

தேவா என்றொரு குட்டிப் பையன்.இரண்டாம் வகுப்பு படிக்கிறான். ரொம்ப சமர்த்தன். அப்பா, அம்மா தரும் தொல்லைகளை பொறுத்துக்கொண்டு இந்த உலகில் வாழும் அன்பு மனம் கொண்டவன். அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதால் அதிகாலை 5.30 மணிக்கு தேவாவை எழுப்பி, தங்களுடனே தயாராகச் சொல்வார்கள். அன்று காலை அப்பா தேவாவை எழுப்புகிறார். தேவாவுக்கு சிறிது தூக்கம் வந்ததால், "ஐந்து நிமிடம் அப்பா" என்று கெஞ்சுகிறான்.
"தடிமாடே எத்தனை முறைடா எழுப்பு றது.. நானெல்லாம் உன் வயதில் ஐந்து மணிக்கே எழுந்து ஆற்றுக்கு குளிக்கச் செல்வேன்" என்கிறார். உடனே தேவா, "அப்பா என்னையும் கூட ஆத்துக்கு கூட்டிப்போங்களேன்" என்கிறான். திடீரென்று தேவாவுக்கு முந்தின இரவு ரோஜா மொட்டுவிட்டதை பார்த்த நினைவு வருகிறது. "அம்மா அம்மா.. ரோஜாப்பூ மொட்டு இருந்தது. பூத்திருக்கும் இல்லையா. சன்னல் கதவை திறங்க அம்மா. பார்க்க லாம்" என்கிறான்.
ஐயோ.. மணி 5.45. 6.45 மணிக்கு ஆபிஸீக்கு கிளம்பணும். நேரமில்ல. நீஹோம் வொர்க் செய்யல இல்ல இன்னும். செய். தேவா ஹோம்வொர்க் எழுதும்போதும் ரோஜா நினைவாகவே இருக்கிறான். அவனாகவே சன்னல் கதவைத் திறந்து தொட்டியில் இருக்கும் ரோஜாவை பார்த்துவிட முயல்கிறான். அப்பா, அம்மா பயங்கரமான வேகத்தில் ரெடியாகிறார்கள்.
வீட்டில் மலர்ந்த ரோஜா
தேவாவை குளிக்கவைத்து பைக்கில் தூக்கிப்போட்டுக் கொண்டு ஆபிசுக்கு கிளம்புகிறார்கள். வழியில் ஓவிய வகுப்பு இருப்பது நினைவுவந்து கலர் பாக்சு கேட்கிறான். "தேவா. தினமும் ஒண்ணு வாங்கித்தரோம். தொலைச்சிடறியே என்று அப்பா திட்டும்போதே. த்ரீ ரோசஸ் டீத்தூள் வாங்கணும்" என்கிறார் அம்மா.
"அம்மா நம்ம வீட்ல ரோஜா பூ பூத்திருக்கு. நான் கிட்டப்போய் பார்க்கவே முடியல" என்கிறான். "எல்லாம் மாலை பார்த்துக்கலாம் டைம் ஆச்சி" என்கிறார் அம்மா.. ரோஜாப்பூ நினைவாகவே பள்ளி செல்லும் தேவாவுக்கு அன்று முழுவதும் எல்லா வகுப்பிலும் ரோஜாப்பூவை நினை வுப்படுத்தும் விதமாகவே வகுப்புகள் நடக்கின்றன.
ஆங்கில ஆசிரியர் LOTUS எப்படி பிறந்தது, ரோஜாவின் வண்ணத்திலிருந்து லோட்டஸ் வண்ணம் கிடைத்தது என்கிறார். தமிழ் அம்மா வடமொழி பற்றி அறிமுகம் செய்யும்போது, ரோஜாவை ரோசான்னு தூய தமிழில் சொல்லணும் என்கிறார். அறிவியல் ஆசிரியர் பூக்கும் தாவரங்கள், பூவாத தாவரங்கள் பற்றி சொல்லும்போது தேவா ஆர்வமாக ரோஜாப்பூ என்ன வகை தாவரம் என்று கேட்கிறான். வரலாறு ஆசிரியர் மண்வகை பற்றி நடத்தும்போது, ரோஜாப்பூ என்ன மண்ணில் வளரும் என்று கேட்கிறான்.
சின்ன சின்ன ஆசை
மாலை பள்ளிவிட்டதும் கராத்தே வகுப்பு செல்லும் தேவாவிடம், அவன் நண்பன் யோகானந்த் தானும் கராத்தே வகுப்பு வருவதாக கூறிச் செல்கிறான். கராத்தே ஆசிரியர் யோகாவின் கைகள் ரோஜாப்பூ போல மென்மையாக இருப்பதாகச் சொல்கிறார். ரோஜாப்பூ மென்மையாக இருக்கும் போலிருக்கிறது. வீட்டுக்குச் சென்றதும் பூத்திருக்கும் பூவை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று தேவா நினைக்கிறான். யோகாவின் அம்மா தேவாவை பாராட்டுகிறார். "நேரத்தை வீணாக்காம கராத்தே, கீபோர்ட் வகுப்பு செல்கிறாயே" என்கிறாள் , "அம்மா, அப்பா ஆபிஸ் விட்டுவர 6.30 மணியாகும். அதுவரை பொழுதுபோக்க இந்த வகுப்புகள் ஆண்ட்டி" என்கிறான்.
எப்போதும் பரபரப்பு
மாலை லேட்டாக வந்து பிக்அப் செய்யும் பெற்றோர், இரவு உணவு சமைக்க நேரமில்லை என்று ஹோட்டல் செல்கிறார்கள். ஏசீ நேரே அமராதே ஜூரம் வந்துடும் என்று அம்மா பாசமாக சொல்கிறார். அப்பா, "ஆமாண்டா லீவெல்லாம் முடிஞ்சிபோயிடுச்சி. ஜூரம் வந்துட்டா உன்னைப் பார்த்துக்க முடியாது" என்கிறார்.
இரவு ஆவலாக வீடுசென்று ரோஜாப்பூவை பார்க்க கதவைத் திறக்கச் சொல்கிறான். ஆனால் ரோஜாப்பூ வாடியிருந்தது. ரோஜாப்பூவை தொட்டுப்பார்த்து, முகர்ந்துபார்த்து ரோஜாப்பூவின் தன்மைகளை அறிந்துகொள்ள, அப்பா அம்மா சந்தர்ப்பம் தரவேயில்லை.
அவசர உலகம்
காலையிலிருந்து ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர் பேசுவதிலிருந்து ரோஜாப்பூவின் தன்மைகளை தானாகவே கற்கிறான் தேவா. இறுதியில் ரோஜாப்பூ வாடியிருந்ததில் தேவாவின் மனமும் வாடிவிடுகிறது. இரவு ஜூரம் வந்துவிடுகிறது. அனலாகக் கொதிக்கும் ஜூரத்திலும்.. இன்னொரு ரோஜாப்பூ பூக்குமா நம்ம வீட்டில். நான் அதன் மென்மையைத் தொட்டுப்பார்க்க வேண்டும். ரோஜாப்பூவில் வாசம் வருமா அம்மா என்று உளறுகிறான்.
இன்று அவசர உலகில் குழந்தைகள் வீட்டில் உயிராக இல்லாமல், உடைமையாக நடத்தப்படும் விதத்தை ரோஸ் அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறது. ஆயிஷா நடராஜனின் எழுத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்து பல ஆண்டுகளாகிறது. ஆனால் தேவாவை போலக் குழந்தைகள் இன்னமும் இருக்கின்றனர்தானே? நீங்களும் வாசித்து சொல்லுங்களேன்.
கட்டுரையாளர்:குழந்தை நேய செயற்பாட்டாளர்,
ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com