பையன் இருந்தான். நல்லா படிப்பான். அவன் பிரெண்ஸோட சேர்ந்து கஞ்சாவரை பழகிட்டான். இப்ப ஒழுங்கா ஸ்கூலுக்கு வர்றது கிடையாது. வந்தாலும் அழுக்கு டிரஸ் போட்டுக்கிட்டு, யாரோடையும் பேசாம தனியா, மந்தமா உட்கர்ந்திருப்பான். 80, 90 மார்க் வாங்கினவன் இப்ப 10, 20 எடுத்தாலே பெரிய விஷயம். டீச்சர்ஸ் எதாவது சொன்னாலும் முறைக்கிறான், கோவமா பேசுறான். நேத்து பக்கத்து கிளாஸ் பசங்க ஒயிட்னர், பெவிக்கால் எல்லாம் போதைக்காக பயன்படுத்துனதா அவங்க பேரண்ட்ஸை வரவழைச்சு பிரின்சிபால் கண்டிச்சதா பேசிக்கிட்டாங்க.
உனக்கே இதனோட தீய விளைவுகள் நல்லா தெரியுது. அப்ப படிப்பு, உடல்நலம், குடும்ப கௌரவம், எதிர்காலம் எல்லாத்தையும் இழக்குறதுக்கு பதிலா இதை அறிமுகப்படுத்துற பிரெண்ட்ஸை இழக்குறதால நஷ்டம் எதுவுமில்லைனு புரியுது இல்லையா. அந்த நண்பர்களையும் ஆசிரியர்களிடம் சொல்லி திருத்தப் பார்க்கலாம், குறைந்தபட்சம் நாமோ மற்ற பிள்ளைகளோ அவங்களால கெட்டுப் போகாம பார்த்துக்கிறதும் ரொம்ப முக்கியம்.
அருகிலிருப்பவரையும் பாதிக்கும்! - இந்த போதை பொருட்களால ஆரோக்கியம் எப்படி கெட்டுப் போகும்ப்பா?
மது பானங்களால கல்லீரல், இதயம், கணையம் ஜீரண உறுப்புகள் பாதிக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன இறுக்கம், மூளை பாதிப்பு போன்ற பிரச்சனைகள் வரும்.சிகரெட் புகைப்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு, புற்று நோய் வரும். புகைப்பவர்களைவிட பக்கத்தில் இருப்பவர்களை இரு மடங்கு அதிகம் பாதிக்கும்.
புகையிலை போன்ற போதை வஸ்துகளை வேறு வகைகளில் பயன்படுத்துபவர்களுக்கு வாய், உணவுக்குழாய் போன்றவற்றில் புற்று நோய் வரக்கூடும். கஞ்சா, அபின் போன்றவை உடல்நலக் கோளாறுகளோடு பலவித மனநோய்களையும் கொண்டு வரும். ஆக மொத்தத்தில் எந்த விதமான போதை பொருளாக இருந்தாலும் அவற்றால் கெடுதலைத் தவிர எந்த விதமான நன்மையும் கிடையாது.
ஆமா, வெளிநாட்டுல மைக்கேல் ஜாக்சன் நம்ம ஊருல நடிகர் சந்திரபாபு, நடிகை சாவித்திரினு நிறைய பேர் போதைக்கு அடிமையாகி பணம், புகழ், அந்தஸ்து எல்லாத்தையும் இழந்து இறந்தே போனாங்க என்று ஆதங்கத்துடன் கூறினார் அம்மா.
போதை பழக்கத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவங்க இதிலிருந்து எப்படி வெளியே வர்றதுப்பா? வாழ்க்கைக்கான குறிக்கோளை நிர்ணயிச்சு அதை நோக்கி பயணிக்கனும். கவனச் சிதறல்களுக்கு இடம் கொடுக்க கூடாது. நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். உடற் பயிற்சி, விளையாட்டு, திறன்களை வளர்த்தெடுப்பது என நம் ஓய்வுநேரத்தை சரியாக திட்டமிட்டு செலவழிக்கனும். இப்ப நீ எங்ககிட்ட பேசுற மாதிரி எல்லா பிள்ளைகளும் அவங்க பெற்றோர்கிட்ட மனம் விட்டு பேசி நேரம் செலவிட்டாலே பாதி பிரச்சினை சரியாகிடும். தேவைப்பட்டா மனநல ஆலோசகர்களின் உதவி பெறலாம்.
எனக்கு கிடைச்ச அம்மா, அப்பா மாதிரி எல்லோருக்கும் கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று அம்மா அப்பாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான் சங்கர்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர்,
டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com