

பள்ளியில் கற்ற ஒழுக்கத்தால் குடிமைப்பணி அதிகாரியானதாகக் கூறுகிறார், வி.இளஞ்செழியன். பொறியியல் பிரிவு மாணவர்களுக்காகத் தனியாக நடைபெறும் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றியடைந்தவர்.
இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி சர்விஸ்(ஐஒஎப்எஸ்) பெற்று பாதுகாப்புத் துறையில் உயர் அதிகாரியாகி உள்ளார்.
இவர், பவானியில் ஒலகடம் அருகில் உள்ள மொண்டிபாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை எம்.ஏ.வேலுசாமி பட்டதாரி விவசாயி, தாய் பாக்கியலட்சுமி. மணமான மூத்த சகோதரி வைஷ்ணவியும் இளஞ்செழியனுக்கு உள்ளார்.
அருகில் உள்ள கோபிசெட்டிபாளையத்தின் ஸ்ரீவித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் விடுதியில் தங்கியபடி எல்கேஜி முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி பெற்றுள்ளார். அடுத்து அந்தியூரிலுள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் பிளஸ் 2 முதல் குரூப் படித்து முடித்துள்ளார்.
தந்தையின் வழிகாட்டுதல்
பள்ளி நாட்களில் சராசரி மாணவராகவே இளஞ்செழியன் இருந்துள்ளார். அப்போது முதலே அவரை யூபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றிபெற வைக்கும் விருப்பம் தந்தை வேலுசாமிக்கு இருந்துள்ளது. தந்தையின் வழிகாட்டுதலில் 4-ஆம் வகுப்பு முதல் ஆங்கிலம், தமிழ் நாளேடுகளை இளஞ்செழியன் அன்றாடம் வாசித்து வந்துள்ளார்.
பிறகு, குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜியில் சிவில் எஞ்சினியரிங் பிரிவு பிடெக் முடித்துள்ளார். இங்கும் விடுதியில் தங்கி படித்த இளஞ்செழியனின் கல்வித்திறன் சற்று வளர்ந்து முதல் ஐந்து ரேங்க் பெறுபவராக மாறியுள்ளார்.
அப்போதிலிருந்தே யூபிஎஸ்சியை எழுதி வெல்லும் நோக்கமும் இளஞ்செழியன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. குமரகுரு கல்லூரியின் வளாகத் தேர்வில் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
இப்பணியிலிருந்தபடி படித்தவர், உயர்கல்விக்காக கேட் நுழைவுத் தேர்வையும் யூபிஎஸ்சியின் பொறியியல் பிரிவினருக்கான முதல்நிலை தேர்வையும் எழுதியுள்ளார். இந்த இரண்டிலும் பெற்ற வெற்றியால் இளஞ்செழியனுக்கு, காரக்பூர் ஐஐடியில் எம்.டெக்., ஸ்ட்ரெக்சுரல் எஞ்சினியரிங் 2012-ல் கிடைத்துள்ளது. எம்.டெக்., பயின்றபடி, யூபிஎஸ்சிக்கான இரண்டாம்நிலை மெயின்ஸ் தேர்வையும் எழுதி உள்ளார்.
வேலையில் லயித்த மனம்
இதிலும் வெற்றி பெறவே நேர்முகத்தேர்வையும் எதிர்கொண்டார் இளஞ்செழியன். இத்தேர்விலும், முதல் முயற்சியிலேயே வெற்றி அடைந்தவர் 2014 பேட்ச் அதிகாரியாகி விட்டார். அதேசமயம், காரக்பூரின் ஐஐடியில் எம்.டெக்.-கையும் முடித்தார். இவருக்கு, இந்திய பாதுகாப்புத் துறையில் ஐஓஎப்எஸ் எனும் இந்திய ராணுவ தொழிற்சாலை பணி கிடைத்துள்ளது.
இப்பணி நாட்டில் சுமார் 200 வருடங்களுக்கு முன் அறிமுகமானது. இது, பொறியியல் பிரிவு மாணவர்களுக்காக எனத் தனியாக நடைபெறும் குடிமைப்பணி தேர்வு.
இதன் பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய மூன்றும் தனியாக நடத்தப்படுகிறது. இந்த மூன்றில் மெயின்ஸும், நேர்முகத்தேர்வும் மெக்கானிக்கல், சிவில் எஞ்சினியரிங், எலக்ரிக்கல், எலக்ரானிக்ஸ் உள்ளிட்ட பொறியியல் பாடங்களின் பிரிவு ஒன்றின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
தனது வெற்றி குறித்து இளஞ்செழியன் கூறும்போது, “பள்ளி நாட்களில் சுமாராக படித்தாலும் கூடைப்பந்து விளையாட்டு வீரனாக இருந்தேன். பள்ளியில் நடைபெற்று வந்த கல்வி தொடர்புடைய இதர செயல்பாடுகள் சார்ந்த குழுக்களில் உறுப்பினராக இருந்தேன். அப்போது கற்ற ஒழுக்கம்தான் என்னை குடிமைப் பணி தேர்வில் வெற்றியடைய வைத்தது” என்றார்.
ஐஓஎப்எஸ் பணியில் இந்தியாவில் உள்ள ராணுவத்தளவாடங்கள், தொழிற்சாலைகளில் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகங்களை பார்க்க வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் ஆகியவற்றில் உள்ளதை போல் மாநிலப் பிரிவுகள் இப்பணியில் கிடையாது. இச்சூழலில் திருச்சியில் உள்ள கனரக கலப்பு உலோக ஊடுருவி தொழிற்சாலையில் 2015-ல் உதவி பணி மேலாளராக முதன்முதலில் இளஞ்செழியன் அமர்த்தப்பட்டார்.
பிறகு பணி மேலாளர் என பணி உயர்வும் கிடைத்துள்ளது. இதுபோல், இந்திய ராணுவத்தின் பலவேறு வகை தொழிற்சாலைகள் நாடு முழுவதிலும் 41 உள்ளன. திருச்சியில் ஏழு வருடங்கள் பணியாற்றிய இளஞ்செழியனுக்கு சமீபத்தில் கிடைத்த அயல்பணி அனுமதியில் அவர், மத்திய நிதித்துறையின் உளவுப்பிரிவின் துணை இயக்குநராக டெல்லியில் பணியாற்றுகிறார். சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் ராணுவத் தொழிற்சாலை பணிக்கு வர வேண்டி இருக்கும்.
தொடர்ந்து தம் வெற்றியை பற்றி பேசிய இளஞ்செழியன், “காரக்பூரின் ஐஐடியில் எம்.டெக். பெறவே மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.
இதனுடன் சேர்த்து குடிமைப்பணியின் தேர்வையும் எழுதி ஐஓஎப்எஸ் பெற, எனது தந்தை அளித்த ஊக்குவிப்பு காரணமானது. இப்பணியிலேயே எனக்கு மனத்திருப்தி கிடைத்ததால் ஐஏஎஸ் உள்ளிட்ட வேறு பணி பெற குடிமைப்பணி எழுதவில்லை” என்று விடைபெற்றார் இளஞ்செழியன்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in