

வேலன் அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன். எப்போதும் எல்லாவற்றிலும் குறை காணும் இயல்பு கொண்டவன். அன்றும் அவன் அம்மா தந்த உப்புமாவை பார்த்ததும் ஏம்மா உப்புமா, பழைய சோறு இதைத் தவிர வேற ஏதும் தர மாட்டியா? சரி அதை விடு எனக்கு நாளைக்கு பிறந்தநாள் ஞாபகம் இருக்கா? ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் வாங்கி குடுன்னு சொன்னேன், என் பிரெண்ட்ஸ்க்கு ட்ரீட் குடுக்கணும் 200 ரூபா கேட்டேன் என்னாச்சு?
ஏண்டா வீட்டு நிலைமை புரியாம இப்படி பேசுற! பொறந்த நாளுக்கு புது துணி வாங்கிபோட்டு, பிரெண்டஸ்க்கு ட்ரீட் குடுக்குற நிலைமையில இப்ப நாம இல்லைடா புரிஞ்சுக்கோ என அம்மா சொன்னாள்.
புள்ளையோட சின்ன சின்ன ஆசையை கூட உன்னால நிறைவேத்த முடியலைன்னா எதுக்கு என்ன பெத்த என்று கோபமாக எழுந்து, கதவை டமாலென அறைந்து சாத்திவிட்டு வேலன் சென்று விட்டான்.
மதிய உணவு இடைவேளையின் போது சத்துணவு சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வந்து வேலனும் அவன் நண்பன் பாண்டியும் ஓரிடத்தில் அமர்ந்தனர். பாண்டி இந்த ஆண்டு புதிதாக சேர்ந்தவன். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதோடு எல்லோருடனும் நட்புடன் பழகுபவன்.
ஏண்டா வேலா இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்க?
நடந்ததை சொன்னான் வேலன். பாண்டி எதுவும் சொல்லாமல் மவுனமாயிருப்பதைக் கண்டு, என்னடா என் கதையைக் கேட்டு நீயும் சோகமாயிட்டியா என்றான்.
இல்லடா, என் அம்மா-அப்பா ஞாபகம் வந்தது அதான்.
என்ன ஞாபகம் வந்ததா? ஏன் அவங்க இப்ப உன் கூட இல்லையா?
அவங்க உயிரோடவே இல்லடா.
கிடைத்தவற்றுக்கு நன்றி சொல்!
டேய் என்னடா சொல்ற என்று அதிர்ச்சியுடன் பாண்டியிடம் கேட்டான் வேலன்.
ஆமாண்டா, நானும் உன்னை மாதிரிதான் இருந்தேன். அது வேணும், இது வேணும்னு எல்லாத்துக்கும் சண்டை போடுவேன். என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் கட்டிட வேலை பார்க்குறவங்க அவங்க சக்திக்கும் மீறி என்ன ஒரு மெட்ரிக்குலேசன் ஸ்கூல்ல படிக்க வச்சாங்க. ஸ்கூல்ல டூர் கூட்டிட்டுப் போறாங்கன்னு ஐநூறு ரூபாய் பணம் கேட்டு அடம் புடிச்சேன். வீட்ல ரொம்ப கஷ்டம் முடியாதுப்பான்னு எவ்வளவு சொல்லியும் கேக்காம சண்டை போட்டுட்டு ஸ்கூலுக்கு வந்துட்டேன். மதியம் அப்பா கூட வேலை பார்க்கிறவங்க வந்து என்னை கூட்டிட்டுப் போனாங்க. புதுசா கட்டிக்கிட்டிருந்த கட்டிடம் இடிஞ்சி விழுந்து இறந்துபோன எட்டு பேர்ல எங்க அம்மா-அப்பாவும் இருந்தாங்க. அப்பாவோட சட்டை பையில இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து என்கிட்ட கொடுத்தவர், ஏதோ அவசர தேவையின்னு முதலாளிகிட்ட அப்பா அந்த பணத்தை கடன் வாங்கினதா சொன்னார். தன் பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து காட்டிய பாண்டி இன்னைக்கு இதுக்கு பணமதிப்பில்லாம இருக்கலாம். ஆனா என் அம்மா, அப்பாவோட மதிப்பை இது எப்பவும் எனக்கு உணர்த்திகிட்டே இருக்கு என்று அதை கண்களில் ஒற்றிக்கொண்டான். உயிரோட இருந்தப்ப அவங்க மதிப்பை உணரல. இப்ப அவங்க எனக்காக செஞ்ச அத்தனைக்கும் நன்றி சொல்லி கட்டிப் பிடிச்சு அழணும்னு தோணுது. ஆனா அவங்க என் கூட இல்லை என்று குலுங்கி அழுதான் பாண்டி.
தன் நண்பனுக்குள் இத்தனை சோகம் இருந்தது இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தோமே என்ற குற்ற உணர்ச்சி மேலிட, டேய் பாண்டி சாரிடா, இதெல்லாம் மனசுல வச்சுட்டு எப்படிடா உன்னால எப்பவும் சந்தோஷமா இருக்க முடியுது என்று வேலன் கேட்டான்.
அப்ப நான் ஐந்தாவது படிச்சிட்டு இருந்தேண்டா. யாருடைய துணையும் இல்லாம நிராதரவா இருந்தேன். ஆதரவற்றோர் இல்லத்துல ஆல்பர்ட்னு ஒரு சமூக சேவகர் சேர்த்துவிட்டு எனக்கு நிறைய நல்ல விஷயங்களை சொல்லி குடுத்தாரு. நல்லா படி, நல்ல வேலைக்கு போயிட்டா உன் கஷ்டமெல்லாம் மாறிடும். உன் கிட்ட இல்லாததுக்காக வருத்தப்படுறதுக்கு பதில் உன் கிட்ட இருக்குற எல்லாத்துக்கும் நன்றி சொல்லுன்னு சொன்னாரு. I AM SORRY, FORGIVE ME, I LOVE YOU, THANK YOU இந்த மந்திர வார்த்தைகள் நம்மை எப்பவும் மகிழ்ச்சியா வைச்சுக்க உதவும்னு சொன்னாரு. அதே மாதிரி இப்ப நான் அம்மா, அப்பா இல்லன்னு வருத்தப்படுறதில்ல எனக்கு நல்ல அம்மா, அப்பா கொஞ்ச நாளாவது கிடைச்சாங்களேன்னு நன்றி சொல்றேன். அதனால சந்தோஷமா இருக்கேன். நீயும் முயற்சி பண்ணிப் பாரு என்றான் பாண்டி.
அன்று மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிய வேலன் தன் அம்மாவை பார்த்துக் கொண்டே இருந்தான். டேய் வேலா என்னடா, என்னாச்சு என கேட்டார் அம்மா.
சாரிம்மா, காலைல நான் அப்படி பேசினதுக்கு மன்னிச்சுக்கோம்மா. எனக்காக நீ எவ்ளோ கஷ்டப்படுறேன்னு இப்பதான் புரியுது. I LOVE YOU அம்மா என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். என்ன நடக்கிறது என்று எதுவும் புரியாத அம்மா அவனை கட்டியணைத்து என் சாமி, ஏன்டா இப்படியெல்லாம் பேசுற என்றபடி அவன் நெற்றியில் முத்தமிட்டார்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர் டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com