

ஆசிரியர் ராணி வகுப்பறையினுள் நுழைந்ததும் வகுப்புத் தலைவி, மிஸ் அர்ச்சனா அழுகுறா என்றாள். என்னாச்சு என்றபடி அர்ச்சனாவைப் பார்த்தார் ஆசிரியர்.
மிஸ், ராதா எப்பப் பார்த்தாலும் என்னை லொட்ட கைனு பட்டப்பேர் வச்சு கூப்பிடுறா. அப்படி கூப்புடாதேன்னு சொன்னாலும் திரும்பத் திரும்ப அப்படிதான் கூப்பிடுறா.
இவளைப் பார்த்து மத்தவங்களும் அதே மாதிரி கூப்புடுறாங்க, எனக்கு அசிங்கமா இருக்கு மிஸ் என்றாள் அர்ச்சனா. ராதா எழுந்து மிஸ் இடது கையில எழுதுனா படிப்பு வராதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க மிஸ். அதனால இப்படி கூப்பிட்டா அர்ச்சனா தன்னை மாத்திக்குவான்னுதான் அப்படி கூப்பிட்டேன், சாரி மிஸ் என்றாள்.
ராதா, மத்தவங்களை பட்டப்பேர் வெச்சு கூப்பிடுவது ரொம்ப தப்பு. அதோட இடது கைல எழுதுனா படிப்பு வராது, தரித்திரம் என்பதெல்லாம் மூடநம்பிக்கை. இரண்டு அரைக்கோளங்களாக இருக்கும் மனித மூளையின் இடது பக்கம் ஆதிக்கம் செலுத்தினால் வலது கை பழக்கம் உடையவராகவும், வலது பக்க மூளை ஆதிக்கம் செலுத்தினால் இடது கை பழக்கமுடையவராகவும் இருப்பார்கள்.
பிறவியிலேயே இருப்பதை நாமாக வலுக்கட்டாயமாக மாற்ற முயன்றால் திக்குவாய் போன்ற பின்விளைவுகளும் ஏற்படலாம். படிக்கும் பிள்ளைகள் நீங்கள் இப்படி மூடநம்பிக்கை கொள்ளாமல் அறிவியல் மனப்பான்மையோடு இருக்க வேண்டும்.
ஏன், எதற்கு என்று கேள்!
சரிங்க மிஸ் இனி அப்படி கூப்பிட மாட்டேன், அறிவியல் மனப்பான்மைனா என்னமிஸ்? யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடாமல் ஏன், எதற்கு, எப்படி, எதனால்என்று கேள்வி கேட்க வேண்டும். உண்மைஎன்னவென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.சோதித்து பார்த்து உண்மையை கண்டறிந்து அதை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
அது தான் அறிவியல் மனப்பான்மை. இந்திய அரசியல் சாசனத்திலேயே அறிவியல் மனப்பான்மை, மனிதம், கேள்வி கேட்டல், சீர்திருத்த உணர்வை வளர்த்தல் ஆகியவை குடிமக்களின் கடமை என்று எழுதி இருக்கிறார்கள். சரி, வேறென்னென்ன மூட நம்பிக்கைகள் நம் மக்களிடம் இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்.
கண்ணாடி உடைஞ்சா வீட்டுக்கு ஆகாது, நாய் ஊளையிட்டா யாரோ சாகப் போறாங்க, கருப்பு நிற உடை துக்கத்துக்கு மட்டும்தான் போடணும், நல்ல காரியம் நடக்கும் போது தும்மக் கூடாதுன்னு நிறைய சொல்லுவாங்க. சரி தும்மல் ஏன் வருது மிஸ்?
தும்மல் என்பது சாதாரண உடலியல் செயல்தான். காற்று தவிர வேறெந்த அந்நிய பொருள் மூக்கில் நுழைந்தாலும் மூக்கு அதை அனுமதிக்காமல் வெளியேற்ற நடக்கும் அனிச்சை செயல்தான் தும்மல். அதனால் தும்மல் வந்தால் அபச குணம் என்பதோ, புரையேறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பதோ மூடநம்பிக்கை.
மிஸ் வெளியே போகும் போது பூனை குறுக்கே போனா போற காரியம் விளங்காதுன்னு எங்க பாட்டி சொல்வாங்க. அதுவும் மூடநம்பிக்கைதானா மிஸ்? ஆமாம், ஐந்தறிவுள்ள பூனைக்கு, நம் செயலை தீர்மானிக்கும் சக்தி இல்லை. இது மட்டுமில்ல, ராசியில்லாதவங்க எதிரே வந்தா போற காரியம் விளங்காதுன்னு சொல்றது மூடநம்பிக்கை மட்டுமில்ல மத்தவங்களை அவமதிக்கும் மனிதநேயமற்ற செயலும் கூட.
மிஸ் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அண்ணனுங்க தங்கச்சிகளுக்கு பச்சை நிறப் புடவை எடுத்து தந்தா நல்லதுன்னு ஒரு புரளியை கிளப்பி விட்டாங்க. 13ங்கிற நம்பரே துரதிருஷ்டவசமானதுனு, 666ங்கிற எண் சாத்தானை குறிக்கும்னு சிலர் சொல்ல கேட்டிருக்கேன் மிஸ்.
இந்த நிறப் புடவை தான் ராசி, இந்த குறிப்பிட்ட தேதி தான் ராசி, சில எண்கள் ஆபத்தானது என்பதெல்லாம் தன்னை நம்பாமல் தன் செயல் தோல்வி அடைஞ்சிட்டா அடுத்த நபர் மீது அல்லது பூனை, புடவை, நாள் கிழமைனு எதன் மீதாவது பழியை போட்டு தப்பித்து கொள்ள நினைப்பவர்கள்தான் இந்த மாதிரியான மூடநம்பிக்கைகள் கொண்டிருப்பார்கள்.
படித்தவர்களிடமும் மூடநம்பிக்கையா?
மிஸ், படிக்காதவங்கதான் மூடநம்பிக்கை கொண்டவங்களா இருப்பாங்களா?
அப்படியெல்லாம் சொல்ல முடியாதும்மா; சில மாதங்களுக்கு முன்னாடி கல்லூரி பேராசிரியர்களா இருந்த கணவன் மனைவி தன மகள்களை நரபலி கொடுத்தா குடும்பத்துக்கு நல்லதுன்னு யாரோ ஒரு மந்திரவாதி சொன்னதைக் கேட்டு சொந்த மகள்களையே நரபலி கொடுத்ததா பத்திரிக் கையில் படிச்சிருக்கோமே! நல்ல படிப்பு, பதவினு இருக்கவங்ககூட மூடநம்பிக்கையை தூக்கிப்பிடிக்கிறதை பார்க்கிறோம்.
அதை இந்த மதத்தைச் சேர்ந்தவங்க, இந்த சமூ கத்தை சேர்ந்தவங்கதான் செய்யுறாங்கனு பழி சொல்றதும் தப்புதான். மூடநம்பிக்கை என்கிற வியாதி சாதி, மதம் கடந்து பலரிடம் காணப்படுது.
சரி மத்தவங்களை திருத்துறது இருக்கட் டும், நாம அறிவியல்பூர்வமான விளக்கம் இல்லாத எந்த காரியத்தையும் மத்தவங்க சொல்றதுக்காக செய்ய கூடாது சரியா.
சரிங்க மிஸ். ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்டு சரியானதை மட்டுமே ஏற்றுக் கொள்வோம் மிஸ்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com