

பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்குவதே குடிமைப்பணி பெற போதுமான தகுதி என்கிறார் தூர்தர்ஷனின் சமூகஊடகப் பிரிவின் துணை இயக்குநரான ஜெ.விஜயலஷ்மி.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜெயக்குமார்-காவேரி தம்பதியின் மகள் விஜயலஷ்மி. இவர் 10 -வது வரை போளூரின் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்து, பிளஸ் 2-வை திருவண்ணாமலையில் உள்ள மவுண்ட்ஸ் அண்டு ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் முடித்து, அருணை பொறியியல் கல்லூரியில் பிடெக் பயோடெக்னாலஜி பயின்றார். பள்ளியில் படித்த காலத்தில் திரைப்படங்களில் வரும் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பார்த்து அப்பணியில் அமரும் ஆசை உருவாகி உள்ளது. ஆனால், மகளை வேலைக்கு அனுப்பும் எண்ணம் விஜயலஷ்மியின் குடும்பத்தாருக்கு இல்லை.
மனப்பாடம் செய்வது தவறு
எனினும், பிடெக் முடித்த பிறகு விஜயலஷ்மி மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியில் நுழைவுத்தேர்வின் மூலம் இணைந்துள்ளார். இதன் பிறகுதான் குடிமைப்பணி தேர்வுக்கான முழு தகவல்களையும் அறிந்துள்ளார். இதற்காக மகளிர் விடுதியில் தங்கிப் படித்துள்ளார்.
2012-ல் முதல்கட்டத் தேர்வை முதன் முதலில் எழுதிய அவரால் தேர்ச்சி அடைய முடியவில்லை. பிறகு இத்தேர்வில், 2013-ல் வென்று மெயின் எனும் இரண்டாம்நிலை தேர்வு எழுதினார்.
ஆனால், சுமார் 10 மதிப்பெண்களில் தோல்வி அடைந்தார். 2014-ல் நேர்முகத்தேர்வு வரை சென்று திரும்ப வேண்டியதாயிற்று. விடா முயற்சியோடு ஐந்தாவது முறை 2016-ல் எழுதி வெற்றி பெற்று ஐஐஎஸ் எனும் இந்திய தகவல் பணி பெற்றார். தற்போது மத்திய அரசின் தூர்தர்ஷன் கேந்திராவில் துணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
இது குறித்து ஐஐஎஸ் அதிகாரியான விஜயலஷ்மி கூறும்போது, “எல்கேஜி முதல் ஆங்கில மீடியத்தில் பயின்ற நான் பள்ளிக் காலம் முதல் அனைத்து பாடங்களிலும் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்களை எளிதில் குவித்தேன். இந்த திறன், எட்டாம் வகுப்புவரை மனப்பாடம் செய்யும் பலனால் கிடைத்தது. இது தவறான முறை என அறிந்து பிறகு படிப்படியாக புரிந்து படிக்க ஆரம்பித்தேன். பள்ளி அறிவியல் பாடம் தொடர்பான பிராக்ட்டிகல் வகுப்புகளில் கவனம் செலுத்திய பிறகே புரிந்து படிக்கும் வழக்கம் வந்தது” என்றார்.
தோல்வி கண்டு அஞ்சாதே!
குடிமைப்பணி தேர்வுக்காக தனியாகப் படித்தாலும், அதை நினைவுகூர்வதற்கு குழுவாக அமர்ந்து ஆலோசனை செய்வது அவசியம். இதை உணர்ந்த விஜயலஷ்மி, அதுபோன்ற பாடங்களை தனது அறிவிற்கு இணையான நண்பர்களுடன் சேர்ந்து படித்துள்ளார்.
பள்ளி காலத்தில் இருந்தே முதல் ஐந்து இடங்கள் பெறும் மாணவியாக இருந்த விஜயலஷ்மி குடிமைப்பணி தேர்வை சவாலாக எடுத்துக் கொண்டார். தொடக்கத்தில் அடுத்தடுத்து நான்கு முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால் அவர் துவண்டு போகவில்லை. மாறாக தனது சவாலை எதிர்கொள்வதில் அதிக தீவிரம் காட்டியது வெற்றிக்கனியை பறிக்க உதவியுள்ளது.
இது குறித்து விஜயலஷ்மி பகிர்ந்தபோது, “குடிமைப்பணி தேர்வின் முதல் முயற்சியில் பெற்ற தோல்வியை அலசினேன். அப்போது இவ்வளவு எளிதா, இதைப்போய் என்னால் செய்ய முடியாமல் போனதே எனத் தோன்றியது. அடுத்தடுத்த முயற்சிகளில் கூடுதல் ஆர்வத்தோடு தயாரானேன். இதுபோன்ற தேர்வுகளுக்காக நாம் நன்கு படித்திருந்தாலும் அதை, குறிப்பிட்ட சமயத்தில் வெளிப்படுத்தி எழுதுவதே முக்கியம். இதை உணர்ந்ததும் வெற்றி கைகூடியது” என்றார்.
நாளேடு வாசிப்பு முக்கியம்
இந்த தேர்வை எழுத பொது மற்றும் சமூக அறிவும் முக்கியம். இதை பெற பெரும்பாலான மாணவர்களை போல் விஜயலஷ்மியும், ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ தமிழ் நாளேடுகளை வாசித்துவந்திருக்கிறார். இதற்கு அவை எந்த ஒரு பிரிவிற்கும் ஆதரவின்றி நடுநிலையாக செய்தி தருவதே காரணம் எனக் குறிப்பிடுகிறார் விஜயலஷ்மி.
யூபிஎஸ்சி தேர்வு எழுதும்மாணவர்களுக்கு வழக்கமாக யாராவது ஒருவர் வழிகாட்டியாக இருப்பது உண்டு.ஆனால், தனது குடும்பத்தில் படித்தவர்களும், அதிக அனுபவம் கொண்டவர்களும் இல்லை என்பதால் அத்தகைய வழிகாட்டிகள் இவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் விஜயலஷ்மிக்கு வழிகாட்டி இல்லாத போதும் பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கியதனாலேயே குடிமைப்பணியை பெற்றுள்ளார்.
பள்ளியில் கற்றுக்கொண்ட இந்தி பாடங்கள், விஜயலஷ்மி தூர்தர்ஷன் பணிக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது. இந்தி அதிகம் பேசும் டெல்லியில் பணியாற்றியவருக்குத் தனது பள்ளியில் கற்ற இந்தி மொழி, பலன் அளித்துள்ளது.
இதுபோல், பள்ளிக்கல்வியில் வாய்ப்பு கிடைக்கும்போது கற்கும் எந்த ஒரு மொழியும் எதிர்காலத்தில் பலன்தரக் கூடியதாகவே இருக்கும். ஐஐஎஸ் பெற்ற பின்பும் ஐஏஎஸ் பெறுவதற்காக தொடர்ந்து முயன்றிருக்கிறார். எனினும், ஐஐஎஸ் பணி மிகவும் பிடித்துப் போனதால், அடுத்தடுத்த முயற்சிகளை கைவிட்டு ஐஐஎஸ் பணியை உற்சாகமாக செய்து வருகிறார்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in