

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு ஓடியாடும் சூழலை நாம் உருவாக்கித் தரவில்லை. உலகம் சுருங்கி அவர்களின் உள்ளங்கையில் அடைக்கலமாகி விட்டது.பள்ளி… பள்ளி விட்டால் டியூஷன் என அவர்களின் வாழ்வியல் முறையில் நிறைய மாற்றங்கள்.
உடல் பருமனால், கை கால்கள் வலுவின்றி சிறிது தூரம் நடந்தாலே ஆயாசம், கால்கள் வலிக்கிறது என்று பெரும்பாலான குழந்தைகள் சோர்ந்து விடுவதை பார்க்க முடிகிறது.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது வீரபத்திராசனம். இதை தினமும் குழந்தைகளை செய்ய வைப்பதால், அவர்களது தொடை, குதிக்கால், கைகள், முழங்கால், இடுப்பு, முதுகு என அனைத்து பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டம் பரவி வலுப் பெறச்செய்யலாம். இந்த ஆசனத்தை தொடர்ந்து, செய்து வர, உச்சி முதல் உள்ளங்கால் வரை பயன்பெறலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வீரபத்திராசனம் செய்வது எப்படி?
வீரபத்திராசனத்தின் முதல் நிலையில், கால்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். பின் இடது காலை முன் நோக்கி சற்று பெரிய அடியாக வைக்க வேண்டும். வலது கால் பின்னால் இருக்க வேண்டும். வலது கால் பாதத்தை 45 டிகிரிகோணத்தில் திருப்ப வேண்டும்.
மூச்சை மெதுவாக இழுத்தபடி, இடது கால் முட்டியை முன்னோக்கி மடக்கியவாறு இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்தவாறு தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். உங்கள் இடது கால் முழங்கால் மற்றும் கணுக்கால் ஒரு நேர் கோட்டில் இருப்பது அவசியம். முதுகை நன்றாக வளைத்து, தாடையை உயர்த்தி, தலையை மேல் நோக்கி உயர்த்தி கைகளைப் பார்க்க வேண்டும். இடுப்பை மெதுவாகக் கீழே இறக்க வேண்டும்.
பலன்கள் பல
மெதுவாக பழைய நிலைக்குத் திரும்பி, அடுத்ததாக வலது காலை முன்வைத்து ஆசனத்தை தொடரலாம். இந்த ஆசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
# கீழ் முதுகு, கைகள் மற்றும் கால்களை வலுப்படுத்தும். சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவும். உடலை உறுதிப்
படுத்தவும், மனதை சமன்படுத்தவும் உதவும். தோள்களில் இருக்கும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
# நெஞ்சுப் பகுதியை வலுப்படுத்தி, நுரை
யீரலுக்கு நல்ல ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதால், சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
# முதுகெலும்பை வலுப்படுத்துவதால், குழந்தைகள், தொடர்ச்சியாக சோர்வில்லாமல் உட்காரவும், படிக்கவும், எழுதவும் உதவும்.
பயிற்சி எங்களுடையது... முயற்சி உங்களுடையது... ஆரோக்கியம் நம்முடையது.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்
யோகா செய்பவர்:
அம்ருத நாராயணன்
படங்கள்: எல்.சீனிவாசன்
தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்