நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 4: பள்ளி வகுப்பிற்கு முன் காய்கறி, பால் விற்றவர் இன்று ‘உபி சிங்கம் ’

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 4: பள்ளி வகுப்பிற்கு முன் காய்கறி, பால் விற்றவர் இன்று ‘உபி சிங்கம் ’
Updated on
2 min read

அன்றாடம் பள்ளி வகுப்பிற்கு செல்லும் முன் காய்கறி, பால் விற்றவர் இன்று ‘உபி சிங்கம்’ என்ற பெயரெடுத்துள்ளார். அவர்தான் ஜி.முனிராஜ்.ஐபிஎஸ். கிராமவாசியாக இருந்தவர் பள்ளிக் காலம் முதல் காட்டிய உழைப்பு அவரை உத்தரப்பிரதேசத்தில் உயர் பதவியில் சிம்மாசனமிட்டு அமர வைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவை சேர்ந்த அக்ரஹார பாப்பாரப்பட்டியில் பிறந்து வளர்ந்தவர் ஜி.முனிராஜ். தந்தை கோபு, தாய் சாந்தா ஆகியோருடன் முனிராஜின் உடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி, இரு சகோதரிகள். இவர்களுடன் பாட்டி, தாத்தா மற்றும் அத்தையும் உடன் இருந்தனர். ஓலைக்குடிசையில் வாழ்ந்த குடும்பத்தினர், தங்கள் கிராமத்தின் வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் பிழைத்தனர். 3-ம் வகுப்பு வரை வீட்டில் மின்சாரம் இல்லாமல் வளர்ந்தவர் முனிராஜ்.

கடும் உழைப்பு தந்த பலன்

தனது வீட்டின் அருகில் உள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார் முனிராஜ். தொடர்ந்து, பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்தார். இவ்விரண்டு பள்ளிகளிலும், முதல் மூன்று ரேங்குகள் பெறும் மாணவராக இருந்தார்.

அவர் 10-ம் வகுப்பு படிக்கும் வரை அப்போது மொத்தவிலை சந்தையில் வாங்கிய பழங்கள், காய்கறிகளை கூடையில் நிரப்பி தலையில் சுமந்து தெருக்களில் விற்றுள்ளார். வீட்டில் வளர்த்த மாடுகளிலிருந்து பால் கறந்து வீடுகளிலும், தேநீர் கடைகளிலும் விநியோகம் செய்து வந்தார்.

இவ்விரு பணிகளையும், அன்றாடம் பள்ளி வகுப்பிற்கு கிளம்பும் முன்னதாக விடியற்காலையில் செய்து முடித்திருக்கிறார். இதனால், அவரை அக்கம்பக்கம் வீட்டாரும், வகுப்பு ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

பிளஸ் 2-வை திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்துள்ளார். முதல் குரூப் தேர்ந்தெடுத்ததால் மதிப்பெண் குவிக்கும் மாணவர்கள் மத்தியில் முனிராஜால் சராசரியாகத்தான் படிக்க முடிந்தது.

எனினும், வேளாண் கல்விக்கான நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் விவசாயிகளுக்கான ஒதுக்கீடு உதவியது. இதன் பலனாக கோயம்புத்தூர் அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். இந்த கல்விநிலையம்தான் முனிராஜின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. குடிமைப்பணிக்கான தேர்வின் வெற்றியாளர்களுக்குப் பெயர் போனது கோவை வேளாண் பல்கலைக்கழகம். இங்குதான், அவர் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் பெறக் குறி வைத்து இலக்கை அடைந்தார்.

பொருளாதாரத் தடைகளைத் தகர்ப்போம்!

தற்போது காஜியாபாத் மாவட்ட காவல்துறை மூத்த கண்காணிப்பாளராக (எஸ்எஸ்பி) பணியாற்றி வரும் ஜி.முனிராஜ்.ஐபிஎஸ் குறித்து கூறும்போது, “பள்ளி நாட்களில் மருத்துவக்கல்விக்கான கனவு இருந்தது. போதுமான மதிப்பெண்கள் இல்லை என்பதால் கவலைப்படாமல் அடுத்ததாகக் கிடைத்த வேளாண் கல்வியை படித்தேன்.

தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கிலத்தில் படிக்க மிகவும் கடினமாக இருந்தது. விடாப்பிடியாகப் போட்டி மனப்பான்மையுடன் படித்ததில் வெற்றி கிடைத்தது. யூபிஎஸ்சி-க்கான முயற்சியின்போது பொருளாதாரச் சிக்கல் இருந்தது. இதை சமாளிக்க இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சர் ரிசர்ச்சின் தேசியத் தேர்வு எழுதி ஜேஆர்எப் உதவித்தொகை பெற்றேன்” என்கிறார்.

இந்த தேர்வில் ஏழாவது ரேங்க் பெற்றதால், ஹரியானாவின் சவுத்ரிசரண்சிங் வேளாண் பல்கலைக்கழகத்தில் முனிராஜுக்கு முதுநிலை கிடைத்தது. இந்த பட்டத்தையும் முடித்த பிறகு யூபிஎஸ்சி-க்காக ஐந்து முறை முயன்றுள்ளார். 2006-ல் முதல்நிலை தேர்வை மட்டும் வென்றவருக்கு 2009 இறுதி முயற்சியில் ஐபிஎஸ் கிடைத்தது.

இடையில் தமிழக அரசின் வேளாண் அதிகாரி மற்றும் சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷனுக்கான தேர்வுகளையும் எழுதி வெற்றி கிட்டியது. இதுவன்றி, ஐஎப்எஸ் எனும் இந்திய வனப் பணிக்கான தேர்விலும் 40 ஆவது ரேங்குடன் வெற்றி கிடைத்தது. அதேசமயம் தான் அதிகம் நேசித்த ஐபிஎஸ் வெற்றியும் கிடைக்கவே அதை தேர்வு செய்தார் முனிராஜ்.

குற்றங்களை களையும் சிங்கம்!

டெல்லியை அடுத்து குற்றங்கள் அதிகம் நிகழக்கூடிய மாவட்டமாகக் கருதப்படுவது காஜியாபாத். இதை கட்டுப்படுத்த தவறிய குற்றச்சாட்டுக்காக அதுவரை எஸ்எஸ்பியாக இருந்த பவன்குமார், கடந்த மே மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து அங்கு இடைக்காலப் பொறுப்பு எஸ்எஸ்பியாக முனிராஜ் நியமிக்கப்பட்டார்.

தாம் செய்த அதிரடி நடவடிக்கைகளால் ‘உபி சிங்கம்’ என இவர் அழைக்கப்படுகிறார். இதை காஜியாபாத்திலும் தொடர்ந்ததால் நிரந்தர எஸ்எஸ்பியாக முனிராஜை உபி அரசு அமர்த்திவிட்டது.

உபியில் காஜியாபாத்திற்கு முன்பாக தாம் பணியாற்றிய சண்டவுலி, புலந்த்ஷெஹர், பரேலி மற்றும் அலிகர் மாவட்டங்களிலும் பல என்கவுண்டர்களை நடத்தினார். மதநல்லிணக்கத்தை குலைக்க முயன்ற குற்றத்துக்காக கட்சி பேதமின்றி வழக்குகளையும் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

கோவையில் கொள்ளைபோன 44 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் மீட்டு தமிழகப் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் வடமாநிலக் கொள்ளையர்கள் நடத்திய பல வழக்குகளிலும் குற்றவாளிகளை கைது செய்ய உதவிவரும் முனிராஜ், தானொரு கிராமத்துத் தமிழர் என்கிறார் பெருமிதத்துடன்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in