மகத்தான மருத்துவர்கள் - 9: ஆங்கிலேயரின் பரிந்துரையால் பள்ளியில் சேர்ந்த இந்தியப் பெண்

மகத்தான மருத்துவர்கள் - 9: ஆங்கிலேயரின் பரிந்துரையால் பள்ளியில் சேர்ந்த இந்தியப் பெண்
Updated on
2 min read

ஒரு பெண்ணின் முன்னேற்றத்துக்கு எதிராக இருப்பது எது என்று கேட்டால், அவள் பெண் என்பதே போதும் என்று இப்போதும் சொல்லிவிட முடியும்.

21-ம் நூற்றாண்டின் நிலைமையே இப்படி இருந்தால் 19-ம் நூற்றாண்டில் பெண்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும்? 150 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்போக்கு மனநிலையில், ஒரு பெண் படிக்க வேண்டும் என்றாலே அதற்கு என்னென்ன துயரப்பட்டிருப்பாள் என்பதை அறிய ஹேமவதி சென் அவர்களின் வாழ்க்கையை அறிந்தாலே போதும்!

தனது வாழ்நாள் முழுவதும் கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம் போன்ற பல சமூக அநீதிகளைத் தாண்டி மருத்துவரானவர் ஹேமவதி சென். வங்காள மாநிலம் குல்னா மாவட்டத்தில், 1866-ல் ஜமீன்தார் குடும்பத்தில் முதல் பெண் குழந்தையாகப் பிறக்கும்போதே ஹேமவதிக்கு துன்பங்கள் தொடங்கிவிட்டது.

முதல் குழந்தை ஆண் குழந்தை என்றால் 5000 ரூபாய் பரிசு என்பது அக்குடும்ப வழக்கமாக இருக்க, முதல் குழந்தை பெண் என்பதால் பெற்ற தாயே வெறுக்கும் குழந்தையாகத் தான் ஹேமவதி பிறந்தார். என்றாலும் ‘‘சூனி பாபு” என்று செல்லப் பெயரிட்டு ஓர் ஆண் குழந்தையாகவே அவரை வளர்த்த ஜமீன் தந்தையின் அரவணைப்பு அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது.

பெண்கள் கல்வி கற்றால் அவர்கள் சீக்கிரமே கணவனை இழந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கை அங்கு நிலவியதால், தந்தை விரும்பினாலும் மற்ற பெண் குழந்தைகளைப் போலவே ஹேமவதியும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஒருமுறை அப்படி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் வீட்டுக்கு வந்த ஆங்கிலேய காவல் அதிகாரி ஒருவர் விடுகதை கேட்டு விளையாட, மற்றகுழந்தைகள் விடை தெரியாமல் விழித்தபோது ஹேமவதி மட்டும் புத்திசாலித்தனமாக பதிலளித்தார். அவரை பெரிதும் மெச்சிய அந்த அதிகாரி, அவரது தந்தையிடம் ஹேமவதிக்கு கல்வியளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்படித்தான் வீட்டில் உள்ள பெண்களின் கடுமையான மறுப்பிற்கிடையேயும் தந்தையின் ஆதரவுடன் பள்ளிக்குச் சென்றாராம் ஹேமவதி.

படித்தது குத்தமா?

பள்ளிப் படிப்பில் ஹேமவதி சிறந்து விளங்க பெருமிதம் தாங்கவில்லை தந்தைக்கு. எல்லாம் சில வருடங்கள்தான். ஹேமவதியின் ஆறாவது வயதில் வங்காளத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இரக்க சுபாவம் மிகுந்த ஹேமவதி வீட்டிலிருந்த தானியங்களையும், கிழங்குகளையும் திருடியாவது பசியில் இருந்த பள்ளித் தோழிகளுக்குக் கொடுக்க, ஏற்கெனவே அவர் மீது கடுங்கோபத்தில் இருந்த தாயும் பாட்டியும் பஞ்சத்தையும், பெண்ணின் போக்கையும் காரணமாகக் காட்டி, ஹேமவதியின் கல்வியை நிறுத்திவிட்டார்கள். திருமணம் செய்துவைக்கவும் வற்புறுத்த, தந்தையும் அதற்கு ஒப்புக்கொள்ள நேரிட்டது.

ஹேமவதியின் குலின் கயஸ்தா குடும்பத்தில், மூன்று நான்கு வயது பெண் குழந்தையைக் கூட, வயதில் மூத்த, ஏற்கெனவே ஓரிருமுறை திருமணமான ஆண்களுக்கும் திருமணம் செய்வது வழக்கம். இதனால் ஒன்பது வயது ஹேமவதியை நாற்பது வயதான இரு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான ஒரு நீதிபதிக்குத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்.

பகலில் தனது வயதையொத்த மூத்த தாரத்தின் மகள்களுடன் விளையாடும் அதே ஹேமவதி, இரவு முழுவதும் வயதில் மூத்த தனது கணவரால் பலவித கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளார்.

திருமணமான மறுவருடம் ஹேமவதியின் பத்தாவது வயதில் கணவர் நிமோனியா காய்ச்சலால் மரணமடைந்தார். அதற்கும் ஹேமவதி பள்ளிக்குச் சென்றதுதான் காரணம் என்று கூறி தள்ளி வைத்தது சமூகம். கல்வி பயின்ற குற்றச்சாட்டைக் காலம் முழுதும் சுமக்க நேர்ந்தது அந்தக் குழந்தை விதவைக்கு.

ஏழ்மைக்கு தள்ளப்பட்டார்

சொல்லிவைத்தது போல, பக்கபலமாக இருந்த தந்தையும் மாமியாரும் அடுத்தடுத்து இறந்துபோக, அவரது நகை மற்றும் சொத்துகள் அனைத்தையும் பிறந்த வீட்டில் சகோதரர்களும், புகுந்த வீட்டில் மைத்துனர்களும் ஏமாற்றி பறித்துக் கொண்டனர். தனது இளம்வயதிலேயே அடுத்தவேளை உணவிற்கு பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஹேமவதி.

கரைசேர்க்குமா கல்வி?

உறவினர் ஒருவர் சொன்னதை நம்பி, ‘விதவைகளின் நகரம்' என்று அப்போது அழைக்கப்பட்ட பனாரஸ் (வாரணாசி) வந்தடைந்த ஹேமவதி, அங்கே மற்ற இளம்விதவைகள் ஆதரவற்று பிச்சை யெடுக்கும் நிலை கண்டு அதிர்ந்து போனார்.

அருகில் இருந்த பெண்கள் பள்ளி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாலும் அவர் கற்றிருந்த சொற்பக் கல்வி மாதம் பத்து ரூபாய் வருமானத்தை மட்டுமே தந்தது. கல்வி மட்டுமே தன்னைக் கரைசேர்க்கும் என தீர்க்கமாக உணர்ந்தார். ஒருவேளை மட்டுமே உணவு உண்டு பணத்தை சேமித்து கல்வியின் ஆதாரமாக விளங்கிய கொல்கத்தாவுக்குச் சென்றார்.

பிரம்ம சமாஜத்தின் கல்வியாளர்களுடன் இணைந்து கொண்டால் வாழ்க்கை மாறி விடும் என நம்பியவருக்கு அங்கும் ஏமாற்றம் மட்டுமே காத்திருந்தது. ஓரிரு ஆண்டுகள் அங்கும் ஆசிரியப் பணியைத் தொடர்ந்தாலும், இளமையும் அழகும், விதவைக்கோலமும், தனிமையும் ஒருங்கே இருப்பது பாதுகாப்பானதல்ல என்று பலமுறை உணர்ந்தார் ஹேமவதி.

நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி மறுமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார். சதி ஒழிப்பு மற்றும் விதவை மறுமணம் பெரிய அளவில் பேசப்பட்ட அன்றைய பிரம்மசமாஜத்தில், குஞ்சபெஹ்ரி சென் எனும்பிரம்ம சமாஜத்தின் கடைநிலை உறுப்பினரை தனது 25 வயதில் மறுமணம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பிற்பாடுதான் உணர்ந்தார்.

(மகிமை தொடரும்)

கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர்,

சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in