பெரிதினும் பெரிது கேள் - 9: முகமது அலியா இல்லை டைசனா, நீ யாராக வேண்டும்?

பெரிதினும் பெரிது கேள் - 9: முகமது அலியா இல்லை டைசனா, நீ யாராக வேண்டும்?
Updated on
2 min read

தலைமையாசிரியர் அறையில் தலை குனிந்து நின்று கொண்டிருந்தான் பார்த்திபன். பக்கத்தில் இருந்த அவனது தந்தையிடம் தலைமையாசிரியர் கோபமாக பேசிக் கொண்டிருந்தார். சார் இதோட ரெண்டாவது தடவை உங்க பையன் மத்த பசங்களோட சண்டை போட்டு ரத்த காயம் ஏற்படுத்தியிருக்கான். இன்னொரு தடவை இப்படி நடந்துச்சுன்னா சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும் என்றார்.

சாரி சார் இனிமே இப்படி நடந்துக்காம நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார் பார்த்திபனின் தந்தை. திட்டுவார், அடிப்பார் என்று எதிர்பார்த்த பார்த்திபனுக்கு அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக நடந்தது வியப்பை தந்ததோடு குற்ற உணர்ச்சியையும் தூண்டியது.

அப்பா சாரிப்பா நான் சும்மாதான் இருந்தேன். ராகேஷ்தான் என்னை அரிசி மூட்டைனு பட்ட பேர் வச்சு கூப்பிட்டான். அப்ப கூட நான் டேய் வேணாம், சும்மா இருன்னு சொன்னேன். அதுக்கு என்ன மிரட்டுற நீ பெரிய பயில்வானான்னு கெட்ட வார்த்தை பேசி சண்டைக்கு கூப்பிட்டான்.

அதனாலதான் கோபம் வந்து ஒரே ஒரு குத்து விட்டேன். அவனோட ரெண்டு பல்லு விழுந்துடுச்சு. நான் செய்தது தப்புன்னு இப்போ புரியுது, சாரிப்பா என்றான். இதற்குள் வீடு வந்துவிடவே எதுவும் பேசாமல் டிவியைப் போட்டு மைக் டைசனை லாரி ஹோம்ஸ் ஜெயிக்கும் குத்துச்சண்டை காணொளியை வைத்தார்.

அவர் யார் தெரியுமா?

குத்துச்சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பார்த்திபன் இந்தக் காணொளியை ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கிறான். இருந்தாலும் இப்போது அதை ஏன் அப்பா காட்டுகிறார் என்று புரியாமல் அவரை பார்த்தான். காணொளி முடிந்ததும் அப்பா அவனிடம் இவரைப் பத்தி உனக்கு என்ன தெரியும் என்றார். மைக் டைசன் 20 வயசுலயே பாக்ஸிங்ல உலக சாம்பியனானவர். 58 போட்டிகளில் 50 போட்டியில் நாக் அவுட் முறையில் ஜெயிச்சவர்.

சரியா, சொன்ன பார்த்திபன், சரி இந்தப் போட்டி தொடங்கும் முன்னாடி மைக் டைசன் கிட்ட வந்து ஒருத்தர் பேசுறாரே அவர் யார் தெரியுமா?

அவர் தான் பாக்ஸிங் உலகத்துல நம்பர் ஒன் வீரர் முகமது அலி. மைக் டைசன் அவர் மேல ரொம்ப மரியாதை வெச்சிருந்தார். என்னை தோற்கடிச்ச லாரி ஹோம்சை எனக்காக நீ ஜெயிக்கணும்னு மைக் டைசனிடம் முகமது அலி போட்டி தொடங்கும் போது சொல்வார். அதே மாதிரி மைக் டைசனும் லாரி ஹோம்சை அடிச்சு ஜெயிச்சுடுவார். அவ்வளவுதான் தெரியுமப்பா.

வெரி குட் அவங்க ரெண்டு பேரைப் பத்தி இன்னும் உனக்கு தெரியாத சில விஷயங்களையும் சொல்றேன். முகமது அலி, மைக் டைசன் ரெண்டு பேருமே அவங்களோட சின்ன வயசுல உன்ன மாதிரி தான் எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு அடிதடின்னு சண்டைல இறங்கிடுவாங்க.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு தங்களிடம் இருந்த அபரிமிதமான உடல் பலத்தை உணர்ந்து முறையான குத்துச்சண்டை பயிற்சி பெற்று உலக சாம்பியன் ஆனாங்க. முகமது அலியோட சின்ன வயசுல அமெரிக்காவுல கறுப்பர்களுக்கு எதிரான நிறவெறி ரொம்ப உச்சகட்டத்துல இருந்தது.

அதற்கு எதிரான போராட்டத்தில இறுதிவரை முக்கிய பங்காற்றியவர் முகமது அலி. புகழின் உச்சியில் இருந்தபோதும் எளிய மக்கள் மீது அக்கறையோடு இருந்தார். ஆர்வமிருந்தும் குத்துச்சண்டை பயில வசதி வாய்ப்பில்லாதவர்களுக்காக நிதி திரட்ட உலகமெங்கும் பயணம் செய்து கண்காட்சி போட்டிகளை நடத்தினார். பிறருக்காக வாழாத வாழ்க்கை வீண் என்பது அவரது கொள்கை.

வருத்தப்பட்டு என்ன பயன்?

ஆனால், மைக் டைசனோ பிக்பாக்கெட் அடிப்பது போன்ற குற்றங்களுக்காக 13 வயதிற்குள் 38 முறை சிறைக்கு சென்றவர். ஒருமுறை அவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தபோது ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு வந்த முகமது அலி பேசிய பேச்சைக் கேட்டு உத்வேகம் பெற்று அவரைப் போல் குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நல்லதொரு குருவின் உதவியால் பயிற்சி பெற்று உலக சாம்பியன் ஆனார்.

நீ சொன்னது போல் பங்கேற்ற 58 போட்டிகளில் 50 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்ற ஒரே குத்துச்சண்டை வீரர்.ஆனால் அதற்கு பிறகும் தன்னை திருத்திக் கொள்ளாமல் ஒழுங்கீன வாழ்க்கையை மேற்கொண்டதால் பலமுறை சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று.

இவாண்டர் ஹோலி பீல்டு என்பவருடன் நடந்த குத்துச்சண்டையில் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் எதிராளியின் காதைக் கடித்து அதுவரை தான் சம்பாதித்த புகழுக்கு மாறா களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். 300 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்தவர் மூன்றே ஆண்டுகளில் 23 மில்லியன் டாலர் அளவு கடனாளியாக மாறினார்.

இதெல்லாம் நடந்த பிறகு தன் நடத்தைக்காக வருத்தப்பட்டு ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம் என்று ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்? உணர்வுகளை சரியாக கையாளத் தெரியாதவன், எவ்வளவு பெரிய திறமைசாலியாக, உழைப்பாளியாக இருந்தாலும் அவன் சம்பாதிக்கும் பணத்தாலோ, புகழாலோ அவனுக்கோ, மற்றவர்களுக்கோ எந்த பயனும் இல்லை என்று சொல்லி முடித்தார் பார்த்திபனின் அப்பா.

அடுத்த வினாடியே பார்த்திபன், அப்பா நானும் குத்துச்சண்டை கத்துக்கணும் நிச்சயமா மைக் டைசன் மாதிரி ஆக மாட்டேன். முகமது அலி மாதிரி தான் இருப்பேன் என்றான் உறுதியான குரலில். சரி, நாளைக்கே சேர்த்து விடுறேன் என்றார் அப்பா புன்னகையுடன்.

கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர் டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை.

தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in