

கல்லூரியில் படிக்கும் அண்ணனிடம், “பள்ளிக்கூடத்தில், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பேச சொல்லிருக்காங்க. என்ன பேசலாம்னு சொல்லுங்க அண்ணா” என்று கேட்டாள் தாரகை. சில கட்டுரைகளை வாசித்த அண் ணன், “எச்.ஐ.வி என்பது ஒரு வைரஸ்.
ரத்தம், தாய்ப்பால், சுத்தப்படுத்தாத ஊசியைப் பயன்படுத்துவது, மற்றும் பாதுகாப்பில்லாத உடலுறவு வழியாக மற்றவருக்குப் பரவும். நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வெள்ளை உயிரணுக்களை செயல்படவிடாமல் தடுக்கும்.
எச்.ஐ.வி என்பது ஆரம்ப நிலை. அதன் உச்சநிலை எய்ட்ஸ். இருமுவதால், அருகில் அமர்வதால், கை கொடுப்பதால் பரவாது” என்றார். அதுதொடர்பாக ஒரு கட்டுரையை வாசிக்கவும் சொன்னார். தாரகையும் படித்தார்.
வலுவற்ற ‘அரசர்’அம்மா டாஃப்னி
1989-ல் தென் ஆப்பிரிக்காவில் கோசி பிறந்தான். சூலு மொழியில் கோசி என்றால் அரசர் என்று அர்த்தம். ஆனால், அரசர் போல் அல்லாமல், பிறந்தது முதலே உடல் எடை குறைவாகவும், வலுவில்லாமலும் இருந் தான் கோசி.
மருத்துவம் பார்க்க அவரை நகரத்துக்கு அழைத்துச் சென்றார் அம்மா டாஃப்னி. வாடகை வீட்டில் குடியேறினார். கூலி வேலைக்குச் சென்றார். ஒருநாள் டாஃப்னிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது. அவர் வழியாக கோசிக்கு பரவியது தெரியவந்தது.
டாஃப்னிக்கு எச்.ஐ.வி. இருந்ததால் வேலையில் இருந்தும், வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். மகனை அழைத்துக்கொண்டு, ஜோகன்னஸ்பர்க் சென்றார். எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ஆண்கள் விடுதியில் மகனைச் சேர்த்தார். அவ்விடுதியை ஆரம்பித்தவர்களுள் ஒருவரான கெய்ல் ஜான்சன் அன்பும் ஆதரவும் கோசிக்கு கிடைத்தது.
ஆனால், நோயின் தீவிரத்தால் 1997-ல் அம்மா இறந்தார். 8 வயதில் தனிமையில் தவித்த கோசியை கெய்ல் தத்தெடுத்தார். வளர்ப்பு தாயானார். பள்ளியில் சேர்க்க மகனை அழைத்துச் சென்றார். கோசியை சேர்த்துக்கொள்ள ஆசிரியர்கள் மறுத்தார்கள். மற்ற மாணவர்களின் பெற்றோரும் எதிர்த்தனர்.
தன் மகனுக்காகவும், தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் எச். ஐ.வி. பாதித்த ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்காகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் கெய்ல். “குழந்தைகள் பள்ளியில் சேர்வதை, மருத்துவ காரணங்களைச் சொல்லி தடுக்கக்கூடாது” என்று தென் ஆப்பிரிக்கா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சுடரேந்தும் கைகள்
சமூகத்தின் பார்வையை மாற்ற கோசி தொடர்ந்து போராடினான். ‘எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளைப் பார்த்து பயப்படாதீர்கள்’ என்று ஆசிரி யர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினான். அம்மாவின் அவஸ்தையை பார்த்திருந்ததால், எய்ட்ஸ் பாதித்த தாய்மார்களும், குழந்தைகளும் ஒரே இடத்தில் வாழ கெய்லுடன் சேர்ந்து ‘கோசி காப்பகம்’ (Nkosi’s Haven) உருவாக்கினான்.
2000-ம் ஆண்டு டர்பன் நகரில் நடைபெற்ற சர்வதேச 13-வது எய்ட்ஸ் மாநாட்டில் உரையாற்ற கோசியை அழைத்தார்கள். அந்த உரையில், “எங்கள் மீது அக்கறை கொள்ளுங்கள், எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் அனைவரும் மனிதர்கள். எங்களுக்கும் கைகள் உண்டு. எங்களுக்கும் கால்கள் உண்டு.
எங்களால் நடக்க முடியும், பேச முடியும். எல்லாரையும் போலவே எங்களுக்கும் தேவைகள் உண்டு. எங்களைப் பார்த்து பயப்படாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றுதான்” என்று பேசினான். 12 வயதில் கோசி இறந்தான். 2005-ல் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது கோசிக்கு வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் நபர் கோசி. இப்போதும், நூற்றுக்கணக்கான தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ‘கோசி காப்பகம்’ புகலிடமாக விளங்குகிறது.
கட்டுரையாளர்: எழுத்தாளர்,
மொழி பெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com