யோக பலம் - 7 சுறுசுறுப்பாக இருக்க உதவும் திரிகோணாசனம்

யோக பலம் - 7 சுறுசுறுப்பாக இருக்க உதவும் திரிகோணாசனம்
Updated on
2 min read

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக, சோர்வின்றி வேலைகளை செய்ய உடல், மனம் இரண்டும் நமது கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். மனம் நினைப்பதை உடல் செய்யக் கூடிய அளவிற்கு நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்ற கேள்வியை நாம் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கால நிலையில் இருக்கிறோம்.

குழந்தைகள், பள்ளியில் இருந்து வந்ததுமே உற்சாகம் குறையாமல் இருக்கிறார்களா அல்லது சோர்ந்துபடுத்து விடுகிறார்களா என்பதைகவனிக்க வேண்டும். குழந்தைகள்நாள் முழுவதுமாக உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க திரிகோணாசனம் செய்ய சொல்லித் தரலாம்.

திரிகோணாசனம் செய்வது எப்படி?

பயிற்சியின் ஆரம்ப நிலையாக, கால்களை விரிப்பின் மேல் அகலமாக விரித்து நிற்க வேண்டும். முதுகுத்தண்டை வளைக்காமல், நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். அடுத்து இரண்டு கைகளையும் தோளுக்கு நேராய் பக்கவாட்டில் உயர்த்தி, உள்ளங்கைகளை தரையை பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது மூச்சை சாதாரண நிலையில் இழுத்து விடவேண்டும். பிறகு மூச்சை மெதுவாக விட்டவாறே இடது பக்கமாக இடுப்பை வளைத்தவாறு குனிந்து, இடது கையை, இடது காலின் கணுக்காலை ஒட்டினாற் போல் தரையில் வைக்க வேண்டும். வலது கையை வளைக்காமல், நேராக வைக்க வேண்டும். அடுத்து தலையைத் திருப்பி வலது கை விரல்களின் நுனியைப் பார்க்க வேண்டும்.

முடியுமானால் இந்த நிலையில் ஏழு முதல் பத்து எண்ணிக்கை வரை இருக்கலாம். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நேராக நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் விரித்தபடி பழைய நிலைக்கு வர வேண்டும்.

பிறகு மூச்சை விட்டுக் கொண்டே வலது கைப்பக்கம் இடுப்பை வளைத்துக் குனிந்து, வலது கைவிரல் நுனிகள், வலது காலின் கணுக்காலுக்கு ஒட்டினாற் போல் தரையில் படும்படியான நிலையில் வைக்க வேண்டும். இந்த நிலையிலும் பத்து எண்ணிக்கை வரை இருக்கலாம். பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து கைகளை விரித்து பழைய நிலைக்கு வர வேண்டும். இது போல் ஆறு தடவைகள் வரை செய்யலாம்.

அடுத்து செய்ய வேண்டியது என்ன?

கால்கள் இரண்டையும் அகலமாக வைத்து நிற்கவும். பின்னர் இரண்டு கைகளையும், தோளுக்கு நேராக பக்கவாட்டில் உயர்த்தி, உள்ளங்கைகளை தரையை பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, மூச்சை மெதுவாக விட்டவாறே குனிந்து, வலதுகையை மட்டும் கீழ் நோக்கிக் கொண்டுவந்து, இடது காலின்விரல்கள் மீது வலதுகை விரல்கள்படுமாறு வைக்க வேண்டும். அதேசமயம், இடது கையை நன்றாக மேலே உயர்த்தி நீட்டவும். குனிந்த நிலையில், முகத்தை இடது பக்கமாக மேல்நோக்கித் திருப்பி, இடது உள்ளங்கையை உற்றுப் பார்க்கவும்.

பின்னர், சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, வலது கையை மேலே உயர்த்தியபடி, உடலை நேராக வைத்து, இடது கையை கீழே இறக்க வேண்டும். இதேபோல், கைகளை வலது மற்றும் இடது என மாற்றி மாற்றி பத்து முறை வரை செய்யலாம்.

பலன்கள்

திரிகோணாசனம் செய்யும் போது, முதுகெலும்பு நன்றாகத் திரும்பி வளைவதால், நுரையீரல்கள் பலம் பெறும். உடல்முழுவதும் ரத்தம் பாய்வதால், அனைத்து உறுப்புகளும் பலம் பெற்று இளமையான தோற்றம் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. மேலும் இடுப்பு பலம் பெறும். கைகளை மேல்நோக்கித் திருப்பிப் பார்ப்பதால், கண்களுக்கு ரத்த ஓட்டம் கிடைத்து, பார்வை கூர்மையாகிறது. பார்வை கூர்மையாவதோடு, புத்தியும் கூர்மையடைவதால் சிந்திக்கும் ஆற்றல் வலுவடையும்.

பயிற்சி எங்களுடையது... முயற்சி உங்களுடையது... ஆரோக்கியம் நம்முடையது.

(யோகம் தொடரும்)

கட்டுரையாளர்: யோகா நிபுணர்

படங்கள்: எல்.சீனிவாசன்

தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in